கி. எல்லாளன், வாலாந்தரவை அஞ்சல்,
இராமநாதபுரம் மாவட்டம்
(2051 ஆனி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)
21 ஆம் நூற்றாண்டின் இந்த நவீன நகர்தலுக்கு நடுவேயும் இன்னமும் நூறு வருடங்களுக்குப் பின்தங்கிய அதே கட்டமைப்போடு தான் இருந்தது அந்த கிராமம். நூறு வீடுகள் கூட இருக்குமா என்று தெரியாது அதற்குள்ளாகவேதான் இருக்கும். ஊருக்குள் இருக்கும் ஒரே ஒரு கண்மாய்தான் அந்த ஊரில் வசிக்கும் அனைவருக்கும் ஜீவாதார மூலம். மேலும் அந்தக் கண்மாய்க் கரையில் இருக்கும் ஓடக்கரை ஐயனார் கோவில் என்னும் ஒரு ஓட்டு கூரையோடு கூடிய ஒரு மேடையும் அங்கு ஊன்றி வைக்கப்படுடிருக்கும் அருவாளும்தான் அந்த மக்களின் காவல் தெய்வம்!.
அப்படிப்பட்ட கிராமத்திலிருந்து அடிச்சு பிடிச்சு ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்துல வேலைக்கு வந்துட்டான் ராஜா. சென்னையில் பயிற்சி முடித்து பெங்களூரில் பணிக்கு அமர்த்தினர், எத்தனையோ முறை அம்மாவையும் அப்பாவையும் தன்னோடு நகரத்தில் வசிக்க அழுத்தி கூப்பிட்டும் அவர்கள் அங்கிருந்து வருவதாக இல்லை. அந்த குக்கிராமத்தில்தான் அவர்கள் உயிர் முடிச்சு இருப்பதாக அவர்கள் உணர்ந்ததால்!.
அதோட தொடர்ச்சியா நகரம் சார்ந்த வாழ்க்கையை வாழத் தொடங்கியவனுக்கு கிராமத்தின் நினைவுகள் கனவுகளாய் கலைந்துபோயின. இரவு பகலாக அசுரத்தனமான வேகத்துடன் இயங்கும் இயந்திர வாழ்க்கையும் பீட்சாவும் பர்க்கரும், கே.எப்.சி வறுத்த இறைச்சிகளும், வாணுயர்ந்த கட்டிடத்தின் வாசனையிலும் வார இறுதி பார்ட்டிகளிலும், கிளப் மற்றும் பப்புகளின் அணிவகுப்பிலும் நீர்த்துப்போயின, மேகம் கருக்கையில் அதை பார்த்து சந்தோசப்படுதலும், பெய்யும் மழையை தேக்கி கண்மாயில் வைக்க அதன் கரையை உயரப்படுத்துதலும், சேற்றிலும் சகதியிலும் கிடந்து மரம், மட்டை, ஆடு, மாடு, புல்,முள் என்று சுற்றிலும் விரிந்து கிடக்கும் புன்செய் நிலங்களும், காட்டு வேலிக் கருவை மரங்களும்தான் அந்த மண்ணில் இருப்பவர்களின் வாழ்க்கையும்!.
வாழ்க்கையின் ஓட்டத்தில் ஐந்து வருடங்கள் உருண்டோடிவிட்டது, இதற்கிடையில் அவன் அனுப்பிவைக்கும் பணமும் மாசத்தில் ஒருதடவை அவன் பேசும் போனுமே அவர்கள் இருப்பை அவனுக்கு உணர்த்திவந்தது.
நவீனத்தின் நாக்குகளை எல்லாம் தொட்டுப் பார்த்து சுவைத்துப் பார்த்து அதன் உச்சம் என்னவென்று சொக்கட்டான் போட்டு அவன் விளையாட தொடங்கி இருக்கும் நேரத்தில், பல சந்ததிகளை உருவாக்கிகிட்டே இருந்த அந்த மண்ணுல காலப்போக்குல மழை, தண்ணி எல்லாம் இல்லாமப் போக பொழப்பு தலைப்பு இல்லா ஊரு சனமெல்லாம் மதுரை, திருச்சி, மெட்ராசுன்னு பொழப்பு தேடி போயிட்டாங்க!.
ஊருல இருக்குற நிலமெல்லாம் விதைக்கவும், அறுக்கவும் ஆளுக இல்லாம கட்டாந்தரையா கண்ணீர வடிச்சுகிட்டே பக்கத்துல இருக்குற கருவை மரங்க கிட்ட அந்த்தக்காலத்து கதைகள மெளனமாவே சொல்லிக்கிட்டு கிடக்கு!. போன போக்குல, நவீனமும் நாகரீகமும் ஒரு முரட்டு அரக்கனா நின்னு எல்லாத்தையும் முழுங்கிப் போட்டுறுச்சு. மண்ணொட மக்க மாருக அத்தனை பேரும் பஞ்சந்தாங்கிய இன்னிக்கு தேதிக்கு முழுசா மறந்தே போயிட்டாங்க, நம்ம ராஜாவும் சேர்ந்தே!.
