Home>>உலகம்>>துபாய் குறுக்கு சந்து அல்ல! 
உலகம்பயண கட்டுரைகள்

துபாய் குறுக்கு சந்து அல்ல! 

துபாய் என்றதும் நம் நினைவுக்கு வருவது பாலைவன மண்ணும், அதிலே மேயும் ஒட்டகமும் தான். அதையும் தாண்டி துபாய் குறுக்கு சந்து, துபாய் என்ற வடிவேலுவின் நகைச்சுவை காட்சியும் நினைவுக்கு வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

இதையெல்லாம் தாண்டி இன்று உலகமே வியந்து பார்க்கும் வகையில் துபாய் உயர்ந்துள்ளது என்றால் அவர்கள் அப்படியென்ன செய்திருப்பார்கள்? 

கொட்டிக் கிடக்கும் இயற்கை வளங்களை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் நாடுகளிடையே, இயற்கை வளமே இல்லாத நாடு ஒன்று, சுற்றுலா மற்றும் வர்த்தக மையமாக திகழ்கிறதென்றால் நம்ப முடிகிறதா? 

அவர்களிடம் எண்ணெய் வளங்கள் உள்ளது, அந்த பணத்தைக் கொண்டு நாட்டை மேம்படுத்தி உள்ளார்கள் என்று நினைப்பீர்களெனில், அதன் மூலம் வருமானம், நாட்டின் மொத்த வருமானத்தில் ஒரு சதவீதத்துக்கும் குறைவே. 

ஏழு அரபு நாடுகள் இணைந்து, ஐக்கிய அரபு நாடுகள் (United Arab Emirates) என உருவாக்கியுள்ளனர். அதில் ஒன்று தான் நாம் பார்க்க போகும் துபாய்! இந்நாட்டின் மன்னர், மன்னராக ஆட்சி புரியாமல் ஒரு தொழிலதிபர் எவ்வாறு தனது தொழிலை விரிவாக்க முயற்சிப்பாரோ அந்தளவுக்கு தனது உழைப்பைக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு நாட்டிற்கும் ஏதாவது ஒரு இயற்கை வளம் இருக்கும், இந்தியாவில் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் உழவுத் தொழிலை நம்பி மக்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது. அதே போல, துபாய் மக்களின் வாழ்வாதாரம், அந்நாட்டின் சுற்றுலாத்துறையையும், வர்த்தக மையத்தையும் நம்பி உள்ளது. இவர்களின் மனத்திறன், கண்டுபிடிப்பு, பிரச்சினையை தீர்க்கும் பாங்கு மற்றும் வியூகம் தான் இந்தளவிற்கு உயர்த்தியுள்ளது. 

இவர்கள் எந்த ஒரு செயலிலும் இது போதும், இந்த வருமானம் மூலம் இதை சமாளித்துக் கொள்ளலாம் என கருதாமல் புதிது புதிதாக அனைத்திலும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு அங்குள்ள Miracle Garden சென்றீர்கள் என்றால், கடந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட பூக்களால் ஆன வடிவமைப்புகளை இந்த வருடம் வேறு ஒரு வடிவத்திற்கு மாற்றி இருப்பார்கள். இப்படி அனைத்திலும் வருடாவருடம் புதுமையை புகுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஏற்கெனவே உலகின் மிக பெரிய கட்டிடம் என பெயர் பெற்ற புர்ஜ் கலிஃபா இருந்தாலும், தற்போது அதனைக் காட்டிலும் உயரமான ஒரு கட்டிடத்தை கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளார்கள். கடலில் புதிது புதிதாக தீவுகளையும், தீவுகளின் மீது வித்தியாசமான கட்டிடங்களையும் கட்டி விரிவுப்படுத்தி வருகிறார்கள். 

அடுத்ததாக ஆடை கலாச்சாரத்தைப் பற்றி பார்ப்போம். இதைப் பொறுத்தவரை நடுநிலையில் உள்ளனர். நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும், தொழிலதிபர்களையும் சிரமத்திற்கு உள்ளாக்காமல், இசுலாமிய ஆடை விதிமுறைகள் வர்த்தகத்தை பாதிக்காத வகையில் கோட்பாடுகளை வகுத்துள்ளனர். 

தற்சார்பு பொருளாதாரத்தைக் கையிலெடுத்தவர்கள், தற்சார்பு நகரத்தையும் உருவாக்கியுள்ளார்கள். உலகிலேயே மிக பெரிய சூரிய சக்தி மின்னாலையை நிறுவி உள்ளார்கள். ஒவ்வொரு செயலும் வீணாகி விடாமல் மறு சுழற்சி செய்யும் வகையில் அனைத்தையும் வடிவமைத்து வருகிறார்கள். 

