Home>>அரசியல்>>பட்டியல் பிரிவு மக்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப அரசியல் அதிகாரம் கிடைத்துவிட்டதா?
தமிழ்நாடு சட்டமன்றம்
அரசியல்கட்டுரைகள்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

பட்டியல் பிரிவு மக்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப அரசியல் அதிகாரம் கிடைத்துவிட்டதா?

திருவாரூர் மாவட்டத்தில் பட்டியல் பிரிவு (Scheduled Castes) மக்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப அரசியல் அதிகாரம் கிடைத்துவிட்டதா? அவர்களுக்கான பிரதிநித்துவம் எங்கே?

திருவாரூர் மாவட்டத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி சுமார் 12,64,277 பேர் ஆகும். 4 நகராட்சிகள் 7 பேரூராட்சிகள் நீங்களாக சுமார் 10 ஊராட்சி ஒன்றியங்களில் 430 கிராம ஊராட்சிகள் உள்ளது இதன் மக்கள் தொகை சுமார் 10,06,482 பேர் இதில் பட்டியலின மக்கள் 3,88,697 பேர் பழங்குடிகள் 939 பேர் ஆகமொத்தம் 3,89,636 பேர் அதாவது 430 ஊராட்களில் மொத்த மக்கள் தொகையில் 38.71% பட்டியல் பிரிவை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

ஏற்கனவே பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற கோட்டூர் சட்டமன்ற தொகுதி, வலங்கைமான் தொகுதிகளை மறு சீரமைப்பு என்ற பெயரில் திட்டமிட்டு காலி செய்துவிட்டனர். இது போக தனித் தொகுதிகளாக இருந்த திருவாரூர் மற்றும் நன்னிலம் தொகுதிகள் எதன் அடிப்படையில் பொதுத் தொகுதுகளாக மாற்றினார்கள் என்று இதுவரையில் தெரியவில்லை.

இந்த மாவட்டத்தில் ஒருகாலத்தில் நெடும்பலம் சாமியப்ப முதலியார், வடபாதி மங்கலம் வி.எஸ்.தியாகராஜ முதலியார், குன்னியூர் சாம்பசிவ ஐயர், கோட்டூர் ரெங்கசாமி முதலியார் போன்றவர் சமீன் போல குறுநில மன்னர் போல வலம் வந்தார்கள். ஐயர்கள் மற்றும் முதலியார்கள் செல்வாக்கு செலுத்தி வந்த அரசியலதிகாரம் தற்போது இதர பிற்படுத்தபட்ட, தாழ்த்தபட்ட மக்களிடம் வந்துள்ளது பொதுவுடைமை மற்றும் திராவிட இயக்கத்தின் சாதனை ஆகும்.

அதே நேரத்தில் அந்த அரசியலதிகாரம், ஆட்சியதிகாரம், மாவட்ட, ஒன்றிய செயலாளர்கள், மாநில முதல்நிலை ஒப்பந்தகாரர்கள், ஒரு கோடிக்கு மேல் ஒப்பந்த பணிகளை எடுக்கும் நிறுவனங்கள், வணிகர்கள் என பலவற்றில் குறிப்பிட்ட சமூகங்களோடு அதிகாரபரவல் தேக்கமாகிவிட்டது.

திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளின் மொத்த மக்கள்தொகை 91,278 பேர் இதில் பட்டியலின மக்கள் 47,167 பேர் பழங்குடிகள் 300 பேர் ஆக மொத்தம் 47,467 பேர் உள்ளனர். அதாவது ஒன்றியத்தில் மொத்த மக்கள்தொகையில் 52% என சரிபாதிக்கும் அதிகமாக பட்டியல் பிரிவினர் உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலேயே பட்டியல் பிரிவினர் அதிகம் உள்ள ஒன்றியமான கோட்டூர் ஒன்றியத்தில் 49 ஊராட்சிகளில் உள்ள மொத்த மக்கள் தொகை 1,07,525 பேர் இதில் பட்டியல் பிரிவினர் 50,118 பேர் பழங்குடிகள் 129 பேர் என ஆக மொத்தம் 50,247 பேர் இது ஒன்றிய மொத்த மக்கள் தொகையில் 46.73% ஆகும்.

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சியில் மொத்த மக்கள் தொகை 88,891 பேர் இதில் பழங்குடிகள் 56 பேர் உட்பட பட்டியலின சமூகத்தினர் 40,479 பேர் அதாவது ஒன்றியத்தில் 45.54% பட்டியல் சமூகத்தினராக உள்ளனர்.

திருவாரூர் ஒன்றியத்தில் 34 ஊராட்சிகளில் மொத்த மக்கள் தொகை 93,395 பேர் பழங்குடிகள் 80 பேர் உட்பட பட்டியலினத்தோர் 40,599 பேர் உள்ளனர் அதாவது மொத்த மக்கள் தொகையில் 43.47% பேர் பட்டியல் சமூகத்தினர் உள்ளனர்.

கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சிகளில் மொத்த மக்கள் தொகை 1,03,301 பேர் இதில் 38 பழங்குடிகள் உட்பட பட்டியல் சமூகத்தினர் 44,848 பேர் உள்ளனர். அதாவது ஒன்றியத்தில் 41.41% பேர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களே.