வீரய்யாவுக்கு விவசாயத்தை விட்ட வேற வேலை தெரியாது, பரம்பரை பரம்பரையா அவன் முன்னோர்கள் விவசாயம் செஞ்சு வாழ்ந்த பூமிய சாமிய நினைச்சு வாழ்ந்து வர்ரான். அந்த கிராமத்தில் இன்னும் விவசாயத்தை விடாமல் புடிச்சு தொங்கும் ஜீவன்களில் அவனும் ஒருவன், அவன் சம்சாரம் வள்ளிக்கு புருசன்தான் உலகமே. கல்யாணம் ஆகி வந்தநாளில் இருந்து புருசன் பேச்ச மீறி நடந்ததேயில்ல, ஒத்த ஆம்பிளை புள்ளைய பெத்து அவன பாராட்டி சீராட்டி வளர்த்து ஆளாக்கியதுவர அவள் தியாகம் சொல்லி மாளாது. மகன் மேல அளவுகடந்த பாசத்தை கொட்டி வளர்த்தாலும் புருசனை மீறி மகனோட அவளுக்கு போக விருப்பமில்லாம இந்த கிராமத்திலையே காலத்தை கடத்திக்கொண்டிருந்தாள்.
மாமா, மாமா!..என்ன ஆத்தா மருமகளே மாமாவை தேடுற, ஒன்னுமில்ல அத்தை அப்பா மாமாவை கூட்டிட்டு வரச்சொன்னாக அதான் கூட்டிக்கிட்டு போகலாம்னு வந்தேன். ஓ அப்படியா உங்க மாமா இராம்நாட் கலெக்டர் ஆபிஸ் போயிருக்காரு ஏதோ விவசாயிகள் போராட்டமா!. சரிங்க அத்தை மாமா வந்ததும் நான் வந்திட்டு போனேனு சொல்லுங்க நான் கிளம்புறேன், ஆத்தி கால்ல சுடுதண்ணிய ஊத்திக்கிட்டுல நிக்குற இரு கூழு கரைச்சு வச்சிருக்கேன் கொஞ்சம் குடிச்சிட்டு போ.
ம், சரிங்க அத்தை!.
அத்தை சின்ன மாமா எப்பதான் ஊருக்கு வருவாங்க, அவங்களுக்கு நம்ம நியாபகம் எல்லாம் இருக்கா?!.. அதெப்படி இல்லாம போகும் இவன நம்பிதான் எல்லாம் வேலையையும் ஒப்படைச்சு இருக்காங்களாம் அதனால ஊருபக்கம் வர முடியலையாம் ஆனா இந்த வருச ஐயனாரு கோயில் திருவிழாவுக்கு வர்ரேனு சொல்லிருக்கான்.
கவிதா வீரய்யாவின் தங்கச்சி மகள், அவளைத்தான் ராஜாவுக்கு கட்டிவைக்கனும்னு சின்ன புள்ளையில இருந்து பேசிவச்சிருக்காங்க. கவிதா பத்தாம் வகுப்புவரை படிச்ச புள்ள பார்க்க கிராமத்துக்கே உரிய லட்சணத்தோடு அழகாக இருப்பாள், அவுங்க அப்பா அம்மாவுக்கு வயகாட்டு வேலையில இருந்து கிராமத்தில் உள்ள வயசானவங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுப்பது என அனைத்து உதவிகளையும் செய்யும் துறுதுறுப்பனா பொண்ணு.
சின்ன வயசுல ராஜாவோட கூட்டாளி அவதான், பனங்கோந்தையில வண்டி செஞ்சு விளையாடுறது, தட்டான் புடிச்சு நூலைகட்டி பறக்கவிடுறது, ஓணான் புடிச்சு அடிச்சு விளையாடுறது, கண்மாயில மண்டிபோட்டு மீன் பிடிக்கிறது, பனையோலை ராட்டினம் செஞ்சு விளையாடுறது, ஆடுபுலி ஆட்டம், நொண்டியாட்டம் என இவர்களின் கால்படாத இடமில்லை அந்த ஊரில். கார்த்திகை அன்னைக்கு பனையோல கொழுக்கட்டையை திண்டுகிட்டு, சுவாமி வெளி வீதி வருகையில் ஓலை கட்டிய பனையைக் கொளுத்தியதும் சொக்கப்பனை கொழுந்து விட்டெரியும். சுவாமி பின் வீதிப் பக்கம் போனதும். எரிந்து தணிந்த அந்த மரத் துண்டையும், ஓலைத் துண்டையும் இழுத்துக் கொண்டு போய்க் குப்பை மேட்டில் போடுவது அவர்களுக்கு ஒரு கொண்டாட்டம்!.
அவன் வர்ரதோட உனக்கும் அவனுக்கும் கல்யாணத்த பேசி முடிக்கனும்னு உங்க மாமா சொல்லிக்கிட்டு இருந்தாரு. எல்லாத்துக்கும் நல்லகாலம்னு ஒன்னு வரணும்ல என சொல்விட்டு கூழையும் சின்ன வெங்காயத்தையும் கவிதாவிடம் கொடுக்க, மடமடவென குடித்துவிட்டு கிளம்பினாள்.
“கத்தரி பூத்திருக்கு
கலர் கலராய் ஊதாப்பு
ஊதாப்பு பூத்தாலும்
உள்ளுக்குள்ள உன் நினைப்பு
ஏலேலங்கடி ஏலேலங்கடியே
என் மாமான் எப்ப வரான்
சொல்லடி கிளியே”
என நாட்டுப்புற பாட்டை பாடிக்கொண்டே வீட்டை நோக்கி ஓடிப்போனாள் மனதுக்குள் ஆயிரம் கற்பனைகளுடன் கவிதா!.
