Home>>மன்னார்குடி>>இருள்நீக்கி கிராமத்தில் உள்ள ஸ்ரீ மீனாட்சி மீன்குஞ்சு பண்ணை ஓர் பார்வை
மன்னார்குடிவேலைவாய்ப்பு

இருள்நீக்கி கிராமத்தில் உள்ள ஸ்ரீ மீனாட்சி மீன்குஞ்சு பண்ணை ஓர் பார்வை

மன்னார்குடி அருகில், இருள்நீக்கி கிராமத்தில் உள்ள ஸ்ரீ மீனாட்சி மீன்குஞ்சு பண்ணை உரிமையாளர் திரு.சுப்பிரமணியன் அவர்களுடன் ஒரு உரையாடல் …


நீங்கள் எப்பொழுது இந்த மீன் பண்ணையை துவங்கினீர்கள் மற்றும் இந்த தொழில் பற்றி கூறுங்கள் சகோ?

1989ஆம் ஆண்டு இளங்கலை வணிகவியல் நிறைவு செய்தப்பின்னர் 1990ஆம் ஆண்டு இந்த மீன்குஞ்சு பண்ணையை சிறிய அளவில் துவங்கினேன்.


தங்கள் பண்ணையில் எந்த மாதிரியான மீன்களை வளர்த்து வருகிறீர்கள்?

கூட்டு மீன் வளர்ப்பு முறையில் கட்டலா, ரோகு, மிருகால் போன்ற மீன்களை வளர்த்து வருகிறோம்.

மேல் மட்டம் (கட்டலா), இடை மட்டம் (ரோகு), கடை மட்டத்தில் (மிருகால்) வளரும்.


இன்றைய தொழிற்நுட்ப வளர்ச்சியில் நாம் நிறைய தகவல்களை எளிதாக வீட்டில் இருந்தவாறே பெறலாம். ஆனால் அன்றைய தினம் நீங்கள் இந்த மீன்பண்ணை தொழிலுக்கு நீங்கள் வர எது உந்துதலாக இருந்தது?

என் பெரியப்பாவின் பையன் குஞ்சிதபாதம் அவர்கள் மீன் வளத்துறை (Fish Farmer Development Agency) வேலை பார்த்தார். அவரின் வழிக்காட்டுதல்படி தான் நான் இந்த தொழிலுக்கு வந்தேன்.

அந்த காலத்தில் ஒருங்கிணைந்த தஞ்சையில் 3 பண்ணை மட்டுமே இருந்தது. அப்போது திருவாரூர் மாவட்டத்தில் நான் தான் முதல் முறையாக இதை துவங்கினேன்.

மீன் வளர்ப்பு என்பது உழவு போன்று செய்ய வேண்டிய தொழில் தான். மழை இல்லாத காலத்தில் தண்ணீர் பிரச்சனை உண்டு.

1990க்கும் முன்னர் மீன் குஞ்சுகளை முன்பதிவு செய்தே வாங்க வேண்டும். இதனால் பிரச்சனைகள் இருந்தது.


சந்தைப்படுத்தல் பற்றிய தங்கள் கருத்து?

சந்தைப்படுத்தலில் எந்த பிரச்சனையும் இல்லை, லாபத்தில் மட்டுமே கொஞ்சம் குறையும். எவ்வளவு எண்ணிக்கை இருந்தாலும் விற்றுவிட இயலும்.

நீர் இல்லாத காலத்தில் பாதுகாத்து மீன்களை விற்றால், அந்த காலத்தில் கொஞ்சம் கூடுதலாக இலாபம் கிடைக்கும்.

ஜூன் முதல் டிசம்பர் வரை மீன் குஞ்சு விற்பனை.
ஜனவரி முதல் மே மாதம் வரை மீன் விற்பனை.

வருடத்தில் ஒரு மாதம் அதை தூய்மைப்படுத்தும் பணிக்காக ஒதுக்கிவிடுவோம்.


பண்ணையில் மீன்களுக்கு வழங்கப்படும் உணவுகள் பற்றி கூறுங்கள்?

இன்றைக்கான சந்தையில் மீனிற்கு தினசரி கொடுக்கப்படும் உணவான தவிடு ஒரு கிலோ ரூ.14, 15 என்று வருகிறது. மற்றும் கடலை புண்ணாக்கும் மீன் உணவாக தருகிறோம்.

மற்றும் மிதவை தீவனம், மூழ்கும் தீவனம் தற்பொழுது பயன்படுத்துகிறோம்.

தீவன செலவு குறைக்க காய்கறி கழிவுகளை பயன்படுத்தி கொள்ளலாம். விலை குறைவான அரிசிகளை வேக வைத்து கொடுக்கலாம்.


