Home>>தமிழ்நாடு>>கையறு நூல் வாசிப்பு அனுபவம்
கையறு நூல் வாசிப்பு அனுபவம்
தமிழ்நாடுநூல்கள்மன்னார்குடி

கையறு நூல் வாசிப்பு அனுபவம்

நூல்: கையறு
ஆசிரியர்: கோ. புண்ணியவான்.
காலம்: கி. பி 1940-1945,
பகுதி: மலேசியா, தாய்லாந்து

இரண்டாம் உலகப்போரின் போது தாய்லாந்தையும் மியான்மரையும் இணைக்கும் முயற்ச்சியில் 415 கி.மீ தூர இரயில்பாதை அமைக்க திட்டமிட்டு செயல்படுத்தியது சப்பானிய அரசு. வரலாற்றில் இது மரண இரயில்பாதை என அழைக்கப்படுகிறது. ஏறக்குறைய 1,80,000 தொழிலாளர்கள், 60,000 போர்க்கைதிகள் என கொண்டு செல்லப்படுகிறார்கள். போதிய உணவு இல்லாமை, கொடிய மிருகங்களின் தாக்குதல்கள், விசப்பூச்சிகள் பாம்புகள் கடி, காய்ச்சல், காலரா என போதிய மருத்துவம் இல்லாமலும், சப்பானியரின் மிகக் கொடூரமான தண்டனைகள், தடியடிகள் என்று சகித்துக் கொள்ள முடியாமல் 90,000 தொழிலாளர்களும் 16,000 போர்க் கைதிகளும் இறந்து போயினர். இந்த கொடூர நிகழ்வை கருவாகக் கொண்டு இப் புதினம் பேசுகிறது.

வாசிப்பு அனுபவம்:

ஆங்கிலேயரின் காலனி நாடாக இருந்த மலேசியா நாட்டை சப்பான் கைப்பற்றுகிறது. சியாம்(தாய்லாந்து) நாட்டில் இருந்து பர்மா(மியான்மர்) தலைநகர் ரங்கூனுக்கு இரயிலில் பாதை அமைக்க ஆசை வார்த்தைகள் கூறியும், வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்ட மலாய தமிழர்கள் மற்றும் போர்க் கைதிகள்(சீனர், ஆங்கிலேயர்) என சப்பானிய படைகளால் கொண்டு சென்று அடிமைகளாக வேலை செய்யவைத்து கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள். அவர்கள் படும் பல இன்னல்களையும், துயரங்களையும் அதே வேலையில் சியாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட உறவுகளை நினைத்து வாடும், சப்பானிய படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் மலேசியாவில் உள்ள தமிழ் மக்களின் வேலையின்மையும் பாதுக்காப்பின்மையும் ஒருவேலை உணவுக்கே போராட்ட நிலையையும் இந்த புதினம் கண்முனே காட்டுகிறது.

கடல் கடந்து புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும், தமிழர்களின் வாழ்வியல் பண்பாடு மாறாமல் வாழ்வதே தமிழர்களின் தனிச்சிறப்பு என்பதை கதை ஆரம்பமே கூறும் விதமாக அம்மன் கோவில் திருவிழா, குறிக்கேட்பது, கிடாவெட்டு, தீமிதி என பரவசமாக தொடங்குகிறது.