பெங்களூரில் லிவ்விங் டூகெதர் வாழ்க்கைக்கு பழகிப்போயிருந்தான் ராஜா. மூன்று வருசம் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தவன் கவனம் சிதைய ஆரம்பித்தது, அவன் டீமில் புதிதாக வேலைக்கு சேர்ந்த கிறிஸ்டியால். பார்த்தவுடன் வசிகரிக்கும் கண்களும், ஆவியில் அவித்த இட்லி போல எப்பவுமே பிரெஸ்ஸா இருக்கும் அவள் முகமும், அவளுடைய மாடர்ன் டிரஸ்சும், நுனி நாக்கு ஸ்டைலான ஆங்கிலமும் அவனை அவளிடம் கட்டிப்போட்டது. வட மாநிலத்தை சேர்ந்த அவளுக்கு ராஜாவுடன் வீட்டை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்த உறவு நாளடைவில் கட்டில்வரை வந்தது.
அப்பா போன் அடித்ததில் இருந்து அவனுக்கு ஊருக்கு போகம் எண்ணம் அதிகரிக்க தோன்றியது. கிறிஸ்டி ஊர்ல கோயில் திருவிழா வருது அதனால ஊருக்கு கிளம்பனும், நீயும் வர்ரியா அப்பா அம்மாவை பார்த்து அப்படியே நம்ம விசயத்தையும் பேசிட்டு வருவோம்?!. இல்ல ராஜா எனக்கு ஐடியா இல்லை வில்லேஜ்லாம் எனக்கு செட் ஆகாது , கிறிஸ்டி நீ வந்துபாரு கண்டிப்பா உனக்கு எங்க ஊரு ரொம்ப புடிக்கும்.
ஓகே நீ கம்பள் பன்றதால வரேன் ராஜா, ஆனா ஒன்லி த்ரீ டேஸ்தான். ஆமா எப்ப போகனும்?!.. ரெண்டுநாள்ல கிளம்பனும், நான் இப்பவே டிக்கெட் புக் பன்னிடுறேன், நீ உனக்கு தேவையான திங்ஸ் எல்லாம் எடுத்து வச்சுக்க.
பெங்களூரில் மல்டி வால்வோ பேருந்தில் பயணத்தை தொடங்கினர் கிராமத்தை நோக்கி, ராஜாவின் மனமும் பயணப்படலானது. வயல் வெளிகளுக்குள் ஊடுருவிச் செல்லும் போது கருவேலம் மற்றும் பனை மரங்களினூடே ஆங்காங்கே மிகப்பெரிய கிணறுகளையும் அதன் பக்கத்திலேயே கிணற்று நீரை பகீரதப் பிரயத்தனம் செய்து மேலே கொண்டுவரப் போராடிக் கொண்டிருக்கும் டீசல் மோட்டர்களையும் அதைத் தொடர்ந்த பரந்த பொட்டல் வெளிகளில் கடலை, கம்பு, மிளகாய் என்று விதைக்கப்பட்டிருக்கும் விளை நிலங்களையும் காணும் போது அந்த களிமண் சூட்டோடு சேர்ந்து நமது கண்களும் சிவந்துதான் போய்விடும்.
ஆறு என்ற ஒன்றும் உண்டு, அதில் எப்போதாவது தண்ணீர் வருவதும் உண்டு. வைகையாற்று நீர் ஆங்காங்கே போய் விட்டு போனால் போகுது போ என்று இராமநாதபுரம் மாவட்டத்தின் உள்ளே சுருண்டு கிடக்கும் பஞ்சந்தாங்கிக்கும் அவ்வப்போது ஓரிரு துளிகளை கொடுத்து அவர்கள் தொண்டைக் குழிகள் வரண்டு போய் விடாமல் இருக்கச் செய்வதும் அவன் கண்முன் நிழலாடியது!.
இராம்நாடு கடைசி ஸ்டாப்பு வந்திருச்சு எல்லாரும் இறங்குங்க என டிரைவரின் சத்தம் அவனை உசுப்பிவிட்டது, கிறிஸ்டி எழுந்திரு ஊரு வந்திருச்சு. ஓ மை காட் என்ன ராஜா கிராமம்னு சொன்ன ஆனா ஓரளவு கொஞ்சம் பெரிய ஊரா இருக்கு?!.. இதுதான் எங்களுக்கு நகரம், என்ன சாமான் வாங்கணும்னாலும் இங்க வந்துதான் வாங்கணும். இதுதான் டிஸ்டிக் ஹெட்குவார்ட்டர்ஸ் இங்க இருந்துதான் இராமேசுவரம் கோவில், பாம்பன் பிரிட்ஜ் எல்லாம் போகமுடியும். வாவ்!, ராஜா எனக்கு ரொம்பநாள் ஆசை பாம்பன் பிரிட்ஜ் பார்க்கணும்னு.
கண்டிப்பா போகலாம் கிறிஸ்டி ஊர்த்திருவிழா முடிச்சிட்டு போகலாம், ஊருக்கு பஸ் இருக்கானு பார்க்குறேன் கொஞ்சம் வெயிட்பண்ணு.
அண்ணே பஞ்சந்தாங்கி போக பஸ் எப்ப வரும்?!..தம்பி இப்பதான் போச்சு இனி ரெண்டு மணிநேரத்துக்கு ஒருதடவைதான் வரும்.