தங்கள் பண்ணைக்கே நேரடியாக வந்து மீன்களை வாங்கி செல்லலாமா?

தாராளமாக வாங்கி செல்லலாம். துவக்கத்தில் கூடை வியாபாரிகள் வந்து வாங்கி சென்றார்கள். சுற்றி உள்ள ஊர்களில் உள்ள மீன்சந்தைகளுக்கு கொடுத்து வருகிறோம்.


தங்கள் தொழிலை மேலும் விரிவுப்படுத்த திட்டம் உள்ளதா?

தற்பொழுது ஏரி வாவல், கொடுவா மீன் வளர்க்கிறோம், இவைகளை புதிய தொழிற்நுட்ப வசதியுடன் விரிவுப்படுத்தி செய்ய திட்டம் உள்ளது.

ஆனால் உயிர் மீன் தொடர்பான தொழில் என்பதால் இரண்டு இடங்களில் செய்வது கடினம், எனவே கிளைகள் உருவாக்க எண்ணமில்லை.


மீன் வளர்ப்பு பற்றி அறிந்துக்கொள்ள தற்பொழுது உள்ள வாய்ப்புகள் பற்றி கூறுங்கள்?

ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் மீன் வளர்ப்பிற்கு என்று நாகப்பட்டினத்தில் ஒரு மீன்வள பல்கலைக்கழகம் துவங்கினார்கள். அதில் மீன் வளர்ப்பிற்கான என படிப்பு வந்துள்ளது.

FFDA, மீன்வள பல்கலைக்கழகம் போன்ற வற்றுடன் இணைத்து நம் பண்ணையில் பயிற்சியை 4 ஆண்டுகள் முன் கொடுத்துள்ளோம்.

ஓரடி அம்பலம் (தலைஞாயிறு) பகுதியில் இதற்கென ஒரு கல்லூரி ஆரம்பித்துள்ளார்கள்.

FFDA என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உள்ளது, பயிற்சி வேண்டும் என்றால் அவர்களிடம் பதிவு செய்து பெறலாம்.


இது தொடர்பான படிப்பை நிறைவு செய்த உடனே எந்த மாதிரியான வேலைவாய்ப்புகள் உள்ளது?

அரசு துறையில் இதற்கென நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளது. இல்லையென்றால் அந்த கல்வியை கொண்டு சுயதொழில் துவங்கலாம். அல்லது இந்த தொழிலில் ஏற்கனவே உள்ள தகவல் தொழிற்நுட்பம் தெரியாதவர்களுடன் இணைந்து செயல்படலாம்.


இந்த தொழிலில் தங்களுக்கு ஏற்படும் லாபம் கடந்து எப்படியான மகிழ்வை தருகிறது?

உயிர் மீன்களுடன் பழகும் பொழுது மனதிற்கு ஒரு நிம்மதி ஏற்படும் மற்றும் தானாகவே நம் ஆர்வம் பெருகும்.

சந்தையில் உயிர்மீன்கள் வாங்க மக்கள் விரும்புகிறார்கள். ஆக்சிசன் வசதியோடு சந்தைகளுக்கு வழங்குகிறோம். இதனால் உயிருடன் மீன்களை விற்பனை செய்ய பங்களிக்கிறோம்.


நுகர்வோர்கள் மீன்களை வாங்கும் பொழுது எப்படி நல்ல மீன்களை தேர்வு செய்வது?

பதப்படுத்திய மீன்களின் சிலுவாய்யை தூக்கி பார்த்தால் சிவப்பாக இருக்க வேண்டும். அதுவே நல்ல மீன்கள். வெள்ளையாக இருந்தால் தவிர்த்து விடவும்.


மீன் வளர்ப்பிற்கென மீன் குஞ்சுகளை வாங்கும் பொழுது எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்?

மீன் குஞ்சுகள் வளர்ப்பதற்கு வாங்கும் பொழுது மீன் குஞ்சுகளின் கண்கள் பிரகாசமாக இருக்க வேண்டும், வயிற்றுப்பகுதி இறக்கமாக இருக்க வேண்டும், தலை வீங்கி இருக்க இருக்கக்கூடாது, இருப்பிடத்தில் சுறுசுறுப்பாக மீன்முஞ்சுகள் இருக்க வேண்டும். இதுவே குஞ்சுகளை வாங்க உக்திகளாக கையாளலாம்.


மீன் உணவை எந்த வயதினர் உண்ணலாம்?
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். மீன் உணவு என்பது அனைத்து வயதினருக்கும் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ள கூடியது, மற்றும் செரிமான திறன் அதிகம் உள்ளது.


பேட்டியை எடுக்க உதவி செய்தவர்:
– இருளை. இரமேசு

Leave a Reply