Home>>அரசியல்>>டெல்கி உழவர்கள் போராட்டம் – 270வது நாள்
அரசியல்இந்தியாசெய்திகள்வேளாண்மை

டெல்கி உழவர்கள் போராட்டம் – 270வது நாள்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா)

செய்தி வெளியீடு:
270வது நாள், 23 ஆகஸ்ட் 2021.

  1. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கரும்பு விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது – தேக்க நிலைக்கு நாளைத் தீர்வு எதிர்பார்க்கப்படுகிறது!
  2. ஒன்பது நீண்ட மாதங்கள் அமைதியான போராட்டம் நிறைவுற்றதைக் குறிக்கும், ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும், தேசிய மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன – எஸ்கேஎம்!
  3. உத்தரபிரதேச அரசு அமைதியான எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் – இத்தகைய போராட்டங்கள் அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமை!
  4. அரியானா ஹிசார் மாவட்டத்தில், ஜேஜேபி சட்டமன்ற உறுப்பினர், போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டார்!

பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள்தனோவலி அருகே ஜலந்தர் தேசிய நெடுஞ்சாலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று 4வது நாளாக நடைபெறுகிறது. இந்தப் பத்திரிகை குறிப்பு வெளியாகும் நேரத்தில், விவசாய சங்கத் தலைவர்கள், கரும்பு கமிஷனர் அலுவலகத்தின் பிரதிநிதிகள் மற்றும் வேளாண் பல்கலைக்கழக நிபுணர்களிடையே, ஜலந்தர் மாவட்ட ஆளுநர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பின் விளைவாக, பஞ்சாப் முதல்வர் நாளை ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் மாநில அரசுடன் சண்டிகரில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எதுவும் ஏற்படவில்லை. விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர். தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஒரு ரயில் பாதையைப் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். விவசாய சங்கங்களால் கொடுக்கப்பட்ட உற்பத்தி செலவுகளை அரசு ஏற்கத் தயாராக இல்லை. கரும்புக்கான மாநில பரிந்துரை விலையில் (SAP), தங்களுடைய சொந்த ஆராய்ச்சியாளர்களின் தரவுகள், பயிரின் உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதாகக் காட்டியபோதிலும், பஞ்சாப் அரசு எந்தவிதமான உயர்வையும் செய்யவில்லை.

மாநில அரசு பயிர்களின் பல்வகைப்படுத்துதல் பற்றி பேசுகிறது. இத்தகைய பல்வகைப்படுத்துதலுக்கு விவசாயிகள் முயற்சிக்கின்ற போதிலும், விவசாயிகளுக்கு மாநில அரசு போதிய ஆதரவு வழங்காமல் இருப்பது கரும்பு உற்பத்தியாளர்களைக் கோபமும், கவலையும் அடைய செய்கிறது. அண்டை மாநிலமான அரியானாவுடன் ஒப்பிடும்போது, பஞ்சாப் மாநில அரசு அதன் விலையை மிகக் குறைவாக வைத்திருப்பதோடு, நிலுவைத் தொகையையும் இதுவரை வழங்கவில்லை. இதற்கிடையில், பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் நவ்ஜோத் சித்து, மாநில பரிந்துரை விலை சிறப்பாக இருக்க வேண்டும் என்றும், சாகுபடி செலவு அதிகமாக இருக்கின்ற போதும், பஞ்சாப் மாநிலத்தின் பரிந்துரை விலை அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களை விட குறைவாக இருப்பது விந்தையானது என்றும் ட்வீட் செய்திருக்கிறார்.

எஸ்.கே.எம். இன் ஆகஸ்ட் 26-27 அகில இந்திய கருத்தரங்கிற்கு சிங்கு பார்டரில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எஸ்.கே.எம். இன் உறுப்பு அமைப்புகளிடமிருந்து உற்சாகமான பதில்கள் கிடைத்துள்ளன மற்றும் நூற்றுக்கணக்கான விவசாயி அமைப்புகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆகஸ்ட் 26 அன்று டெல்லி எல்லைகளில் நடைபெற்று கொண்டிருக்கும், அமைதியான, நீண்ட போராட்டம் ஒன்பது மாதங்களை நிறைவு செய்கிறது. இந்தப் போராட்டம், இந்தியா முழுவதும் போராட்டங்களால் ஆதரிக்கப்பட்டிருக்கிறது. இது பஞ்சாபின் பல இடங்களில் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக நடைபெறும் போராட்டமாக இருக்கிறது. (இந்த விவசாயிகள் போராட்டம் பஞ்சாபில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக நடைபெறுகிறது).

