“மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக ஒன்றிய அரசு செயல்படக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது” என்று அதன் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதை கீழே தங்களுக்கு பகிர்ந்துள்ளோம்.
மேக்கேதாட்டில் கர்நாடகம் அணை கட்டினால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குக் கர்நாடகத்திலிருந்து திறக்க வேண்டிய தண்ணீரை மட்டுமின்றி, அம்மாநில அணைகளிலிருந்து மிகையாக வெளியேறும் காவிரி வெள்ள நீரையும் கர்நாடக அரசு தேக்கிக் கொள்ளும்.
இதன் காரணமாகவே, மேக்கேத்தாட்டில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆனால், தமிழ்நாட்டின் தொடர் எதிர்ப்பையும் மீறி, மேக்கேத்தாட்டிற்கு அனுமதி அளிக்கும் வேலைகளை இந்திய அரசு பார்த்து வருகிறது என ஏற்னகவே தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டியிருந்தது.
அதற்கு சான்றாக, கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணைகட்டுவதற்குரிய முன் ஒப்புதல்களை ஒன்றிய அரசு கொடுத்து விட்டது என்ற உண்மை 26.07.2021 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய அரசின் நீராற்றல் துறை அமைச்சர் கசேந்திர சிங் செகாவாத் கூறியிருந்ததை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டியிருந்தது.
ஒன்றிய அரசின் சூழ்ச்சியும், தமிழன விரோதப் போக்கும் தற்போது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மூலமாக மீண்டும் அம்பலப்பட்டுள்ளது.
அதாவது, மேகேத்தாட்டு அணையை எப்படியாவது கட்டியே தீர வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, டெல்லியில் ஒன்றிய நீர்வள அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை, காவிரி ஆற்றின் குறுக்கே கேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக் கூட்டத்தில் விவாதிக்க ஏற்பாடு செய்வதாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் உறுதியளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகேத்தாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதிப்பது சாத்தியமே இல்லை என்ற இச்சூழலில், நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் உறுதியளித்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.
இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், மேக்கேத்தாட்டு அணைகட்ட அனுமதி கொடுக்காத நிலையில், அதே அரசின் இன்னொரு பிரிவான நீராற்றல் துறை இவ்வளவு வேகமாக அந்த அணைக்கு அனுமதி கொடுத்து செயல்படுவது ஏன்?
காவிரி நீர் வரவில்லை என்றால் 22 மாவட்டங்களுக்கு தமிழ்நாட்டில் குடிநீர் இல்லை, 15 மாவட்டங்களில் பாசனம் இல்லை.
இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், கர்நாடக அரசால் முறைகேடான வழியில் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள ஒன்றிய அரசு முயற்சி செய்வது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.
எனவே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக் கூட்டத்தில் மேகேத்தாட்டு அணை விவகாரம் குறித்து ஆலோசிக்கக் கூடாது.
மேலும், தமிழ்நாட்டின் தொடர் எதிர்ப்பையும் மீறி, மேக்கேத்தாட்டிற்கு அனுமதி அளிக்கும் வேலைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டால், அரசியல் கட்சிகளையும், விவசாய அமைப்புகளையும் ஒன்று திரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.