அண்ணே பஞ்சந்தாங்கி போகனும், போலாம் தம்பி ஏறுங்க. எவ்ளோனு சொல்லுங்க பெருச என்னத்த கேக்கபோறேன், ஐநூறு ரூபா கொடுங்க.
நானும் உள்ளூர்காரன்தான் நீங்கபாட்டுக்க இவ்ளோ கேக்குறிங்க, என்ன தம்பி செய்ய பெட்ரோல் விலையெல்லாம் ஏறிப்போச்சு நான் அங்க வந்திட்டு ரிட்டன் சவாரி இருக்காது சும்மாதான் வரணும். சரி ஏறுங்க நானூறு ரூபாயா கொடுங்க!.
கிறிஸ்டி போகலாம் வா, ஏன் ராஜா பஸ் என்னாச்சு?!. இப்ப பஸ் இல்ல அதான் வெயிட் பண்ணவேணாம்னு, ஓகே எவ்ளோ நேரம் ஆகும்?!..எப்படியும் 45 மினிட்ஸ் ஆகும்.
நீங்க பஞ்சந்தாங்கில யார்வீட்டுக்கு தம்பி போகணும்?!.. அண்ணே என்னோட வீட்டுக்குத்தான் போறேன், அப்படியா நீங்க யாரு மகன்?!. வீரய்யா மகன்!.. ஐயாவோட பையனா நீங்க , உங்கள நான் ஐயாவோட டவுன் பக்கம் பார்த்ததேயில்ல!.. நான் பெங்களூர்ல வேலை பார்க்குறேன் அங்கபோய் அஞ்சுவருசத்துக்கு மேல ஆச்சு, இப்ப ஊர்த்திருவிழாக்காக வந்திருக்கேன்.
உங்க ஐயா எவ்ளோ பெரிய மனுசன், எங்க விவசாய போராட்டம் ஆர்ப்பாட்டம்னாலும் மொதஆளா அவர்தான் நிப்பாரு. இப்பக்கூட இந்த சல்லிக்கட்டு போராட்டம் உங்க அப்பா தலைமையிலதான் இங்க நடந்துச்சு. விவசாயம்தான் அவருக்கு உசுரு, எத்தனையோ பேரு நிலத்தையெல்லாம் வித்துட்டு டவுனுக்கு வந்திட்டாக ஆனால் இன்னும் அந்த களிமன் தரையில வைராக்கியமா விவசாயம் பாக்குறது உங்க ஐயா மட்டுந்தான்.
உங்க ஐயா அடிக்கடி சொல்லுவாரு எல்லாத்தையும் விஞ்ஞானத்தால மனுசன் உருவாக்கிடுவான் ஆனா இந்த சோத்த விவசாயியும் விவசாயமும் இல்லாம உருவாக்க முடியாது. ஒருகாலம் வரும் இன்னைக்கு விவசாயத்த மதிக்காதவன் எல்லாம் அன்னைக்கு விவசாயிய தெய்வமா பார்ப்பானுங்க அப்டினு!.
உண்மைதான் அண்ணே அப்பா அடிக்கடி எங்ககிட்டேயும் இதத்தான் சொல்லுவாங்க. தம்பி இதுக்கு மேல வண்டி போகாது ரோடு போட கல்லு பரசி போட்டு இருக்காங்க கோவிச்சுக்காம இங்கிருந்து நடந்துபோயிடுங்க. பரவாயில்லை நாங்க போயிடுவோம், ஐயாவை ரொம்ப கேட்டதா சொல்லுங்க தம்பி ஆட்டோ மோகன்னு சொன்னா ஐயாக்கு தெரியும். வேகமாக தலையாட்டியவாறு லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தனர்.
இங்கிருந்து எவ்ளோ தூரம் நடக்கணும் ராஜா ?!.. ஒன்லி ஒன் கிலோ மீட்டர்தான்.
வழிநெடுக பொட்டல்காடும் அதன் அனல்காத்தும் அவனை ஏதோ செய்தது. பொறந்த ஊர்னு சொல்லிக்கிறதுல பெருமை ஒண்ணும் இல்லையின்னாலும்… அந்த ஊரும் பாட்டன் முப்பாட்டானுக சுவாசித்த காத்தும், அவுங்க வாழ்ந்த வாழ்க்கையும் அதிர்வுகளா அங்கதான் சுத்திகிட்டு இருக்கும்… அந்த மண்ணுல பல தாதுப் பொருட்களா விரவிக் கிடந்துதான் தாய், தகப்பனோடோ ஜீவ சத்தா நான் ஆகி இருப்பேன், அதனால அந்த மண்ணோட ஈர்ப்பு அவனுக்குள்ளே இருக்கறதும் இயல்புதானே!..
ஏதேதோ ஆசைகள் இருந்தாலும் நவீன யுகத்தில் எல்லாமே புது புது தொழில்நுட்பங்கள் எல்லாம் வந்துட்டாலும் மனிதம் ரொம்ப நீர்த்துப் போனதோட மட்டும் இல்லாம, மனிதர்கள், மனிதர்களோட இணைஞ்சு வாழும் ஒரு இயற்கையோட இசைந்த வாழ்க்கை முறை இப்போ தொலைஞ்சு போயிதான இருக்கு.
