Home>>இந்தியா>>2021 T20 உலகக்கோப்பை: “யானைப் பசிக்கு சோளப் பொறி”
இந்தியாவிளையாட்டு

2021 T20 உலகக்கோப்பை: “யானைப் பசிக்கு சோளப் பொறி”

பட உதவி: Sports Keeda

உலக கோப்பை போட்டிகள் என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டம் தான். அதிலும் 20 ஓவர் போட்டி உலகக்கோப்பை என்றால் சொல்லவே வேணாம்.விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது. 2020ல் நடக்க வேண்டிய உலகக்கோப்பை கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இந்த ஆண்டு தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் இந்திய BCCI அணியின் ஆட்டம் இருந்தது. அதனால் இந்திய BCCI அணியின் அரையிறுதி வாய்ப்பும் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் அரையிறுதி வாய்ப்பு நாளை நடைபெற உள்ள நியூசிலாந்துக்கும் ஆப்கானிசுதானுக்கும் இடையே நடக்கும் போட்டியில் உள்ளது. அந்த போட்டியில் நியூசிலாந்து தோல்வியடையும் பட்சத்தில் இந்தியாவிற்கு அரையிறுதி வாய்ப்பு உண்டு இல்லையேல் கிடையாது.

உலகின் தலைசிறந்த அணியாக கருதப்படும் இந்திய BCCI அணிக்கு ஏன் இப்படி ஒரு நிலை என்பதைப் பற்றி விவாதிக்கும் முன்பு, இந்த உலகக்கோப்பை போட்டிகள் உண்மையிலேயே சிறப்பானதுதானா இதில் கோப்பையை வெல்லும் அணி உண்மையிலேயே அதற்கு முழுத் தகுதியான அணிதானா என்பதை பற்றிய ஒரு அலசலை பார்ப்போம்.

உலகக் கோப்பை போட்டிகள் என்றால் உலகில் உள்ள கிரிக்கெட் ஆடக்கூடிய நாடுகள் பல கலந்துகொள்ளும். பெரும்பாலும் 10 அல்லது அதிகபட்சம் 12 நாடுகள் மட்டும் ஆடுவதற்கு தேர்வு செய்யப்படும். இந்த 10 அல்லது 12 நாடுகளில் எந்த அணி மிகச் சிறப்பாக ஆடிக்கோப்பையை வெல்கிறதோ அதுவே மிகச்சிறந்த அணியாக கருதப்படும்.

ஆனால் இந்த உலகக் கோப்பை அப்படியல்ல.

பொதுவாக 10 அணிகள் உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்படும் பொழுது அவர்களை ஒருவரோடு ஒருவர் நேரடியாக மோத விட்டு அதில் புள்ளிகள் அடிப்படையில் நான்கு அணிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இடையில் அரையிறுதிப் போட்டிகள் நடத்தி பின் இறுதி போட்டிக்கு கொண்டு செல்வதுதான் ஆகச்சிறந்த ஒரு “போட்டி வடிவம்”. கடந்த 2019ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை இப்படித்தான் நடத்தப்பட்டது. ஐபிஎல் போட்டிகளும் இதே முறையில் தான் நடக்கும். (இன்னும் சொல்லப்போனால் ஐபிஎல்லில் ஒவ்வொரு அணிகளும் மற்றவரோடு இரண்டு முறை போதும்.)

எனவே இந்த முறைப்படி உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டு அதில் கோப்பையை ஒரு அணி வென்றால் சாம்பியன் பட்டம் பெற அந்த அணிக்கு முழு தகுதி உண்டு எனலாம்.

ஆனால் இந்த முறை 12 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேற் சொன்ன முறைப்படி செய்வது சற்று கடினம். அளவுக்கதிகமான ஆட்டங்கள் நடைபெறும். எனவே அதை தவிர்க்க இரு குழுக்களாக பிரித்துள்ளார்கள்.முதல் பிரிவில் 6 அணிகளும் இரண்டாம் பிரிவில் 6 அணிகளும் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் அந்தப் பிரிவில் உள்ள அணிகளுடன் மட்டுமே போட்டியிடும். முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு அணிகள் தேர்வு செய்யப்படும் அவர்கள் நேரடியாக அரையிறுதிப் போட்டியில் விளையாடுவார்கள்.

