புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து சிறுகச்சிறுக சேகரித்து எழுப்பிய கோயில்கள் அனைத்தும் இன்று இந்துக் கோயில்கள் என்ற அடையாளத்துக்குள் சிக்கவைத்து தமிழர் அடையாளத்தை திருடுகிறது ஆரிய இந்தியா.
முருகன் கோயில் பெயர்கள் ஸ்ரீ சுப்பிரமணி கோயில் என்ற பெயர் மாற்றப்படுகிறது. பெருமாள் கோயில்கள் ஸ்ரீவெங்கடாஜலபதிஸ்தலம் என்று பெயர் மாற்றப்படுகிறது.
மெல்ல மெல்ல தமிழர் அல்லாதவர்கள் கோயிலின் உயர் பொறுப்புகளை கைப்பற்றி ஆரியத்திற்கு கங்காணி வேலை செய்து வருகிறார்கள். அரசியல் அதிகாரம் மட்டுமல்ல மெய்யியல் அதிகாரமும் தமிழர்களிடம் இருத்தல் வேண்டும்.
இருநூறு வருடங்களுக்கு முன்பு பஞ்சத்தின் காரணமாக தமிழகத்திலிருந்து மொரீசியஸ் ரீயூனியன் போன்ற இடங்களுக்கு சென்ற தமிழர்கள் தங்கள் மதத்தை தமிழ் என்று தான் பதிந்து உள்ளார்கள்.
வெள்ளைக்காரன் காலத்தில் அனைத்தையும் ஆவணப்படுத்திய இடத்தில் ஆரியர்கள் இருந்ததால் அனைத்தும் இந்து மதம் என்று எழுதி மீண்டும் மீண்டும் சொல்லி நம்மை நம்ப வைத்து விட்டார்கள். உண்மையில் இருநூறு வருடம் முன்பு கூட தமிழர்களிடம் இந்து என்ற மதம் இல்லை.
தமிழே இனம், தமிழே மொழி, தமிழே மதம், தமிழே அனைத்திற்குமான ஒற்றை அடையாளம். இதனை நாம் உணர்ந்து நமது மதத்தை தமிழம் என்று அடையாளப்படுத்த விட்டால் இந்தியத்தின் அரசியல் சூழ்ச்சியிலிருந்து தப்பிக்க இயலாது.
ஈழ சைவ தமிழர்கள் இந்து என்ற மத வரையறைக்குள் இல்லை என்று இந்திய ஒன்றிய அரசே சொல்லிவிட்டது. இந்தியா சொல்வதை தான் உலகம் ஏற்கும் நாமும் அப்படியே ஏற்போம் நாங்கள் இந்து அல்ல புலம்பெயர் தேசத்தில் எங்களால் எழுப்பப்பட்ட எந்தக் கோயிலும் இந்து கோயில் அல்ல.
உலகம் முழுவதும் வாழும் ஈழ தமிழ் உறவுகள் தமிழ் ஆன்மீக கோட்பாடுகளான ஆசீவகம், சைவம், வைணவம், அய்யாவழி, வள்ளலார் வழி, திருவள்ளுவம் வழி என்று அனைத்து தத்துவங்களையும் ஒருங்கிணைத்து தமிழம் என்ற மதத்தை தாங்கள் வாழும் நாடுகள் முழுவதும் பதிவு செய்யும் வேலையை துவங்க வேண்டும்.
சிறுதெய்வ வழிபாடு, முன்னோர் குலதெய்வ வழிபாடு, இயற்கை வழிபாடு, கருப்பு மற்றும் ஐயனார் வழிபாடு என்று எல்லா வழிபாடும் இதில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். தமிழ் வழியில் மந்திரம் ஓதி பூசைகள் செய்ய வேண்டும்.
இதை நீங்கள் செய்துவிட்டால், விரைவில் தமிழ் நாட்டு தமிழர்களும் இதில் வந்து இணைவார்கள்.
இது புது மதம் அல்ல. தமிழர்களின் நடைமுறை மெய்யியலின் ஒற்றை பெயர் கிந்து அல்ல தமிழம். மதமாக மாறாத தமிழர் மெய்யியல் அனைத்தும் தமிழம் என்று அழைக்கப்பட வேண்டும். நான் இந்து அல்ல என்று முழங்குவதைவிட எம்மதம் தமிழம் என்று முழங்குவதே மேல் #எம்மதம்தமிழம். விரைவில் வைதீகமில்லா, வர்ணாசிரமில்லா தமிழர் மதம் தமிழம் என்று உலகெங்கும் பதியப்படும்.
ஐந்திரம் + முருகம் + ஆசீவகம் + அருகம் + நீத்தாரியம் + சிவனியம் + மாலியம் + வள்ளுவம் = தமிழம்
(தென்புலத்தார் வழிபாடு + முன்னோர் வழிபாடு = நீத்தாரியம்)
முழங்கு எம்மதம் தமிழம் என்று முழங்கு
—
கட்டுரை:
இங்கர்சால் (நார்வே)
வள்ளுவர் வள்ளலார் வட்டம்
www.valluvarvallalarvattam.com