Home>>அரசியல்>>டெல்கி உழவர்கள் போராட்டம் 306வது நாள் செய்தி குறிப்பு
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

டெல்கி உழவர்கள் போராட்டம் 306வது நாள் செய்தி குறிப்பு

ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
செய்தி வெளியீடு
306வது நாள், 28 செப்டம்பர் 2021.


* ஷாஹீத் பகத் சிங்கின் பிறந்த நாள் நாடு முழுவதும் உள்ள உழவர்களால் கொண்டாடப்பட்டது – எஸ்.கே.எம் மோர்ச்சா மற்றும் போராட்ட களங்களில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன !

* சத்தீஸ்கரில் ராஜிம் என்ற இடத்தில், சத்தீஸ்கர் விவசாய தொழிலாளர் மகாசங்கம், ஒரு பெரிய விவசாய மகாபஞ்சாயத்தை நடத்தியது – பல எஸ்.கே.எம் தலைவர்கள் மகாபஞ்சாயத்தில் உரையாற்றினார்கள் – இதில் இலட்சக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர் – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன !

* வரலாற்று சிறப்புமிக்க முழு அடைப்பு பற்றிய செய்திகள், இந்தியா முழுவதிலும் கோடிக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் நடந்துள்ளது – உழவர்களுக்கு எதிராக மற்றும் முழு அடைப்புக்கு எதிராக பாஜக தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் துரதிருஷ்டவசமானது – உழவர்களின் பிரச்சினைகளை அக்கறையோடு கவனிப்பதை, பாஜகவின் ஆணவம் தடுக்கிறது: எஸ்.கே.எம். !

இன்று, நாடு முழுவதும் உள்ள உழவர்கள் ஷஹீத் பகத்சிங் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடினர். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதிக அளவில் அனைத்து எஸ்.கே.எம். மோர்ச்சாக்கள் மற்றும் போராட்ட களங்களில் ஒன்றுகூடி, ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக தன்னுடைய உயிரைக் கொடுத்த இந்தியாவின் மகனை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தினர். பகத்சிங்கின் தியாகம் அநீதிக்கு எதிரான உழவர்களின் போராட்டத்தில் அவர்களை ஊக்குவிப்பதாக உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜிம் என்ற இடத்தில் இன்று உழவர்களின் ஒரு பெரிய மகாபஞ்சாயத்து நடைபெற்றது. இலட்சக்கணக்கான உழவர்கள் திரண்டிருந்த மகாபஞ்சாயத்தில் பல எஸ்.கே.எம். தலைவர்கள் உரையாற்றினார்கள். நடைபெற்றுக் கொண்டிருக்கும் உழவர் இயக்கத்தை மாநிலம் முழுவதும் கொண்டு சென்று, கீழ்க்கண்ட கோரிக்கைகளுக்காக, மாநிலம் தழுவிய ஒரு போராட்டம் நடத்த 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை,

1. உழவர் விரோத, வேளாண் விரோத மற்றும் நுகர்வோர் விரோத சட்டங்கள் இரத்து செய்யப்பட வேண்டும் மற்றும் அனைத்து வேளாண் விளை பொருட்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்குவதற்கான சட்ட உத்தரவாதம் வேண்டும்.

2. குறுவைபருவ நெல் சாகுபடியில், ஏக்கருக்கு 25 குவிண்டால் நெல் கொள்முதல் மாநில அரசால் செய்யப்பட வேண்டும்.

3. நீர்ப்பாசன வளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் மற்றும் பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்க வேண்டும்.

4. சத்தீஸ்கரில் சந்தை கூட்டமைப்பு மூலம் நெல் தவிர மற்ற பயிர்களையும் கொள்முதல் செய்ய மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

5. வேளாண் நிலங்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் பிற நோக்கத்திற்காக வாங்கப்படக்கூடாது.

6. பழங்குடி மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான, தற்போதைய இயக்கங்கள் மீதான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும் என்பவையாகும்.

நேற்று நடத்தப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முழு அடைப்பு பற்றிய செய்திகள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த முழு அடைப்பு விவசாய இயக்கத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. அதன் செய்தியை இந்தியாவின் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு சென்றுள்ளது. இந்த முழு அடைப்பு, தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், வங்கியாளர்கள், வழக்கறிஞர்கள், போக்குவரத்து பணியாளர்கள், வணிகர் சங்கங்கள் மற்றும் இந்தியாவின் பொது மக்களிடமிருந்து பெரும் ஆதரவை பெற்றுள்ளது. இந்தியாவுக்கு சோறிடும் உழவர்களின் பிரச்சினைகள் குறித்து மக்கள் மிகுந்த அனுதாபத்துடன் உள்ளனர். நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தபோதும், முழு அடைப்பு அமைதியாக நடந்தது. முழு அடைப்பின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் பரந்தளவில் நடைபெற்றதும் தீவிரமாக நடந்ததும் ஆகும். முழு அடைப்பு குறித்த செய்திகள், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வந்து கொண்டிருப்பதிலிருந்து, அது இந்தியாவின் தொலைதூர இடங்களில் உள்ள உழவர்களைச் சென்றடைந்துள்ளது என்பதை புரியமுடிகிறது.

முழு அடைப்பு மற்றும் உழவர்களுக்கு எதிராக பாஜக தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளை எஸ்.கே.எம் கண்டிக்கிறது. பாஜகவின் விவசாய அமைப்பு தலைவர், முழு அடைப்பு மற்றும் உழவர் இயக்கத்திற்கு எதிராக பேசுவது வெட்கக்கேடானது. உழவர்களின் நலன்களை விட அவர் தனது சொந்த அரசியல் நலனை முன்னிலைப்படுத்துகிறார் என்பதை அவரது அறிக்கைகள் நிரூபிக்கின்றன. விவசாயிகளுக்கு எதிராக பாஜக தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் முழு அடைப்பு துரதிருஷ்டவசமானது. மேலும் பாஜகவின் ஆணவம், உழவர்களை அக்கறையோடு கவனிக்காமல் தடுக்கிறது என்று எஸ்.கே.எம். கூறியுள்ளது.

இதற்கிடையில், உழவர்கள் போராட்டத்தைக்
கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டுமென்று, ஒன்றிய வேளாண் மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மீண்டும் ஒரு வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது ஆச்சரியத்தை அளிக்கிறது; ஏனென்றால் ஒன்றிய அரசாங்கம்தான் பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைத்துள்ளது. எஸ்.கே.எம் எப்போதும் உழவர்களின் தேவைகளை அக்கறையோடு கவனிக்கும் பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடலுக்குத் தயாராக உள்ளது என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது, மேலும் உழவர்களை அழைத்து பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளைத் தொடங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.


அறிக்கையை வழங்கியவர்கள்:

பல்பீர் சிங் ராஜேவால்,
டாக்டர் தர்ஷன் பால்,
குர்ணம் சிங் சாருனி,
ஹன்னன் மொல்லா,
ஜக்ஜித் சிங் டல்லேவால்,
ஜோகிந்தர் சிங் உக்ரஹான்,
சிவகுமார் சர்மா ‘காக்காஜி’,
யுத்வீர் சிங்,
யோகேந்திர யாதவ்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com

வெளியீடு:
(SKM) ஐக்கிய விவசாயிகள் முன்னணி தமிழ்நாடு.

Leave a Reply