அதன்படி இங்கிலாந்து, ஆசுதிரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் இலங்கை, பங்களாதேசம் இவை ஒரு பிரிவிலும் இந்தியா, பாகிசுதான், நியூசிலாந்து, ஆப்கானிசுதான், நமீபியா, ஸ்காட்லாந்து இவைகள் ஒரு பிரிவிலும் பிரிக்கப்பட்டுள்ளனர். இப்படி பிரிக்கப்பட்டதில் தவறில்லை. ஆனால் ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு அணிகளை மட்டும் தேர்வு செய்து உடனடியாக அரையிறுதிப் போட்டிக்கு கொண்டு செல்வது தான் பிரச்சனை.
இப்படி செய்வதால் ஒவ்வொரு அணியும் மிக முக்கியமான மூன்று அணிகளோடு ஆடாமல் நேரடியாக அரையிறுதி செல்லும். பின் மற்றுமோர் அணியோடு ஆடாமல் இறுதிப்போட்டிக்கு செல்லும். ஆக மொத்தம் ஒரு அணி நான்கு முக்கிய அணிகளோடு விளையாடாமல் கோப்பையயை வெல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

எப்படி என்றால், முதல் பிரிவில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம்.அதே போல இரண்டாம் பிரிவில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். இப்போது பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், இலங்கை போன்ற முக்கியமான அணிகளோடு மோதாமலே அரையிறுதிக்கு வந்துவிட்டார்கள். அதேபோல ஆசுதிரேலியா, இங்கிலாந்து நாடுகள் இந்தியா என்னும் ஒரு தலைசிறந்த அணியோடு ஆடாமல் அரையிறுதிக்கு வந்துவிட்டார்கள் எனலாம்.பின் நடக்கும் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து அணியோடு ஆடாமலே கோப்பையை வெல்ல முடியும்.

இது எப்படி ஒரு முழுமையான உலகக் கோப்பை போட்டியாக கருதமுடியும். உலகக் கோப்பை என்னும் பெரும் விருந்திற்காக யானைப்பசியோடு காத்திருந்த ரசிகர்களுக்கு இவர்கள் கொடுப்பது வெறும் சோளப்பொறி மட்டுமே.

இந்த போட்டி வடிவத்தை எப்படியெல்லாம் செய்துருந்தால் பார்வையாளர்களுக்கு முழு திருப்தி கிடைத்திருக்கும், எப்படி கோப்பையை வெல்லும் அணிகள் எப்படி முழுத்தகுதியை பெற்றிருக்கும் அவர்களுக்கும் எப்படி முழு நிறைவு கிடைத்திருக்கும் என்பதைப்பற்றி பார்ப்போம்.

1. இரண்டு பிரிவுகளிலும் புள்ளிகள் அடிப்படையில் மூன்று மூன்று அணிகள் தேர்வு செய்திருக்க வேண்டும். அவற்றை சூப்பர் சிக்ஸ் என்ற பெயரில் ஒருவரோடு ஒருவர் ஆடவைத்து அதிலிருந்து நான்கு அணிகளை அரையிறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும்.இப்படித்தான் 1999, 2003 ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் நடைப்பெற்றன. இப்படி ஆடினால் அதிகபட்சம் ஒரு அணி இரண்டு நல்ல அணிகளோடு மட்டுமே ஆடாமல் கோப்பையை வெல்ல முடியும்.

2. அல்லது ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் தேர்வு செய்யப்பட்டு நேரடியாக காலிறுதிப் போட்டிகள் ஆட வைத்து பின் அதன்மூலம் அரையிறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றிருக்கலாம். 1996, 2011 உலகக்கோப்பை இந்த முறையில் தான் நடந்தது. இப்படி செய்வதன் மூலம் இரண்டு அல்லது அதிக பட்சம் மூன்று அணிகளோடு ஆடாமல் ஒரு அணி கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

3. அல்லது ஆகச்சிறந்த முறையாக, 10 அணிகளை மட்டுமே தேர்வு செய்து அனைத்து அணிகளும் ஒருவருக்கொருவர் போட்டியிடுமாறு செய்திருக்கலாம். (ஸ்காட்லாந்து, நமீபியா அணிகள் இல்லாமல்). இப்படித்தான் 1992, 2019 உலகக்கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டன.

ஆனால் இதில் எந்த முறையும் இல்லாமல் மிக மோசமான ஒரு போட்டி வடிவத்தில் இந்த 2021 உலக கோப்பை நடத்துவது மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது.
காரணம் என்னவெனில்,

1. ஒரு அணி நான்கு முக்கிய அணிகளோடு ஆடாமலே உலகக்கோப்பையை வெல்வதென்பது ஏற்றுக் கொள்ளவே முடியாதது. அது சம்பந்தப்பட்ட அணிக்கு வெற்றி பெற்ற முழு திருப்தியை வழங்காது.

2. அதேபோல 12 நாடுகள் பங்கேற்கும் ஒரு போட்டியில் வெறும் இரண்டு அணிகளோடு மட்டும் தோல்வியடைந்த ஒரு அணி அரையிறுதிப் போட்டிக்கு செல்லாமல் இருப்பது நியாயம் அல்ல. ஐபிஎல் போட்டிகளில் மும்பை, சென்னை போன்ற அணிகள் முதல் ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்து பின் மீண்டெழுந்து கோப்பையை வென்று இருக்கிறார்கள். 1992 உலகக்கோப்பை போட்டியிலும் பல போட்டிகளில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் மீண்டெழுந்து இறுதியில் கோப்பையை வென்றார்கள் எனில் அதற்கு காரணம் அந்த போட்டி வடிவமே. வெறும் இரண்டு போட்டிகளை மட்டும் வைத்து முடிவு செய்யாமல் ஒட்டுமொத்தமாக அந்த தொடர் முழுவதும் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் அணியே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற வகையில் போட்டியின் அட்டவணை இருந்தால்தான் அது ஒரு சிறப்பான போட்டித்தொடராக இருக்கும்.