நாகரீகப் பெருக்கம் அறிவு வளர்ச்சின்னு சொல்லிகிட்டு மனுசன் தன்னை தனித்தனியா கூறு போட்டுக்கிடுறதை ஏத்துக்கிட முடியலை. மாமா, அத்தை, பங்காளி, அங்காளி, மச்சினன், மாப்பிளை, சின்னம்மா, பெரியம்மான்னு ஜனக்கட்டுகளோட கல்யாணம், சாவுன்னு சொல்லி ஒண்ணா சாப்பிட்டு, சிரிச்சு, சண்டை போட்டு, உரிமைய கொடுத்து, உரிமைய கேட்டு, திமிரா ஒரு ரத்த பாசத்தோட வாழ்ந்த வாழ்க்கை இன்னிக்கு தொலைஞ்சுதான போச்சு!.
இன்னமும் குத்துயிரும் குலை உயிருமா இந்த ஒரு வாழ்க்கை முறையும், அங்க அங்க சில கிராமங்கள்ள இருந்தாலும்!.
மனுசங்க கிட்ட சுயநலம் கூடிக் கூடி போட்டி பொறாமையில உறவு முறைகள் நீர்த்துப் போயிகிட்டுதான் இருக்கு!. ஆயிரம்தான் நகரத்து வாழ்க்கையில் சில சுகங்களை அனுபவிச்சாலும், நம்ம ஊரு வயக்காட்டுல கருக்குன்னு ஒரு முள்ளு குத்தி அதை பிடிங்கிப்போட்டு அந்த வலியை அனுபவிக்கிற சுகத்தை பட்டணத்து வாழ்க்கை கொடுத்துடுச்சுனு சொல்லிர முடியாதுல!.,
என்ன ராஜா எதுவும் பேசாம ஏதோ யோசனையிலயே வர்ர?!. இல்ல என் கிராமத்து வாழ்க்கையை யோசித்து பார்த்தேன் சுகம்ங்கறது உடம்புக்கு மட்டும் கிடைச்சா அது மிகப்பெரிய வலியா மாறிடும், சுகம் மனசுக்கு கிடைக்கணும் அதுதான் நிஜமான சந்தோசம். ஏனோ அந்த சுகத்த நீண்ட நாளுக்கு பிறகு என் கிராமத்து மண்ணுல மிதிச்சதும் உணருகிறேன்!.
ஆத்தி யாரு அது தூரத்துல வர்ரத பாத்தா நம்ம ராசா மாதிரில இருக்கு?!. ராசா மாதிரி இல்ல உன் மகன் ராசாதான் வர்ரான். கூட யாரோ ஒரு பொம்பள புள்ள வேறல வருது, ஏதாவது கூட்டாளியா இருக்கும் வரட்டும் என்றார் வீரய்யா.
எங்கும் பொட்டல்காடாய் இருந்த பூமியில் இயற்கை அன்னை பச்சை பட்டாடை உடுத்தியது போல் திடீரென சாலையின் இருமறுங்கிலும் வயல்வெளிகள். வாவ் ராஜா இங்க மட்டம் இவ்ளோ சூப்பரா பயிர்கள் வளர்ந்திருக்கு, அங்கபாரு பயிர்களுக்கு நடுவுல அழகா ஒரு வீடு கிராமத்து படத்துல பார்க்கிறமாதிரியே. வா அந்த வீட்டுக்கு போகலாம் கிறிஸ்டி, அவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?!. பார்த்துக்கலாம் வா, வாசலின் அருகில் போனதுதான் தாமதம் ராஜாவை கட்டிபிடித்து நலம் விசாரித்ததை ஆச்சரியமாக பார்த்தாள் கிறிஸ்டி. இந்தப்புள்ள யாருப்பா? !. என்கூட வேலைபாக்குற பொண்ணும்மா நம்ம ஊருக்கு திருவிழாவ பாக்க வரேனு சொன்னுச்சு அதான் கூட்டியாந்தேன். சரி சரி வாத்தா நல்லாயிருக்கியா களைப்பா வந்திருப்பிங்க காலுமூஞ்சிய அலம்பிட்டு வாங்க டீ போட்டு வைக்கிறேன்.
என்னப்பா இப்பதான் ஊரு பக்கம் வர வழி தெரிஞ்சதா உனக்கு?!.. விவசாயம் வேணாம்னு கம்ப்யூட்டர் வேலைக்கு போயிட்டிங்க ஆனா நாங்க சேத்துல காலுவைச்சாதான் நீங்க சோத்துல கை வைக்க முடியும் அப்பு என தோளை தட்டிக்கொடுத்தார் வீரய்யா. அப்படிலாம் இல்லப்பா, அங்கிள் நல்லா இருக்கிங்களா?!.. எனக்கு என்னத்தா குறைச்சல் மகராசனா இருக்கேன். சரி போய் சாப்பிடுங்க நான் உரம் வாங்கிட்டு வந்திடுறேன்.
ஏன் ஆண்டி ராஜாதான் நல்லா சம்பாதிக்கிறான்ல, அங்கிளும் நீங்களும் அவன்கூடவே பெங்களூர் வரலாம்ல?!. என்ன ஆத்தா இப்படி பொசுக்குனு சொல்லிப்புட்ட
ஆறு பொம்பளைப் புள்ளைகளையும், ஒரு ஆம்பளைப் புள்ளையையும் அவுக அய்யா இந்த மண்ணுக்குள்ள நின்னுதான் காப்பாத்தி இருக்காங்க!.
