தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் நெறியாளர் பேராசிரியர் த. செயராமன் அவர்கள் தன்னுடைய சமூக ஊடகக்கணக்கில் யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு – நாற்பதாவது நினைவு நாள் தொடர்பாக ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதை தங்கள் பார்வைக்கு இங்கு பகிர்கிறோம்.
நூலக எரிப்பு தொடக்கம்! தமிழீழத்தாயக விடுதலையே நிறைவு!
1948 இல் தொடங்கி, பல்வேறு இன ஒடுக்குமுறைகளைச் சந்தித்த ஈழத்தமிழினத்தின் இன அடையாள அழிப்பின் உச்சக்கட்டம் 1981 ஜூன்1 அன்று நடந்தேறியது. மே 31 அன்று தொடங்கிய வன்முறையின் அடுத்த கட்டமாக ஜூன் 1 அன்று யாழ்ப்பாணப் பொது நூலகம் முற்றாக எரிக்கப்பட்டது. உலக அளவில், இனவெறிபிடித்த ஒரு பேரினம் நடத்தும் பண்பாட்டுப் பெரு வன்முறைக்கு சான்றாக யாழ்ப்பாண பொது நூலக எரிப்பு விளங்குகிறது.
1930ஆம் ஆண்டு ஜெர்மனி பேளின் வீதியில், நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டன. நாசிகளின் இந்த இன அழிப்புச் செயல்பாட்டை உலக நாடுகள் கண்டனம் செய்தன. ஆனால் சிங்கள இனவெறியர்களின் யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்புக்கு இணையாக இன்னொரு பண்பாட்டு அழிப்பு நிகழ்வைக் காட்ட முடியாது.
பல நூற்றாண்டுப் பழமை வாய்ந்த, 16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ், ஆங்கில நூல்களும், பழம் ஓலைச்சுவடிகளும் எரிந்து போயின. 1933 இல் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்நூலகம் பழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் 1800களில் வெளியிடப்பட்ட பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவற்றைக் கொண்டிருந்தது. 97,000 அரிய நூல்களைக் கொண்டிருந்த, தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் யாழ்ப்பாணப் பொது நூலகம் ஆகும். தமிழினத்தின் பெருமிதமாகவும், நீண்ட வரலாற்றின் அடையாளமாகவும், தொன்மைப் பண்பாட்டுப் பெட்டகமாகவும் விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வு, சிங்களப் பேரினவாதிகளுடன் ஒரே நாட்டில் தமிழர்கள் இனி சேர்ந்து வாழ முடியாது என்பதைத் தெளிவாகக் காட்டியது.
யாழ்ப்பாண நூலக எரிப்பை இலங்கை அமைச்சர்கள் காமினி திஸ்ஸ நாயக்கா மற்றும் சிறில் மாத்யூ போன்றோர் பங்கேற்று நடத்தினர். தமிழர்களின் உயிர்களையும், உடைமைகளையும் அழித்துக் கொண்டிருந்த சிங்களப் பேரினவாதிகள், தமிழர்களின் வரலாற்றையே அழிக்கத் துணிந்ததை இந்நிகழ்ச்சி காட்டியது. யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட செய்தியைக் கேட்டதும் தாவீது அடிகளார் நெஞ்சு வலியால் துடிதுடித்து இறந்து போனார்.
தமிழ்தேசிய இனப் போரின் தொடக்கத்தை இது முன்னறிவித்தது. இது ஆத்திரத்தில் நடந்த திடீர் நிகழ்வல்ல. இந்த வன்முறை திட்டமிடப்பட்டது. 1981 மே 26 அன்று இலங்கையின் வடபகுதி பிரதிக் காவல்துறை மா அதிபர் பி. மகேந்திரம் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பி.டி. குணவர்தனா மூன்று வாரங்களுக்கு மட்டும் நியமனம் செய்யப்பட்டார். வட இலங்கையில் மே 31 முதல், காவல்துறையினரும், சிங்களக் காடையர்களும் வரைமுறையற்ற வன்முறையில் இறங்கி, பத்திரிக்கை அலுவலகங்களையும், குடியிருப்புகளையும் எரித்தனர். இரவு 10 மணி அளவில் யாழ்ப்பாண நூலகத்தையும் எரித்தனர். தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட வன்முறைக் கும்பல் நூலகத்தை எரித்தது. நூலகத்தில் இருந்து 700 மீட்டர் தூரத்திற்குள் காவல் நிலையம் இருந்தும் காவல்துறை எரிப்பதைத் தடுக்க முன்வரவில்லை. தீயணைப்பு வண்டிகளையும் காவல்துறையே தடுத்து நிறுத்தி, யாழ்ப்பாண நூலகம் முற்றிலும் எரிய அனுமதித்தது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கை அரசுக்குச் சொந்தமான ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகை யாழ்ப்பாணப் பொது நூலகத்தை அன்றைய அரசே குண்டர்களை அனுப்பி நடத்தியதாக ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டது. இந்த வன்முறையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேரடியாகத் தொடர்பு இருந்தது. அரசுத் தலைவர் ரணசிங்க பிரேமதாசா அவருடைய கட்சித் தலைவர்கள் சிலர் தாம் இதற்குக் காரணம் என்று குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் வன்முறையாளர்களைக் கண்டறிய சுதந்திரமான விசாரணை நடத்துங்கள் என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் உண்மை அறியும் குழுத் தலைவர் ஓர்வில் எச். ஷெல் கேட்டுக்கொண்டார். ஆனால் அப்படி ஒரு விசாரணை நடத்தப்படவும் இல்லை; இன்றுவரை எவரும் தண்டிக்கப்படவும் இல்லை.
1984இல், நூலகக் கட்டிடம் புனரமைக்கப்பட்டது. மீண்டும் 2004- ஆம் ஆண்டு கட்டிடம் புனரமைக்கப்பட்டது. ஆனால் அழிந்துபோன நூல்களைத் திரும்பப் பெறவே இயலவில்லை.
யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு இன அழிப்பின் அடையாளமாகும், பல்வேறு வகையில் ஒடுக்குமுறைகளையும் இன அழிப்பையும் சந்தித்து, இறுதியாக 2009 இல் முள்ளிவாய்க்காலில் பேரழிவைச் சந்தித்த ஈழத் தமிழினம், இதற்கு மேல் சிங்களர்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்பதை தெளிவாக உணர்ந்து இருக்கிறது. இதைத் தெளிவாக உணர்ந்த பின்தான் தங்களுடைய விடுதலைப் போரையே நடத்தினார்கள். . இவ்வளவு கொடுமைகளுக்குப் பிறகும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் பிரச்சினைக்கான தீர்வைத் தேடக்கூடிய பிழைப்புவாத அரசியல்வாதிகள் இலங்கையிலும் உண்டு, இந்தியாவிலும் உண்டு. ஆனால் ஈழத் தமிழர்களுக்கான ஒரே தீர்வு இறையாண்மையுள்ள தமிழீழம் அமைப்பது தான்! ஈழத்தமிழ்த் தேசிய இனம் தன்னுடைய இறையாண்மையுள்ள தேசத்தை அமைத்துக்கொள்ள முழு உரிமை பெற்றது. யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு தொடங்கிவைத்த தமிழீழ விடுதலைப் போர் இறையாண்மையுள்ள தமிழ்த் தேசத்தை அமைப்பதில்தான் நிறைவுறும்!
தமிழீழம் அமையட்டும்!
தமிழினம் தலை நிமிர்ந்து வாழட்டும்!
—
கட்டுரை:
– பேராசிரியர் த. செயராமன்,
நெறியாளர்,
தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்
01.06.2021.