திருவிழா இறுதி நாளும் சப்பானியர் வருகையும் சரியாக இருக்கிறது, ஆங்கிலேயர் வீழ்த்தப்படுகிறார்கள். ஆங்கிலேயர் மலாயாவில் செய்து வந்த தொழிலான ரப்பர் தோட்டங்கள் சப்பானியர் கைகளுக்கு கிடைக்கூடாது என்று என்னிய துரைமார்கள் அவர் அவர் ரப்பர் தோட்டங்கள் அணைத்தையும் தீயிட்டு கொளுத்திவிடுகிறார்கள்.
ரப்பர் தோட்ட தொழிலுக்கு என வந்த தமிழர்கள் அனைவரும் இனி பிழைப்புக்கு என்ன செய்வது என்று ஒருவேலை உணவுக்கே திண்டாட்ட நிலையில் இருக்க, சப்பானிய அதிகாரிகள் ஆசை வார்த்தைகளைக் கூறி சியாமுக்கு ரயில் சடங்கு (தண்டவாளம்) போட அழைக்கிறார்கள். வேறு என்னச்செய்வது பொழப்பு எதனா கிடைச்சா சரி என்னத்தில் சிலர் செல்ல முற்படுகிறார்கள். அப்போது பீட்டர் (கதையில் ஒரு முக்கிய கதப்பாத்திரமாக வருகிறார் இவர் மூலம் ஆசிரியர் வெகு சிறப்பாக அன்றைய சூழலயும், அரசியலும், மக்களின் மனநிலையும் புதினம் முழுவதும் தூவுகிறார்) ஏற்கனவே நாம ஆங்கிலேயன் சொன்ன ஆசை வார்த்தைய நம்பிதான் இங்க வந்து விழுந்தோம், இப்ப சப்பான் காரன் இதேயே சொல்லி அழைக்கிறான் நல்லதோ கெட்டதோ நம்ம சாதிசனத்தோட, புள்ளக்குட்டிகளோட கஞ்சியோ கூழோ குடிச்சிட்டி இங்கையே இருப்போம் என சியாமுக்கு செல்லமுயலும் தன் தங்கையின் கணவர் சோசப்பை தடுக்கிறார்.

ஆனால் சப்பானிய அதிகாரிகள் நினைத்தபடியாக ஆட்கள் கிடைக்காததால் ஊரில் புகுந்து குழ்ந்தைகள் பெண்கள் முதியவர்களை மட்டும் விட்டுவிட்டு மற்ற அனைத்து ஆண்களையும் வழுக்கட்டாயமாக இழுத்துச்செல்கிறார்கள். மலாயாவில் இருந்து சியாமுக்கு இரயில் மூலம் போர்க் கைதிகளோடு இவர்களும் கடத்தப்படுகிறார்கள்.

ஆண்கள் யாவரும் இல்லாமல் மலாயாவில் வாழும் தமிழ்குடும்பங்கள் நிலை, குழந்தைகளின் உணவுக்காக தாய்மார்கள் படும்பாடு, பீட்டரின் மகன்கள் தெரியாமல் கிழங்கு தோட்டத்திற்க்கு செல்லும் இடங்கள், கங்காணி மயில்வாகனம் சப்பானியர்களால் கொண்டு செல்லப்பட்டபின் தாயில்லா மகள் பார்வதி நிலை, அவளை ராமாயியும் அவள் தகப்பனும் பாதுகாக்கப் படும்பாடு, சதாசிவத்தின் மகள் வயதுக்கு வந்த உடனேயே தாய் தெய்வானயும், பக்கத்துவீட்டு சாலம்மாளும் அவசர அவரசமாக 15 வயது மூத்த உறவுக்காரப் பையன் சேதுவுக்கு திருமணம் செய்துவைப்பதும். ராசாத்தி ஏன் என தாயிடம் கேட்கும் போது நீ சின்னப்புள்ள உனக்கு ஒன்னும் தெரியாது என தாய் சொல்ல! நான் சின்னப்புள்ளனு உனக்கே தெரியுது அப்பறம் ஏன்? என ராசாத்திக் கேட்கும் கேள்வி உலுக்குகிறது. வேலையின்மை, அன்றாட உணவு, வயதுவந்த பெண்பிள்ளைகளின் பாதுகாப்பு என பல விதங்களில் போராட்டமாக இருக்கிறது.

சப்பானியர்கள் கையில் சிக்காமல் தப்பித்த ஆண்பிள்ளைகள் கம்யூனிச புரட்சி படையில் இணைவது. சீனர்கள் கம்யூனிசுடுகள் என்ற வெறுப்புணர்வு, வயது முதிர்ந்த சீனர்களை சப்பானிய அதிகாரி சுட்டுக்கொள்ளும் வன்மத்தில் உணரமுடிந்து.