மழை தண்ணி இல்லாம போன காலத்துல ஆத்துப் பாசனமும் இல்லாத நேரத்துல (வைகை ஆறு தமிழகத்துக்கு வராத காலங்கள்) மர மட்டைகள எல்லாம் மனுசப்பயக வெட்ட ஆரம்பிக்க, ஆரம்பிக்க மனுசனுக்கு மழை வெளையாட்ட காட்ட ஆரம்பிச்ச நேரம். 1850 வாக்குல எங்க பாட்டையா எல்லாம் அந்தமான் பக்கம் போயி கடை கண்ணி வச்சி ஊர்ல இருந்த புள்ளைக் குட்டிக எல்லாம் பொழைக்க காசு பணம் அனுப்பி இருந்து இருக்காங்க.
அந்த காலத்துலதான் கொடுமையான பஞ்சம் அப்போதைய இராமநாதபுரம் மாவட்டத்துல தலை விரிச்சு ஆடி இருக்கு. எங்கப்பத்தா சொல்லும். காசு பணம் இருக்குமா ஆனா வயித்துப் பசி ஆத்த நெல்லு, புல்லு கிடைக்காதாம். ஒரு வேள நெல்லுச் சோறுதான் சாப்பிடுவோம், அதுவும் போகப் போக கொறஞ்சு ஒரு மாசத்துக்கு ரெண்டு தவணைதேன் நெல்லுச் சோறு சாப்பிடுவோம்.. மத்தபடிக்கு கம்பு, கேப்பை கூழுதேன் குடிப்போம்னு..
அம்புட்டு பஞ்சத்துலயும் அஞ்சாறு புள்ளைக் குட்டியள வச்சுகிட்டு நாங்க பொழச்ச பொழப்பு இருக்கே ஆத்தா, அதச் சொன்னா. அம்மூரு கம்மா நெறஞ்சு போகுற அளவுக்கு கண்ணுத் தண்ணி இருக்குமத்தா, அம்புட்டு கஷ்டம்..அப்புறந்தேன் ஆத்து தண்ணி அப்போ, அப்போ வரயில ஏதோ நெல்லுப் புல்ல விதைச்சு பொழைச்சு வந்தோம்..
காசு கண்ணி இல்லாத மக்க எல்லாம் நடந்தே தஞ்சாவூர் சீமைக்கு கருதடிக்க போயிருவாக, செல பேரு ஆட்டுக் கிடைய பத்திக்கிட்டுப் போயிருவாக!. ஊரே வெறிச்சோடிப் போயித்தேன் கெடக்கும்!. எங்குட்டுப் பாத்தாலும் பெரிய மனுசகள்ள இருந்து புள்ளைக் குட்டிய வரைக்கும் பசி…பசி..பசிதேன்! நல்லா இருக்குற ஆளுகள பாத்து எல்லா சனமும் வேற ஒண்ணும் வேணாம் ஒரு கை சோறு போடுங்கய்யான்னு கேக்குறத என் காதால கேட்டு இருக்கேன்., ஒரு மனுசனுக்கு எம்புட்டு கஷ்ட நஷ்டமும் வரலாமத்தா ஆன வவுத்துக்கு மட்டும் கஷ்டம் வரவே கூடாது..
அம்புட்டு கஷ்டத்துலயும் நம்ம கெணத்து தண்ணி முழுசா வத்தலன்னு பெருமையா தண்டட்டி ஆட எங்கப்பத்தா சொல்லும்!.
இன்னொருமுறை அதுபோல ஒரு நிலைமை வந்திடக்கூடதுனுதான் நானும் அவரும் இந்த மண்ணே கிடைனு கிடக்கோம், எங்க ஊசுரு போனாலும் இந்த மண்ணுல போனாதான் எங்க கட்ட வேகும் ஆத்தா!.
இவனுக்கு வேணும்னா எந்த அடிப்படை வசதியும் இல்லாம இன்னமும் இருக்குற இந்த கிராமத்துக்குள்ள இருந்து கம்ப்யூட்டர் படிச்சது பெருசா தெரியலாம் ஆனா அப்பன், பாட்டன் முப்பாட்டன் பொறந்து வாழ்ந்த ஊர்ல வாழ்றத வாழ்க்கையோட பெரும் பேறாத்தான் நான் நினைக்கிறேன்!.
ராஜா என்ன அமைதியா வீட்டுக்கு பின்னால வயக்காட்டுல வந்து உக்காந்துட்ட, ஒன்னுமில்ல அம்மா சொன்னதெல்லம் யோசிச்சு பார்த்தேன், சின்னவயசுல எப்படியெல்லாம் இருந்த ஊர் இப்ப எப்படி கலையிழந்து போய் நிக்குது!.
இப்ப புரியுதா கிறிஸ்டி எங்க மண்ணோட மகத்துவம், எனக்கு என்னவோ இதுலாம் நான்சென்சா இருக்கு ராஜா இந்த நவீன உலகத்துல இன்னும் விவசாயம்னு எந்த வசதியும் இல்லாத கிராமத்துல கிடக்கிறத நெனச்சா!. உனக்கு அப்படி தோனலைனாதான் ஆச்சரியம், ஆனா நான் ஒரு தெளிவான முடிவு எடுத்துட்டேன் கிறிஸ்டி எங்க அம்மா சொன்னதுபோல இனியொரு பஞ்சம் இந்த மண்ணுல வராம இருக்கணும்னா கம்ப்யூட்டர் முக்கியமில்ல விவசாயம்தான் முக்கியம்னு!.
