Home>>அரசியல்>>“திராவிடம்” என்பது ஆரிய அடிமைத்தனம் (முரசொலிக்கு எதிர்வினை)
“திராவிடம்” என்பது ஆரிய அடிமைத்தனம்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

“திராவிடம்” என்பது ஆரிய அடிமைத்தனம் (முரசொலிக்கு எதிர்வினை)

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தன்னுடைய எதிர்வினை கருத்தை தெரிவித்துள்ளார். அவரின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம்.


“தஞ்சாவூர்” என்பதும் “டேஞ்சூர்” என்பதும் ஒன்றுதான், அதனால் நாம் டேஞ்சூர் என்றே சொல்வோம் என்று யாராவது சொன்னால் அதை ஏற்போமா? மாட்டோம்! ஆனால் “தமிழர்” என்பதும் திராவிடர் என்பதும் ஒன்றுதான், எனவே திராவிடர் என்றே நம்மை சொல்லிக் கொள்வோம் என்று ஒரு சாரார் சொல்வதை ஏற்கலாமா? கூடாது.

“ ‘திராவிடம்’ என்றால் எரிகிறதா?” என்ற தலைப்பில் தி.மு.க.வின் அதிகார முறை ஏடான முரசொலி நாளிதழ் 2.9.2021 அன்று ஆசிரிய உரை எழுதியிருந்தது.

“தமிழ்த் தேசியப் பேரியக்கம் என்ற அமைப்பின் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை என்பது தமிழ்நாட்டின் நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றை மட்டுமல்ல, மொழிப் புலமை அறியாத தன்மையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது,” என்று தனது வாதத்தை முரசொலி தொடங்குகிறது.
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் 31.8.2021 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்த தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை அறிக்கையில், “சங்க இலக்கியங்கள் சந்தி பிரிக்கப்பட்டு எளிமைப் பதிப்புகளாகவும் திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலாகவும் அச்சிட்டுக் குறைந்த விலையில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வெளியீடு: இயக்குநர், செய்தி – மக்கள் தொடர்புத் துறை.

அந்த அறிவிப்பில் மேற்படி வாசகங்கள்தாம் இருந்தன. சங்கத் தமிழ் நூல்களைத் தொகுத்து, திராவிடக் களஞ்சியம் என்ற தலைப்பில் வெளியிடப் போகிறார்கள் என்று தான் பலரும் புரிந்து கொண்டோம்.
“திராவிடக் களஞ்சியம்” என்பதை எதிர்த்து நான் கொடுத்த அறிக்கையில் “சங்கத் தமிழ் நூல்கள் எதிலும் “திராவிட” என்ற சொல்லே கிடையாது. தமிழ், தமிழ்நாடு, தமிழகம் என்ற சொற்களே இருக்கின்றன. வரலாற்று உண்மை இவ்வாறு இருக்க வலிந்து, சங்கத் தமிழ் நூல்களுக்குத் “திராவிடக் களஞ்சியம்” என்று தி.மு.க. ஆட்சி பெயர் சூட்டுவதற்கு ஓர் உள் நோக்கம் இருக்க வேண்டும்” என்று கூறிவிட்டு, மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வர் ஆனபிறகு கூடுதல் முனைப்புடன் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்திய நிகழ்வுகளை வரிசைப்படுத்தி இருந்தேன்.

“திராவிடம்” என்ற சொல்லைக் கால்டுவெல் சமற்கிருத நூல்களான மனு தர்மம், குமாரில பட்டரின் தந்திர வார்த்திகா ஆகியவற்றிலிந்து எடுத்ததாக அவரது ஒப்பிலக்கணத்தில் கூறுகிறார் என்றும் சுட்டியிருந்தேன். தென்னாட்டில் குடியேறிய ஆரிய பிராமணர்களைத்தான் திராவிடர் என்று அவர்கள் அழைத்துக் கொண்டார்கள் என்பதையும் சொல்லியிருந்தேன். வட சொல்லான திராவிடத்தை, தமிழ் இலக்கிய தொகுப்பிற்குத் தலைப்பாக்க வேண்டாம் என்றும் கேட்டிருந்தேன்.

“எங்கள் அடையாளம் தமிழ்” என்ற குறிச்சொல் பரப்புரை (ஹேஷ் டாக்) மற்றும் வலைத்தள பரப்புரை என திரளான தமிழர்களின் கண்டனத்தைத் தமிழ்நாடு அரசின் மேற்படி “களஞ்சிய” அறிவிப்பு சந்தித்தது.
இந்தப் பின்ணனியில்தான் முரசொலி ஆசிரியவுரை வந்தது.

எனது அறிக்கையில் “திராவிட என்பது வட சொல்” என்று எழுதியிருந்தேன். அதை மறுத்து முரசொலி எழுதியுள்ளது.