மேலும் நன்னிலம் ஒன்றியத்தில் 36.82%, மன்னார்குடி ஒன்றியத்தில் 35.24%, முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 34.13%, நீடாமங்கலம் ஒன்றியத்தில் 27.33%, குடவாசல் ஒன்றியத்தில் 25.34% பட்டியல் சமூகத்தினர் உள்ளனர்.

அதே நேரத்தில் இந்த 10 ஒன்றியத்தில் பட்டியல் பிரிவினருக்கான அரசியலதிகாரம் கிடைத்துவிட்டதா? திராவிட கட்சியின் நிர்வாக வசதிக்காக கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என பல ஒன்றியங்களாக பிரித்துள்ள நிலையில் எத்தனை ஒன்றியச் செயலாளர் பதவியை பட்டியல் பிரிவினருக்கு கொடுத்துள்ளனர். எத்தனை மாநில முதல்நிலை ஒப்பந்தக்கார்களை உருவாக்கி உள்ளனர்,

நாங்க சாதி பார்த்து பதவி தருவதில்லை என்று சமாளிக்க வேண்டாம், பிராமணர்களே பதவியில் உள்ளார்கள் என வெகுண்டெழுந்து பிராமணர் அல்லாதோர் அரசியலதிகாரம் பெற்றனர். அந்த அரசியலதிகாரம் குறிப்பிட்ட இடைநிலை சமூகங்களோடு நின்றுவிடக் கூடாது அல்லவா. ஒன்றியச் செயலாளர் பதிவியால் அந்த கட்சினர் மட்டுமல்ல ஒன்றிய செயலாளர்களின் உறவினர்கள் சமூகத்தினர் என அனைவருக்கும் ஒரு தன்னம்பிக்கை ஏற்படும் அரசு அலுவலகங்களில் காவல் நிலையங்களில் தன்னம்பிக்கையோடு பேசுவார்கள். ஒரு தொழில் தொடங்க, வர்த்தகத்தில் ஈடுபட மிகப் பெரிய பாதுகாப்பு ஆகும், வாழ்க்கை தரம் உயரும் ஆகவே ஒன்றிய மாவட்ட பதவிகள் நிச்சயம் மக்கள் தொகை அடிப்படையில் உரிய பிரதிநித்துவம் அளிக்கபட்டுள்ளதா? ஆனால் பெயரளவிற்கு இணைச் செயலாளர், துணைச் செயலாளர் பதவிகளை கொடுத்து பட்டியல் மக்களை சரிகட்டி வருகிறார்கள். எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்றிவிட முடியாது என்பதை புரிந்து கொள்வார்களா?

இந்த கட்டுரையின் நோக்கம் பள்ளர் மற்றும் பறையர்களுக்காக பிரதிநித்துவம் அரசியலதிகாரம் மட்டுமல்ல. அம்பலகாரர், சோழிய வெள்ளாளர், கோனார், இசுலாமியர்களுக்கு உரிய பிரதிநித்துவம் வழங்க வேண்டும் என்பதே! கொடி பிடிக்க கோசம் போட விளிம்பு நிலை சமூகங்களை பயன்படுத்தி கொண்டு அதிகாரமிக்க மாவட்ட ஒன்றிய பதவிகள் கான்ட்ராகட் பணிகள் மணல் குவாரிகள் உள்ளிட்ட பணம் கொட்டும் வாய்ப்புகளை குறிப்பிட்ட சில சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அளிப்பது என்பது சரியான நிலைபாடாக இருக்காது அல்லவா.

இதையெல்லாம் உரிய முறையில் கவனம் செலுத்தி உரிய பிரதிநித்துவம் வழங்காமல், பாராளுமன்ற தேர்தலில் முத்தரையர்களில் (அம்பலகாரர்கள்) பலர் பலாபழத்திற்கு தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள், ஆதி திராவிடர்கள் (பறையர்கள்) மூச்சுக்கு முந்நூறு தடவை திருமாவை புகழ்கிறார்கள், தேவேந்திர குல வேளாளர்கள் (பள்ளர்) சில பேர் வர வர மோசம் தலித்துன்னே சொல்லக்கூடாது என்று சொல்றாங்க, முசுலிம் ஒட்டு அப்படியே விழும் என்று நினைத்தோம் ஆனா சிதறிட்டு என்று என்றெல்லாம் விமர்சனம் செய்வதாலோ பொலம்புவதாலோ பயன் இல்லை.

‘‘அதிகாரம் செலுத்தும் இடத்தில் இல்லாத சமுதாயம் அடிமைகளாகத் தான் வாழ்வார்கள்’’ என்ற மாமேதை அண்ணல் அம்பேத்கர் வரிகளில் நிதர்சனமான உண்மை உள்ளதை மறவோம்.

குறிப்பு: மக்கள் தொகை குறித்த புள்ளி விபரம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் பதிவிடப்பட்டுள்ளது.


தோழமையுடன்
கா.லெனின்பாபு
12/09/2021

Leave a Reply