Home>>செய்திகள்>>மழைநீர் வடியும் வாய்க்காலை தடுத்து சுவர்! நடவடிக்கை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்தமிழ்நாடு

மழைநீர் வடியும் வாய்க்காலை தடுத்து சுவர்! நடவடிக்கை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஆவூர் பகுதியில் மழைநீர் வடியும் வாய்க்காலை தடுத்து – தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ஆதரவுடன் தனிநபர் சுவர் எழுப்பியதைக் கண்டித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்தும் ஆவூர் பகுதிவாழ் மக்கள் சார்பாக இன்று (09.11.2021) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆவூர் காந்தி நகர் பேருந்து நிலையம் அருகில் இன்று காலை நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், மழையையும் பொருட்படுத்தாமல், ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் திரளாகப் பங்கேற்றனர்.

ஆவூர் பகுதியில் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில், காந்தி நகர் பேருந்து நிலையம் அருகே கடந்த காலங்களில் கார்களம் மற்றும் பாஞ்சவாரி பகுதியின் வழியாக ‘வண்டாரத்தான் கட்டளை’ எனும் பகுதியிலுள்ள சுமார் 40 ஏக்கர் விளைநிலங்களுக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. மேலும் அந்த வாய்க்காலே அப்பகுதியின் வடிகாலாகவும் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது அப்பகுதியில் உள்ள திருமுருகன் என்பவர், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் அன்பரசனின் ஆதரவுடன் வாய்க்காலை ஆக்கிரமித்து கான்கிரீட் சுவர் எழுப்பி உள்ளார். இதனால், அப்பகுதியில் மழை நீர் வடியாமல் குளம்போல தேங்கி நிற்கும் நிலை உள்ளது.

இதன் காரணமாக, சற்றொப்ப 1,500 குடும்பங்கள் வசித்து வருகின்ற காந்தி நகர் பகுதியிலும், ஆவூர் முதன்மைச் சாலையிலும் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர், வலங்கைமான் வட்டாட்சியர், வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வலங்கைமான் காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை!

எனவே, இன்று காலை மக்களை ஒன்று திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஐயா செ. ஜெயபால் தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்க ஆவூர் பொறுப்பாளர் திரு. பெ. பூங்குன்றன் முன்னிலை வகித்தார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை கண்டன முழக்கங்கள் எழுப்பினார். த.தே.பே தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச் சுடர், பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. தீந்தமிழன், தோழர்கள் லெனின், திரு, ம. தூயவன் உள்ளிட்டோரும், கட்சி – சாதி எல்லைகளைக் கடந்து ஊர் மக்களும் திரளாகப் பங்கேற்றனர்.


செய்தி உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

செய்தி சேகரிப்பு:
திரு. நிரஞ்சன்,
மன்னார்குடி.

Leave a Reply