“திராவிட என்பதை வட சொல் என்பது வேர்ச் சொல் அறியாதவர் கூற்றாகத்தான் இருக்க முடியும். திராவிட மொழி நூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள், திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே என்று தான் நிறுவி உள்ளார். திராவிடம் என்பது தென் சொல்லே என்று நிறுவி உள்ளார்.”

“தமிழம் – தவிள – தவிட – என்று பிராகிருதத்தில் திரிந்த பின்பு, தமிலி, தவிட என்னும் வடிவங்கள் த்ரமில, திரவிட, த்ரவிட என்று வடமொழியில் திரிந்ததாகப் பண்டிதர் கிரையர்கள் கூறுவர். (கிரையர்சன் என்பது கிரையர்கள் என்று பிழையாக அச்சாகியுள்ளது.)

“எங்ஙன மிருப்பினும் தமிழம் என்னும் சொல்லே “த்ரவிட” என்று திரிந்தது என்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை என்று எழுதியிருக்கிறார் பாவாணர்” என்று முரசொலி கூறுகிறது. பாவாணர் எந்த நூலில் இவ்வாறு எழுதியுள்ளார் என்ற குறிப்பை முரசொலி கொடுக்கவில்லை.

பாவாணர் தமது “தமிழ் வரலாறு” என்ற நூலில் கூறியதைத்தான் சிறிது மாற்றி வேறு பொருள் தரும்படி முரசொலி மேற்கோளாகப் போட்டுள்ளது.

பாவாணர் கூறுகிறார்:

“நாட்டுப் பெயர்களும் மொழிப் பெயர்களும் பண்டைக் காலத்தில் பெரும்பாலும் ‘அம்’ ஈறு பெற்றுத் தமிழில் வழங்கியதை நோக்கும் போது, தமிழ் என்னும் சொல்லும் சிறுபான்மை (அளவு) தமிழம் என்று வழங்கியதாகக் கருத இடம் ஏற்படுகின்றது. தமிழம், த்ரமில (ம்), த்ரமிள(ம்), த்ரமிட (ம்), த்ரவிட (ம்) என்னும் முறையே நோக்கின், தமிழ் என்பதன் திரிபே திரவிடம் என்பது புலனாம். ஆயினும் கால்டுவெலார் இவ்வெளிய முறையில் உண்மையைக் காணாமல், இயற்கைக்கு மாறாகத் தலை கீழாய் நோக்கி, திராவிடம் என்னுஞ் சொல்லே தமிழென்று திரிந்ததாக முடிவு செய்துவிட்டார். ஆயின் கிரையர்சன் இத்தவற்றைத் திருத்திவிட்டனர்.”
பாவாணர் தமிழ் வரலாறு, பக்கம் 32 தமிழர்களிடையே வழங்கப்பட்ட தமிழை வடவர் திரிபாகத் திரமிள, திராவிட என்று ஆக்கினர். ஆனால் கால்டுவெல் மிகத் தவறாக, திராவிட என்பதிலிருந்து தமிழ் வந்தது என்று கூறுகிறார் என்று பாவாணர் திறனாய்வு செய்தார். அத்துடன் மேலே காட்டப்பட்ட மேற்கோளுக்குக் கீழே தமிழ்நாட்டில் தவறிக்கூட, “திராவிட” என்ற சொல்லை உச்சரிக்கவில்லை – பயன்படுத்தவில்லை என்பதைத் தனிக் குறிப்பாக மேற்படி பக்கம் 32 இல் கூறியுள்ளார்.

“(4) திராவிடம் என்னும் வடிவம் தமிழ்நாட்டுலக வழக்கில் அருகியும் வழங்காமை. (தடிப்பெழுத்து வடிவம் பாவாணரே கொடுத்தது.)

இதன் பொருள் தமிழ்நாட்டில் எப்பொழுதாவது, மிக மிக அரிதாகக்கூட திராவிடம் என்ற சொல்லை பேச்சு, எழுத்து வழக்கில் (உலக வழக்கில்) பயன்படுத்தியதே இல்லை என்பதாகும்.

திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு ஆதரவாகப் பாவாணர் கருத்துகள் கூறியது போல் முரசொலி அவருடைய மேற்கோளைத் திரித்துப் பயன்படுத்துவது நீதியா?

நான் தொடக்கத்திலேயே சுட்டிக் காட்டியது போல் அயலாரான ஆங்கிலேயர் தஞ்சாவூரை –டேஞ்சூர் என்று கொச்சையாக உச்சரித்தால் அந்தக் கொச்சை வடிவத்தைக் கொண்டாடி மகிழ்வது அடிமை மனப்பான்மை இல்லையா? டேஞ்சூர் என்பது ஆங்கிலேய எசமானனுக்கான அடிமைத்தனம்; திராவிடம் என்பது ஆரிய எசமானனுக்கான அடிமைத்தனம்.


கட்டுரை உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Leave a Reply