3. மேலும் தற்போது நடத்தப்படும் போட்டி அட்டவணைப்படி ஒரு மிகப்பெரிய அணி வெறும் இரண்டு போட்டிகளில் தோற்றால் அவர்கள் அரையிறுதிக்கு செல்ல முடியாது என்பது போட்டியின் ஆரம்பத்திலேயே தெரிந்து விடுவது மிகப் பெரிய சொதப்பல். அதிலும் குறிப்பாக இந்தியா இருக்கும் பிரிவானது மிகவும் பலவீனமான ஒன்று. இந்தியா ,பாகிஸ்தான் நியூசிலாந்து இந்த மூன்று அணிகள் மட்டுமே வலுவான அணிகள். ஆப்கானிசுதான் ஸ்காட்லாந்து, நமீபியா இந்த மூன்றும் பலவீனமான அணிகள். இந்த பலவீனமான மூன்று அணிகளை பலம் பொருந்திய அந்த மூன்று அணிகள் எப்படியும் வென்று விடுவார்கள். எனவே இந்த போட்டிகள் அனைத்தும் சுவாரசியமின்றி இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்தியா போன்று பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகளிடம் மட்டும் தோல்வியுற்ற அணி அரையிறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும் அபாயமும் உள்ளது.

4. ஒருவேளை இப்படி யோசித்துப் பாருங்கள் இந்திய ஆடும் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் நியூசிலாந்து, ஆசுதிரேலியா, மேற்கிந்திய தீவுகள் இருந்தால் எப்படி இருந்து இருக்கும். இந்த ஐந்து அணிகளுமே ஒருவருக்கொருவர் வெல்லக் கூடிய அளவிற்கு திறன் படைத்த அணிகள்.அன்றைய தினம் சிறப்பாக ஆடும் அணி வெற்றிப்பெறும். ஒருவேளை இந்தியா, பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகளுடன் தோல்வியுற்று, ஆஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகளை வென்றால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு அதிகம். எப்படியென்றால் நம்மை வென்ற பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகளுக்கு ஆஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகளை வெல்வது அவ்வளவு சுலபமல்ல. தோல்வியுற வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் தற்போது அப்படி அல்ல. மூன்று அணிகள் மிகவும் பலவீனமாக இருப்பதால் அந்த மூன்று அணியையும் எளிதாக வென்று விடுகிறார்கள்.இதனால் அதில் முதல் இரண்டு இடத்தை பிடித்தவர் மட்டும் நேரடியாக அரையிறுதிக்கு செல்வது மிகமிக மோசமான ஒரு போட்டி வடிவம்.

ஐசிசி இவ்வளவு அவசரகதியில் இப்படி ஒரு மோசமான போட்டி வடிவத்தோடு உலகக்கோப்பை நடத்த வேண்டிய அவசியம் என்ன?? எப்படியாவது உலகக் கோப்பையை நடத்திவிட வேண்டும் என்ற நோக்கில் ஏனோ தானோ என்ற பெயரில் நடத்துவது போல் உள்ளது.

நிச்சயமாக இந்த உலகக் கோப்பை எந்த அணி வென்றாலும் அதில் எந்த பெரிய சிறப்பும் இல்லை. ஒரு ஐபிஎல் போட்டியை வெல்லும் அணிக்கு உண்டான தகுதியில் 10% கூட 2021 டி20 உலக கோப்பையை வெல்லும் அணிக்கு கிடையாது. எனவே இந்திய BCCI அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் போனாலும் பெரிய தவறில்லை. ஏற்கனவே 2007 ல் 50 ஓவர் உலககோப்பை போட்டியில் இதுபோல ஒரு மோசமான போட்டி வடிவத்தை நடத்தி முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேறி விட ICC பெரும் இழப்பை சந்தித்தது.

அதே போலத்தான் இப்பவும் நடக்கிறது. தயவு செய்து அடுத்த முறை இப்படி ஒரு மோசமான போட்டி வடிவத்த்தில் உலகக்கோப்பை போட்டிகள் நடத்தாதீர்கள்.

நிச்சயமாக இந்த உலகக்கோப்பை போட்டிகள் ரசிகர்களுக்கும் ஏன் ஆடும் அணிகளுக்குமே ,

“யானைப் பசிக்கு சோளப்பொறி தான்”


மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply