Home>>அரசியல்>>தமிழ்வழிக் கருவறைப் பூசைக்கு சட்டம் இயற்றுக!
அரசியல்செய்திகள்தமிழ்நாடுவரலாறுவேலைவாய்ப்பு

தமிழ்வழிக் கருவறைப் பூசைக்கு சட்டம் இயற்றுக!

தமிழ்வழிக் கருவறைப் பூசைக்கு சட்டம் இயற்றுக! சக்கியின் ஈசா மையத்தை அரசுடைமை ஆக்குக!

தெய்வத் தமிழ்ப் பேரவை தமிழ்நாடு தழுவிய கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
தி.பி. 2052 ஆனி 19 – 03.07.2021 – சனிக்கிழமை
காலை 10 மணி முதல் 10.30 மணி வரை
==========================================

தமிழ்நாடு அரசே!

1. தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் தமிழ் மந்திர வழிபாடுதான் காலம் காலமாக நடந்து வந்தது. இடையில் புகுந்த வெளியார் தெய்வத்தமிழை இழிவுபடுத்தி ஒதுக்கி விட்டு, சமற்கிருதத்தைத் தமிழர் வழிபாட்டில் திணித்தனர்.

இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோயில்களில் அன்றாடக் கருவறைப் பூசைகள், விழாக்கால சிறப்புப் பூசைகள், வேள்விச் சாலைகள், கோபுரக் குடமுழுக்குகள் அனைத்திலும் தமிழ் மந்திரம் சொல்லியே வழிபாடும் அர்ச்சனையும் நடைபெற வேண்டும்.

விரும்பிக் கேட்பவர்களுக்கு மட்டுமே கருவறைப் பூசையில் சமற்கிருதம் பயன்டுத்தப்பட வேண்டும்.

2. தமிழ்வழிப் பூசகர் / அர்ச்சகர்

திருக்கோயில்களில் பூசை / அர்ச்சனை செய்வதற்குரிய மொழி மற்றும் சாதி என்று எதையும் எந்த ஆகமமும் நிபந்தனையாக்கவில்லை; பரிந்துரைக்கவில்லை. இந்த உண்மையை உச்ச நீதிமன்றம் 2015 தீர்ப்பில் கூறியுள்ளது.

இத்தீர்ப்பைச் செயல்படுத்திடத் தமிழ்நாடு அரசு முதல் கட்டமாக மாவட்டத்திற்கொரு பூசகர் / அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியைத் திறக்க வேண்டும். அதில் தமிழ் இந்துவில் உள்ள அனைத்துச் சாதியிலிருந்தும் தகுதியுள்ள மாணவர்களைச் சேர்த்து, தமிழ்வழிப் பூசகர் / அர்ச்சகர் பயிற்சி கொடுத்து, சான்றிதழ் அளித்து, அவர்களை இந்து சமய அறநிலையத்துறைக் கோயில்களில் பூசகராக / அர்ச்சகராகப் பணியமர்த்த வேண்டும். தகுதியுள்ள பெண்களையும் சேர்த்துப் பயிற்சி கொடுத்துப் பூசகராக / அர்ச்சகராக அமர்த்த வேண்டும்.

சமற்கிருதப் பூசகர் / அர்ச்சகர் பயிற்சிக்குத் தனியே ஒன்றிரண்டு பள்ளிகளைத் தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும். இதில் வாரிசு முறையை நீக்க வேண்டும்.

ஏற்கெனவே தமிழ்நாடு அரசு பயிற்சி கொடுத்துப் பட்டயம் பெற்றுள்ள அனைத்துச் சாதி பூசகர்கள் / அர்ச்சகர்கள் சற்றொப்ப 200 பேர் பணியமர்த்தம் இல்லாமல் துன்புறுகின்றனர். அவர்களை உடனடியாகப் பணியமர்த்தம் செய்ய வேண்டும்.

3. அறநிலையத்துறை சீர்திருத்தத்திற்கு ஆணையம்

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தை செயலூக்கம் மிக்கதாகவும், ஊழல் இல்லாததாகவும் அரசியல்வாதிகளின் சட்டவிரோதத் தலையீடுகள் இல்லாததாகவும், புத்தாக்கம் செய்ய வேண்டியது அவசரத் தேவையாகும்.

இந்து சமய அறநிலையத்துறைக் கோயில்களின் சொத்துகள், நிதிகள் அனைத்தையும் சேதாரமில்லாமல் பாதுகாத்து, கோயில் பணிகளுக்கும் அறப் பணிகளுக்கும் பயன்படும்படிச் செய்ய வேண்டும்.

உரிய வருமானமில்லாத திருக்கோயில்களிலும், முறையான பூசைகள் நடைபெற சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம், திருக்கோயில்கள் செயல்பாடுகள் முதலியவற்றில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்க தமிழ் இந்து சமயத்தில் மெய்யான ஈடுபாடுள்ள ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்துப் பரிந்துரைகள் பெற வேண்டும். அப்பரிந்துரைகளில் செயல்படுத்த வேண்டியவற்றை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.