சியாம் காஞ்சனாபுரியில் வந்திறங்கிய அனைவரையும் குழுக்களாக்க பிரித்து விடுகிறார்கள். ஒரு ஒரு குழுவும் ஒரு குறிப்பிட்ட தூரம் ரயில் பாதை அமைக்கவேண்டும். பின் அவைகளை ஒன்றோடு ஒன்றாக இணைப்பது திட்டம். காஞ்சனாபுரியில் இருந்து பணியிடத்துக்கு நடத்தியே அழைத்துச் செல்கிறார்கள். செல்லும் வழியிலேயே சிலர் இறந்து விடுகிறார்கள். முகாம்களுக்கு சென்ற பிறகு கொடுமை கூடுகிறது.

மூங்கிலில் அமைக்கப் பட்ட கொட்டடிகளில் ஆங்காங்கே வேலை இடத்தில் முகாம்கள் அமைத்து தங்கவைக்கபடுகிறார்கள். சரியான உனவுக்கிடையாது, புழுத்துப்போன அரிசி சோறு, கீரை, கருவாடு, காட்டு சீவசந்துகளின் தாக்குதல், தட்பவெட்ப மாறுபாடு, சரியான மருத்துவ வசதி இன்மை, காலை சூரிய உதையத்துக்கு முன் தொடங்கும் வேலை சூரியன் மறையும் போது முடிகிறது, இடையில் ஓய்வே கிடையாது, வேலையில் சிறிது சுனக்கம் காட்டினாலும் மூங்கில் தடியால் உடலை பிரித்து விடுவான் சப்பானிய அதிகாரி.
காய்ச்சல், காலரா போன்ற வியாதிகளில் பலர் இறப்பது, அடிஉதை தாங்கமுடியமல் வேலை தளத்திலே மயங்கி விழுந்து மடிவது, யாருக்கும் இறுதி மரியாதை என்பதே கிடையாது. இறந்தவர்களின் உடலை பள்ளத்தாக்கில் தூக்கி எறிவது, பிணக்குழிகள் தோண்டி மொத்தமாக போடுவது, சீக்கு வந்தவர்களை கொட்டைகையோடு கொளுத்தி விடுவது என சொல்லமுடியா கொடுமைகள்.

போர் குறித்து சியாமுக்கு சப்பானியர்களை சந்திக்கவரும் நேத்தாஜி இக் கொடுமைகளை பற்றி எதுவும் கேட்காமல் செல்வது, எல்லா தலைவர்களும் ஏதோ ஒன்றில் சமரசம் ஆகிறார்கள் என்பது வருந்தத்தக்க வரலாற்று பிழை. வரலாறுகள் பல இரத்ததாலே எழுதப்படுகிறது. அதிகாரம் உள்ளவன் அவன் கீழ் உள்ள மக்களை அடிமைப் படுத்தியும் கொடுமைபடுத்தியும் சுகம் கண்டுள்ளான் என்பது மனித இனத்தின் அரக்கத்தனத்தை எண்ணி வெட்க்கி நிற்க்க வைக்கிறது. பூவுலகின் சாபக்கேடு மனித இனம்.

மலாயாவில் பதினெட்டாம் கட்டை, ஆர்வார்ட் தோட்டம், பாச்சொக் கடற்கரை, கம்பம், பாலோ
என. சியாமில் சிப்போங் முகாம், தக்கின் முகாம், மேய் குவாங் முகாம் என பல பரிமாணங்களில் புதின நகர்வு, அங்கு என்ன நடந்திருக்கும், இங்கு என்ன நடந்திருக்கும் என ஒவ்வொரு அத்தியாயமும் மிக சுவாரசியமாக பக்கங்களை புரட்ட சிறப்பாக அமைத்திருக்கிறார் ஆசிரியர். தமிழர்கள் எல்லா இடங்களிலும் நொறுக்கப்பட்டுள்ளார்கள் என்பது வேதனையின் உச்சம். ரணங்கள் நிறைந்த சரித்திர பதிவு. வாய்ப்பு கிடைத்தால் வாசியுங்கள்.

நன்றி.


மனோ குணசேகரன்,
புள்ளவராயன் குடிகாடு, 17/08/2021.

Leave a Reply