சுருக்கமாக கூற வேண்டும் என்றால், மறுசுழற்சி நாடாக கூடிய விரைவில் மாறி விடுவார்கள். 

உலகிலேயே முதல் முறையாக அரசு அலுவலக சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் உடனுக்குடன் தீர்க்கும் வகையில் உருவாக்கியுள்ளார்கள். 

நம் நாட்டை போல அல்லாமல் இங்கு தொழில் துவங்குவது மிக சுலபம், உங்கள் தொழிலுக்கு ஏற்றவாறு இடத்தையும் உங்களுக்காக உருவாக்கி தருவார்கள். அதே சமயத்தில் அந்த தொழில் நாட்டு மக்களையும், நாட்டுக்கும் பாதிப்பு விளைவிக்காத வகையில் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்குவார்கள். 

இங்கு நிறைய சம்பாதிக்க வேண்டுமென்றால் அதிக உழைப்பும் திறமையும் அவசியம். எந்த நாட்டு மக்கள் அதிக உழைப்பை கொடுக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, அவர்களை வேலைக்கு அமர்த்தி அவ்வேலையை கச்சிதமாக முடித்துக் கொள்கிறார்கள். இது தான் இவர்களின் மூலதனமே. ஒரு வேலையை சுலபமாக்க என்ன செய்ய இயலுமோ, அத்தனையும் செயல்படுத்திடுவார்கள். போக்குவரத்து சாலைகள், விதிமுறைகள், மெட்ரோ இரயில், தற்போது ஹைபர் லூப் வரை என அனைத்தும் அடங்கும். 

எல்லா நாடுகளும் நம்மையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதில் துபாய் தெளிவாக இருக்கிறது. ஒரு சிறிய செயலைக் கூட உலகமே ஊர் கூடி வியக்கும் வகையில் செய்கிறது. புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் துபாய், அது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எவ்வகையில் பயன்படும் என்பதை அலசி ஆராய்ந்தே பிறகே வெளியிடுகிறது. அதனாலேயே உலகின் முன்னணி நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளை துபாயில் வெளியிடுகிறது. இங்கு வெளியிடும் பட்சத்தில் உலகமே அதை பார்க்கும், ஏனெனில் உலகின் வர்த்தக மையமாக துபாய் திகழ்கிறது. ஆறுகளே இல்லாத நாட்டில் கடல் நீரை, ஆறு போல நாட்டுக்குள் வரவழைத்து அதில் படகு சவாரி, கடல் மேலேயே கட்டிடங்கள் என ஆச்சரியப்பட வைக்கிறார்கள். 

எந்த நாட்டுடன், எந்த நிறுவனத்துடன் கூட்டுறவு வைத்துக் கொண்டால் நமக்கு லாபம் மற்றும் பாதுகாப்பு என்பதை தெளிவாக தெரிந்துக் கொண்டுள்ளனர். சிறிய நாடாக இருந்தாலும், சிறப்பாக கட்டமைக்கப்பட்ட நாடாக துபாய் இருக்கிறது. இவர்களின் மறைமுக பலமே, சிறிய நாடாக இருப்பது தான். உலகிலேயே முதல் ஏழு நட்சத்திர விடுதி (7 Star Hotel), மிக பெரிய கோபுர கட்டிடம் மற்றும் வணிக வளாகங்களைக் (Shopping Mall)கொண்ட நாடாக துபாய் விளங்குகிறது. 

அதிக வருமானம் வேண்டுமென்றால் அதிக செலவு செய்தாக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். செய்யும் செலவு மலிவாக இருப்பதைக் காட்டிலும், செலவிலிருந்து வருமானம் வரும் வகையில் அமைத்துக் கொள்கிறார்கள். எங்களைப் போல, உலகில் யாரும் இருக்க முடியாது, நாங்களே முன்னோடியாக இருப்போம் என்பதில் முனைப்பாக உள்ளனர். 

அன்றைய மணல் நகரம், உலகின் இன்றைய வர்த்தக மையமாக மாறி இருக்கிறதென்றால் உழைப்பின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். தொழில் முனைவோர், கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய இடங்களில் துபாயும் ஒன்று. அடுத்த இதழில் உலகின் மிக பெரிய கோபுர கட்டிடமான புர்ஜ் கலிஃபா பற்றி பார்ப்போம்! 

இரா. செந்தில் குமரன் 

(2050 மாசி மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply