Home>>செய்திகள்>>குமரி மாவட்டத்தைச் சார்ந்த சுரேஷ் குமாரை ஆணவப்படுகொலை செய்தவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்!
சீமான்
செய்திகள்தமிழ்நாடு

குமரி மாவட்டத்தைச் சார்ந்த சுரேஷ் குமாரை ஆணவப்படுகொலை செய்தவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்!

குமரி மாவட்டத்தைச் சார்ந்த தம்பி சுரேஷ் குமாரை சாதிய வன்மம் கொண்டு ஆணவப்படுகொலை செய்தவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்!

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை புதூரைச் சார்ந்த தம்பி சுரேஷ் குமார் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். சாதிய வன்மத்தோடு இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களை இதுவரை காவல்துறையினர் கைதுசெய்யாதது பெருத்த ஏமாற்றமளிக்கிறது. சாதிவெறியோடு படுகொலை செய்திட்டக் குற்றவாளிகளுக்கு ஆதரவான காவல்துறையின் முறைகேடான இப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
படுகொலைசெய்யப்பட்ட தம்பி சுரேஷ்குமார் ஆதித்தமிழரென்பதால் அவரது காதலுக்குக் கடுமையான எதிர்ப்பு இருந்ததென்பதும், தான் காதலித்த பெண்ணின் உறவினர்களால் அவர் அவமானப்படுத்தப்பட்டாரென்பதும் அவர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்பதனை உறுதிப்படுத்துகிறது.

மேலும், பூதப்பாண்டி காவல் உதவி ஆய்வாளரின் அழைப்பின்பேரில், பேச்சுவார்த்தைக்குச் சென்ற சுரேஷ்குமார் வீடுதிரும்பாமல் படுகாயங்களோடு இறந்துகிடந்தது அவரது படுகொலையில் காவல்துறைக்கும் தொடர்பு இருக்குமோ? என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, படுகொலை செய்யப்பட்ட தம்பி சுரேஷ்குமாரின் குடும்பத்தினர் காவல்துறையில் புகாரளித்தும், இதுவரை இப்படுபாதகச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குற்றவாளிகளுக்குக் காவல்துறை துணைபோவதை வெளிக்காட்டுகிறது.

சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கெதிராக எத்தனை பரப்புரை செய்தாலும், எத்தனை அறிவியல் வளர்ச்சியும், நாகரீக முதிர்ச்சியும் இச்சமூகம் அடைந்தாலும், குடும்பக் கௌரவம் என்ற பெயரில் மீண்டும் மீண்டும் சாதிய வன்மத்திலும், ஆதிக்க மனநிலையிலும் நிகழ்ந்தேறும் இதுபோன்ற ஆணவப்படுகொலைகள் மிகுந்த மன வேதனையையும், பெருங்கோபத்தையும் உண்டாக்குகின்றது.

ஆகவே, சக மனிதர்களை விலங்குகளைவிடக் கீழானவர்களாகக் கருதி, சிறிதும் ஈவு இரக்கமின்றி இக்கொடியச் செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்ய, காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட வேண்டுமென்றும், இக்குற்றச்செயலில் காவல்துறையைச் சார்ந்தவர்களும் ஈடுபட்டிருக்கலாம் என்ற ஐயமிருப்பதால் விசாரணை நேர்மையாக நடைபெற இவ்வழக்கினை மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்ற வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.


திரு. செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.

Leave a Reply