4. சிவநெறிச் சிதைப்பு – சூழல் அழிப்பு – ஊழல் வளர்ப்பு
ஈசா மையத்தை அரசுடைமை ஆக்குக!

ஈசா மையத்திலுள்ள தியான லிங்கம் தமிழர் சிவநெறிப்படியோ, ஆகமப்படியோ அமைக்கப்பட்டதல்ல!

“தியானலிங்கம் எந்த மதத்தையும் சேர்ந்தது அல்ல; இங்கு விஞ்ஞான முறைப்படி யோகா வழங்கப்படுகிறது” என்று 09.12.2014 அன்று கோவை மண்டல நகர் மற்றும் ஊரமைப்புத் துறை ஆணையர்க்கு எழுதிய அனுமதி கோரும் மடலில் சக்கி வாசுதேவ் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இம்மனுவின் நகல் நம்மிடம் உள்ளது. அதேபோல், தமிழர் சிவநெறிக்குப் புறம்பான வடிவமைப்பில் மார்பளவுச் “சிவன்” சிலை ஒன்றை 112 அடி உயரத்தில் நிறுவி, அதற்குப் புதிதாக “ஆதியோகி” என்று பெயர் கொடுத்துள்ளார். ஆனால், இப்போது ஈசா மையம்தான் இந்து மதப் பாதுகாப்புப் பாசறை என்று நாடகமாடுகிறார்!

வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள சொந்த நிலத்தில்கூட அத்துறையின் விதிகளுக்குப் புறம்பாக கட்டங்கள் கட்டக்கூடாது. யானை வலசைப் பாதைகளில் வனத்துறை அனுமதி இல்லாமல் வானளாவிய கட்டடங்களை சக்கி எழுப்பியுள்ளார் என்று போலாம்பட்டி வனச்சரக அலுவலர் எம்.எஸ். பார்த்திபன் 19.01.2012 நாளிட்டு கோவை மாவட்ட வன அலுவலர்க்குப் புகார் கொடுத்துள்ளார். பழங்குடி மக்களின் பரம்பரை நிலங்களை அவர்களுக்குப் பல நெருக்கடிகள் கொடுத்து வாங்கியுள்ளார் சக்கி. இந்திய அரசின் கணக்குத் தணிக்கைத் தலைமை ஆணையர் அறிக்கை சக்கியின் சட்டமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று வினா எழுப்பியுள்ளது (மார்ச்சு 2017).

காவிரி உரிமை மீட்பிலிருந்து தமிழர்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, கரை நெடுக மரம் நட்டால் 12 மாதங்களும் காவிரியில் வெள்ளம் ஓடும் என்று புரட்டுப் பரப்புரை செய்தார் சக்கி. “காவிரிக் கூக்குரல்” என்ற அந்தப் பரப்புரையில் சற்றொப்ப 11 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழிகளில் குவித்துள்ளார். இது தொடர்பாகக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சக்கியின் மீது வழக்கு விசாரணையில் உள்ளது.

சக்கி வாசுதேவ் ஒரு போலிச் சாமியார்; யோகா மையம் என்ற பெயரில் அவர் நடத்துவது, போலி ஆன்மிகப் பெருங்குழும வேட்டை நிறுவனம். பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல்வழியில் திரட்டியுள்ளார்.

தங்கள் பிள்ளைகளை மன வசியப்படுத்தி, மயக்கி, அவர்களின் தலையை மொட்டை அடித்துத் தங்களிடமிருந்து பிரித்து, ஈசா மைய அடிமைகள் ஆக்கி விடுகிறார் என்று பெற்றோர்கள் பலர் காவல் நிலையங்களில் புகார்கள் கொடுத்துள்ளார்கள். சக்கி வாசுதேவின் சமூக விரோதச் செயல்கள் மேலும் பல இருக்கின்றன.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக சக்கியின் ஈசா மையத்தை அரசுடைமையாக்கி, இந்து அறநிலையத்துறையில் சேர்த்து, உண்மையான சிவநெறி வழிபாட்டு வளாகமாக மாற்றிடுமாறு தெய்வத் தமிழ்ப் பேரவை கேட்டுக் கொள்கிறது!

5. பெருந்தொற்று நிதி உதவி

கொரோனா பெருந்தொற்று துயர்துடைப்பு நிதி உள்ளிட்ட உதவிகளை இந்து அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு வெளியே உள்ள கோயில்களில் பூசகர்களாக / அர்ச்சகர்களாக பணிபுரிவோர்க்கும், தமிழ்வழியில் ஆன்மிகச் சடங்குகள் குடமுழுக்கு போன்ற நிகழ்வுகள் நடத்துவோர்க்கும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.

தமிழ்நாடெங்கும் கோரிக்கை முழக்கம் எழுப்புவோம்!
தமிழர் ஆன்மிகம் காப்போம்!


செய்தி உதவி:
நிரஞ்சன், மன்னார்குடி.

Leave a Reply