தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், “மரம் நல வாரியம் என்று ஒன்று அமைத்து மரங்கள் வளர்ப்பதை ஊக்குவித்து” மரங்களை வெட்டுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதிக்க வேண்டும்.
தமிழக விமான நிலையங்களின் பொதுவான அடையாளம், மொட்டை வெயிலும், நெட்டைச் சுவர்களும் தான். கோவையில் விமான நிலைய சாலையில் மட்டும் தான் கொஞ்சம் மரங்கள் மிச்சம் இருந்தன. அதையும் வெட்டி சாலையை விரிவாக்கம் செய்துவிட்டனர்.
710 சதுர கிலோ மீட்டர் மட்டும் பரப்பளவு உள்ள சிங்கப்பூரில் ,மொத்தப்பரப்பில் 23 சதவீதம் மழைக்காடுகளைக் கொண்டிருக்கிறது அந்த சின்ன தேசம். இயற்கை சமன்நிலைக்கு ஒரு தேசத்தின் பரப்பில், 33 சதவீதம் வனமாக இருக்க வேண்டுமென்கிறது யுனெஸ்கோ.
அந்த இலக்கை எட்ட, 2002ல் “சிங்கப்பூர் பசுமைத்திட்டம் 2012′ என்ற திட்டத்தை துவக்கியது அந்நாட்டு அரசு. தனியார், பொதுமக்கள், பொதுத்துறை நிறுவனங்கள் பங்களிப்புடன் (3பி-பீப்பிள்-பிரைவேட் அண்ட் பப்ளிக் செக்டார்ஸ்) இதற்கான பசுமைப் பணிகளைத் துவக்கி அதில் பெருமளவு வெற்றியையும் கண்டுவிட்டது.
மார்ச் 2009 வரை, 100 கி.மீ., தூரத்துக்கு இரு புறமும் பசுமைப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. 2030க்குள் 360 கி.மீ., தூரத்துக்கு அதாவது 2,225 ஏக்கர் பரப்பை பசுமைப் பிரதேசமாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்காகவே தேசிய உயிர்க்கோள ஆய்வு மையத்தை அமைத்து இந்த பணிகளை வழி நடத்தி வருகிறது அந்த அரசு.
இந்திய ஒன்றியத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சாலை விரிவாக்கத்துக்காக வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களின் எண்ணிக்கை பல லட்சங்கள் இருக்கும். பதிலுக்கு நடப்பட்ட மரக்கன்றுகள், சில ஆயிரம் இருப்பது கூட சந்தேகமே. தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை, மரம் வெட்டும் துறையாகவே மாறி விட்டது.
ஒரு மரத்தை வெட்டினால், அதற்குப் பதிலாக 10 மரக்கன்று நட வேண்டுமென்று ஐகோர்ட் கூறியுள்ள கருத்து, வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கிறது. “குளுகுளு’ நகரான கோவையில் கடந்த 4 ஆண்டுகளில் 5,000க்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. பதிலாக 100 மரக்கன்றுகள் கூட வைக்கப்படவில்லை.
ஆனால், சிங்கப்பூரில் மிக அவசியமாக ஒரு மரத்தை வெட்ட வேண்டிய நிலை இருந்தாலும், கிளைகளை மட்டும் நறுக்கி விட்டு மரத்தை வேரோடு தோண்டி எடுத்து, அப்படியே வேறு இடத்துக்கு “டிரெயிலர்’ மூலமாகக் கொண்டு சென்று மீண்டும் நட்டு அதற்கு உயிர் கொடுத்து விடுகின்றனர்.
சமீபத்தில், “ஆர்ச்சடு’ என்ற பகுதியில் இதேபோல ஒரு மரத்தின் கிளைகளை சிலர் வெட்டிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, இந்த உண்மை தெரிந்தது. அங்கே சாலையோரம் வைக்கின்ற மரங்களும், சூழலுக்கு உகந்த மரங்களாகவே உள்ளன. அவை பெரிதாக இடத்தையும் அடைப்பதில்லை.
வானுயர கட்டடம் கட்டினாலும் அதற்கு அருகில் இத்தனை மரங்கள் வளர்க்க வேண்டுமென்கிறது அந்நாட்டின் விதி. சாலை விரிவாக்கம், புதிய கட்டடம் என்றாலே, முதல் வேலையாக அங்கிருக்கும் பச்சை மரங்களை வெட்டுவதே நம் தேசத்தில் எழுதப்படாத விதி. மாதம் மும்மாரி மழை, திரும்பிய திசையெல்லாம் பசுமை இருப்பதால்தான்.
அங்கே கொளுத்தும் வெயில் காலத்திலும் மாதம் 3 முறையாவது மழை தட்டி எடுக்கிறது. நம்மூரைப் போலவே ஏப்ரல், மே மாதங்கள் தான் அங்கேயும் உச்சக்கட்ட கோடை காலம். அங்கேயும் வெயில் அடிக்கிறது. ஆனால் அதில் உக்கிரமில்லை, காற்றில் வறட்சி இல்லை, சாலையில் அனல் பறப்பதில்லை. காரணம் மரங்கள்.
மரங்கள் பாதுகாப்புக்கு என வாரியம் ஒன்றை அமைத்து வருங்கால நம் சந்ததிகளை காப்பாற்ற வேண்டும்.
—
கட்டுரை:
வினோத் ஜெயசீலன்,
மன்னார்குடி