அரியானாவின் பாஜக-ஜேஜேபி அரசு, இந்த வரலாற்று சிறப்பு மிக்க விவசாயிகள் போராட்டத்தின் தொடக்கத்திலிருந்தே, விவசாயிகளுக்கு விரோதமாகவே இருந்துள்ளது. *அரியானா அரசுதான் 2020 நவம்பரில், தங்கள் துயரங்களையும் கோரிக்கைகளையும் மத்திய அரசிடம் முன்வைப்பதற்காக தேசிய தலைநகரை நோக்கிச் செல்லும் போராட்டக்காரர்களின் வாகனப் பாதையில், பல தடைகளை ஏற்படுத்தியது. டெல்லிக்குச் செல்லும் விவசாயிகள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டதோடு, அரியானாவில் பல சட்டவிரோத தடுப்புகளை அமைத்ததோடு, கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து, கடந்த எட்டு மாதங்களில், மாநில அரசு விவசாயிகளை அடக்குவதற்குப் பல புதிய சட்டங்களை உருவாக்கியும், சுமார் 40000 விவசாயிகள் மீது வழக்குகளைப் பதிவு செய்தும், தனது சொந்த குடிமக்கள் மீது போரை தொடுத்துள்ளது.

விவசாயிகளின் போராட்டம் மாநிலத்தில் அதிக பலத்தையும் வேகத்தையும் பெற பெற, கட்டார் அரசாங்கத்தின் பதட்டம் பல வழிகளில் வெளிப்படுகிறது. மாநிலத்தில் உள்ள பிஜேபி மற்றும் ஜேஜேபி தலைவர்கள் பொதுமக்களை எதிர்கொள்ளவும், அவர்களின் விவசாயிகள் விரோத நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்கவும் பயப்படுகிறார்கள் என்பது தெளிவாகிறது.

உத்தரபிரதேசத்தின் பாஜக அரசு அதன் மக்கள் விரோத நிலைப்பாட்டில் குறைவாக ஒன்றும் இல்லை. மாநிலத்தில் விவசாயிகள் இயக்கம் வலுப்பெற்று வரும் நிலையில், யோகி ஆதித்யநாத் அரசு மேலும் பதற்றமடைகிறது. சமீபகாலமாக உ.பி.யில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

பிலிபித்தில், அமைச்சர் பல்தேவ் சிங் அவுலாக்கிற்கு எதிராக, அமைதியான முறையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 58 விவசாயிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலத்தில் உள்ள விவசாய சங்கங்கள் கோருகின்றன. இது குடிமக்களின் அமைதியான போராட்டத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அரியானாவில், ஜேஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோகி ராம் சிஹாக், முன்னதாக விவசாயிகள் அளித்த இறுதி எச்சரிக்கையை ஏற்றுக்கொண்டு, நேற்று படோபட்டி டோல் பிளாசாவில் விவசாயிகளிடம் மன்னிப்பு கோரினார். இது, ஹிசார் மாவட்டத்தில் உள்ள சர்சாட் கிராமத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி எம்எல்ஏவின் தொண்டர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு, 58க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி நடைபெற்றது.


அறிக்கையை வழங்கியவர்கள்:

பல்பீர் சிங் ராஜேவால்,
டாக்டர் தர்ஷன் பால்,
குர்ணம் சிங் சாருனி,
ஹன்னன் மொல்லா,
ஜக்ஜித் சிங் டல்லேவால்,
ஜோகிந்தர் சிங் உக்ரஹான்,
சிவகுமார் சர்மா ‘காக்காஜி’,
யுத்வீர் சிங்,
யோகேந்திர யாதவ்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com

வெளியீடு : AIKSCC, தமிழ்நாடு.

Leave a Reply