ஏதேதோ திட்டங்கள தீட்டி இலவசங்கள அறிவிக்கிற அரசுகள் எல்லாம் விவசாயம் நலிவுறாம இருக்கறதுக்கு என்ன என்ன செய்யலாம்னு ஒரு விழிப்புணர்வை கொடுக்கறதும் கிடையாது, படிச்சு முடிச்சு பட்டணத்து வேலைக்குப் போறது மட்டும் முன்னேற்றம் இல்லை படிச்சு முடிச்சு விவசாயம் செய்றதும் முன்னேற்றம்தான்னு இளைஞர்களுக்கு புரிய வைக்கிறதும் கிடையாது. (புரிஞ்சு இருந்தா எதுக்கு வெளிநாட்டுக்கு போயி கஷ்டப்பட போறாங்க)
பாட்டன், முப்பாட்டன்னு செஞ்சுகிட்டு இருந்த ஒரு தொழில் விவசாயம். அது நம்ம அப்பாங்க காலத்துல இருந்து தடம் மாறிப் போயி இன்னிக்கு அதோட தொடர்ச்சியா நம்மள்ள நிறைய பேரு விவசாயம் செய்றது எல்லாம் ஒரு பிற்போக்குத்தனம்னு புரிஞ்சுகிட்டு நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் போய் ஒக்காந்துட்டோம்.
கீழை நாடு, கீழை நாடுன்னு சொல்லி சொல்லியே நம்மள கீழ அமுக்கப்பாக்குற, அல்லது கீழ அமுக்கிப் போட்டு இருக்கும் மேலை நாட்டு நாகரீகத்தைதான் நாம உசத்தியா பாக்குறோம். ஆனா அதை விட உயர்வான நமது கலாச்சாரத்தையும், நாகரீகத்தையும், பண்பாட்டையும் மெல்ல மெல்ல மறக்க ஆரம்பிச்சுட்டோங்கிறது வேதனையான விசயம் கிறிஸ்டி!.
போன தலைமுறை வரைக்கும் கூட்டம் கூட்டமா, எங்க பாட்டன், முப்பாட்டன்னு, சொந்த கிராமங்களை மையப்படுத்திதான் வாழ்க்கைய வாழ்ந்து இருக்காங்க. ஆனா சடார்னு சொந்த கிராமங்களை எல்லாம் விட்டு பொழப்புக்காக வெளியே வந்ததோட மட்டும் இல்லாம திரும்ப அந்த கிராமங்களுக்கு போறதே இல்லை என்பது வலிக்கக் கூடிய கனமான உண்மை.
இன்னும் வரப்போகிற சந்ததிகளுக்கு எல்லாம் சொந்தக் கிராமங்களின் மதிப்பினை எடுத்துச் சொல்லியே ஆக வேண்டும். தலை முறைகள் கடந்த எமது மூதாதையர்களின் வாழ்க்கைகள் அங்கே மண்ணோடு மண்ணாக கலந்து கிடக்கின்றன அவற்றை நாம்ம விட்டு விடக் கூடாதுனு புரியவைக்கணும்!..
ராஜா ஆர் யூ மேட் என்ன பேசுறேனு உனக்கு புரியாதா?!.. நான் புரிஞ்சுதான் பேசுறேன் இத்தனை நாளா நாகரீகம்கிற பெயர்ல என்னோட அடையாளத்தை இழந்து வாழ்ந்திருக்கேன் இனி அந்த தவறை செய்யமாட்டேன் நான் அதில தீர்க்கமா இருக்கேன்.
சாரி ராஜா உன்கிட்ட இதை எதிர்பார்க்கல, என்னால எல்லாம் இந்தமாதிரி ஒரு கிராமத்தில முடங்கி கிடக்க முடியாது நான் நாளைக்கே ஊருக்கு கிளம்புறேன். உனக்கும் எனக்கும் ஒத்துவராது, கிறிஸ்டி நான் சொல்றது கொஞ்சம் யோசித்து பாரு, சாரி ராஜா சான்சே இல்ல நீன் உன் லைப்ப உன் இஷ்டப்படி வாழு பட் என் லைப்ப உன்னோட சேர்ந்து பாழாக்க நான் விரும்பல.
சரி அட்லீஸ்ட் திருவிழா வரைக்கும் இருந்திட்டு போ, இனி ஒரு நாள் கூட என்னால இருக்க முடியாது. ஆண்டி அங்கிள் நான் கிளம்புறேன் எனக்கு முக்கியமான வேலையிருக்கு ஆபிஸ்ல உடனே வரச்சொல்லிட்டாங்க, என்ன ஆத்தா வந்த கால்ல சுடுதண்ணிய ஊத்திக்கிட்டு நிக்குற இப்பவே போகணும்னு?!. திருவிழா முடிஞ்சு போலாமே, இல்ல ஆண்டி அதுக்கு டைம் இல்ல. வள்ளி அந்தபுள்ளைதான் ஏதோ முக்கியமான வேலையிருக்குனு சொல்லுதுல சரி ஆத்தா பாத்து போங்க. ராசா அந்த புள்ளைய பதனமா பஸ் ஏத்திவிட்டுவாப்பா!.. இல்ல அங்கிள் ஆட்டோ வரச்சொல்லியிருக்கான் நானே போயிடுவேன், கிறிஸ்டி ப்ளீஸ் ராஜா நீ எதுமே எங்கிட்ட பேசவேணா உன் முடிவில ஏதாவது மாற்றம் இருந்தா சொல்லு இல்ல ஆளாவிடு! ..
