காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு பெரியசாமி தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழப்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காவல்துறையினர் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காவல் நிலையத்தை 200க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் மாவட்டம் இடையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையன் என்கிற முருகேசன் மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை கருமந்துறைக்கு நண்பர்களுடன் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்புகிற வழியில் இடையப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை நிறுத்தியுள்ளனர். அப்பொழுது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில், முருகேசனை சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் காவல்துறையினர் தாக்கியுள்ளனர். இதில் சாலையில் விழுந்த முருகேசனுக்கு பின்மண்டையில் காயம் ஏற்பட்டு மயங்கி உள்ளார்.
மயங்கிய நிலையில் இருந்த முருகேசனை 108 அவசர ஊர்தி மூலமாக தும்பல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி அளித்த பின்னர், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த உறவினர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் மூன்று காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை தாக்கியதில் உயிரிழந்த மளிகை கடை உரிமையாளர் முருகேசனுக்கு, அன்னக்கிளி என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
சாத்தான்குளம் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினமான நேற்று, சேலம் போலீசாரால் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்ட நிலையில் முருகேசனை காவல்துறையினர் தாக்கும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இக்காணொலியால் காவல்துறையின் இச்செயல் கண்டனத்திற்குரியது என்றும் தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும் சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தங்கள் வேதனையையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
—
செய்தி சேகரிப்பு:
இராசசேகரன்,
மன்னார்குடி.