அத்தை சின்ன மாமா வந்திருக்காம் அம்மா சொன்னாங்க எங்க ஆளையே காணோம். கூட வேலைபாக்குறவுக வந்தாங்க அவங்கள வழியனுப்ப ரோட்டுக்கு போனான், வந்திருவான் இரு. இல்ல நான் மாமா வ அங்கேயே போய் பாத்துக்குறேன் என வேகமாக ஓடினாள்.
வீட்டை நோக்கி தீர்க்கமாக வந்தவன் எதிரில் என்ன மாமா நல்லா இருக்கிகளா ?!. எங்கள எல்லாம் பட்டிணம் போனதும் மறந்துட்டிங்கதான!.. ஏய் கவிதா நல்லா இருக்கியா அத்தை மாமா எல்லாம் எப்படி இருக்காங்க!.. உன்ன மறப்பனா?!.. சின்னபுள்ளையில இருந்தே என் கூட்டாளி நீதான, பரவாயில்லையே அந்த நிபாகம் எல்லாம் இருக்கா?!. அடிவாங்குவ நக்கலடிச்சா பாத்துக்க, சரி சரி மாம சாயங்காலம் கோயிலுக்கு வாங்க அங்க பேசிக்கலாம் நான் கிளம்புறேன் அப்பாக்கு வயலுக்கு கஞ்சிகொண்டு போனும்!..
அந்த கம்மாக் கரையில இருக்குற ஓட்டுக் கூரை போட்டு சாணம் மொழுகி இருக்குற மண் திண்ட என்னான்டு நீ நெனைச்ச?.. அதுல ஐயனாரு உசுரோட எறங்கி இருக்காகப்பு…”ன்னு அப்பத்தா அன்னைக்கு என்கிட்ட சொன்னப்ப அந்த லாந்தர் வெளக்கு வெளிச்சதுல அவுங்க கண்ணு அவ்ளோ பளீர்னு பிரகாசமா இருந்துச்சு ஆனா எனக்கு அதோட அர்த்தம் அப்போ புரியலை. இப்ப வெளங்கிடுச்சு மீண்டும் அந்த பளீர் வெளிச்சத்த கவிதா கண்ணுக்குள்ள பாத்தேன்!.
ராசா நீ லீவுல வந்திருக்கதோட உனக்கும் கவிதாக்கும் பேசி முடிச்சிரலாம்னா உங்க ஐயா கேட்டாரு?!. அப்புறம் உனக்கு எப்ப லீவு கிடைக்கும்னு தெரியாதுல அதான்!..அம்மா இனி நான் ஊருக்குலாம் போகல, நான் இங்கயே இருந்து ஐயாவோட விவசாயத்தை பாக்கலாம்னு இருக்கேன்!.. ஏன் ஐயா, ராசா அந்த ஓடக்கரை ஐயனாருதான் உனக்கு நல்ல புத்திய கொடுத்திருக்காப்ல!..
கவிதாக்கு நான்தான், எனக்கு கவிதாதான்னு சின்னபுள்ளையா இருக்கப்பவே பேசிவச்சதுதான, ஐயா விருப்பபடியே செய்ய சொல்லுங்கம்மா என எழுந்து போனான். வீட்டுக்குள் இருந்தே அனைத்தையும் கேட்ட வீரய்யாவுக்கு சந்தோசம் இருப்பு கொள்ளல, வள்ளி நான் சொல்லல எனக்கு பிறகு என்மகன்தேன் இந்தபூமியில விவசாயத்தை காப்பத்துவானு. ஐயனாருக்கு கடமைபட்ட குடும்பம் அதுக்கு அடுத்த தலைமுறை இல்லாம போயிடுமா என்ன?!..
கோயிலுக்கு நேரமாச்சு சாமி சாமான் எல்லாத்தையும் ஓலைப்பெட்டில கணக்கா எடுத்துவச்சுக்க, தப்பு ஓசை காதைபிளக்க, குலவ சத்தம் சேர்த்து ஒலிக்க முறுக்கிய மீசையோடு ஒரு கையில சாட்டையோடு மறுகையில அறுவாளோடு ஊர்சூழ ஐயனாராய் ஆடிவந்தார் வீரய்யா!..
ஐயனாரு கோயில்ல கிடாவெட்டி விமர்சையா பொங்கல் வச்சு கொண்டாடினாலும் அங்க இருக்கிறவர்களுக்கு மத்தியில் பிரகாசமாய் ஒளிர்ந்தது பச்சை பசேல் கிராமமும் அதனோடு கவிதாவும்.
இலைகளையும் கிளைகளையும் எங்கெங்கோ நாம் பரப்பினாலும் நமது வேர்கள் நம் சொந்த மண்ணை விட்டு விடக் கூடாது என்ற ஏக்கத்தை பூர்த்தி செய்தவனாக புது அவதாரம் எடுத்திருந்தான் ஐயனாரு வாசலிலே அந்த வானம் பார்த்த பூமியின் அடுத்த தலைமுறை விவசாயி!..
“இன்னும் வானம் பார்த்த பூமிகளை காத்து நிற்பது ஐயனாரு மட்டுமில்லை அவரோடு சேர்ந்த வீரய்யா ராசாக்களுமே”.
முற்றும்.
படஉதவி: @sarifayomie