Home>>அரசியல்>>காடுகள், கடல்களை பாதுகாக்காமல், வேளாண் சட்டத்திருத்தத்தை கைவிடாமல் பருவநிலையில் மாற்றத்தை காண முடியாது.
திரு. தி.வேல்முருகன்
அரசியல்சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

காடுகள், கடல்களை பாதுகாக்காமல், வேளாண் சட்டத்திருத்தத்தை கைவிடாமல் பருவநிலையில் மாற்றத்தை காண முடியாது.

காடுகள், கடல்களை பாதுகாக்காமல், வேளாண் சட்டத்திருத்தத்தை கைவிடாமல், நிலக்கரி சுரண்டலை ஒழிக்காமல் பருவநிலையில் மாற்றத்தை காண முடியாது என்ற உண்மையை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி எடுத்துரைக்கிறது.

உலகமயமாக்கலுக்கு பிறகு, உலகம் முழுக்க தொழிற்சாலைகளிருந்து வெளிவரும் கரியமில வாயு, கார்பன் வாயு அதிகரிப்பு, காடுகள் அழிப்பு, கடல் மாசுபாடு, இயற்கை வளச் சுரண்டல், நிலக்கரி சுரண்டல் ஆகியவை கார்ப்பரேட் நிறுனங்களால் அன்றாடம் நடத்தப்பட்டு வரப்படுகிறது. இது போததென்று, வளர்ச்சி என்ற பெயரில், மீத்தேன், கைட்ரோகார்பன் நாசக்கார திட்டங்கள் வேறு.

இப்படி, மோசமான இயற்கை வள சுரண்டலும், நாசக்கார திட்டங்களுமே புவி வெப்பமயமாதல் அதிகரிக்க முக்கிய காரணமாகும்.

இந்த நிலையில் தான், இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐநா.வின் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கி, 12 ஆம் தேதி நிறைவடைந்தது.

இதில், புவி வெப்பநிலை 1.5 டிகிரிக்கு மேல் அதிகரிக்காமல் தடுக்க சேர்ந்து பாடுபட உலக நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

2030க்குள் காடுகள் அழிப்பை நிறுத்தவும், காடு வளர்ப்பை மேற்கொள்ளவும் 100 நாடுகளின் தலைவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். 2030க்குள் பசுமை இல்ல வாயுவான மீத்தேன் உமிழ்வை குறைக்க அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாக செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனாவை தவிர, நிலக்கரி பயன்பாட்டில் இருந்து விலகிச் செல்ல 40 நாடுகள் வாக்குறுதி அளித்துள்ளன.

எண்ணெய், எரிவாயு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டுவரவும், புதிய எண்ணெய், எரிவாயு வளங்களை கண்டுபிடிக்கும் பணியை நிறுத்தவும், மாநாட்டில் சில நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால், காடுகள் அழிப்பை நிறுத்துவதில், கடலை பாதுகாப்பதில், நிலக்கரி சுரண்டலை தடுப்பதில், மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் திட்டங்கள் என்ன என்பது குறித்து விளக்க முடியுமா?

பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றிய இச்சூழலில் தான், இந்தியாவில் வனப்பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மற்றும் நீலப் பொருளாதாரம் எனப் புகழப்படும் கடல்சார் வணிகத்தின் பொருளாதாரக் கோட்பாடு ஆகிய இரண்டையும் நிறைவேற்றுவதில், ஒன்றிய அரசு வேகமாக செயலாற்றி வருகிறது.

வனப்பாதுகாப்புச் சட்டத்திருத்தம், கடல்சார் வணிகத்தின் பொருளாதாரக் கோட்பாடு, நாட்டின் காடுகளையும் கடல்களையும் அழித்துவிடும் என்ற புரிதல் ஒன்றிய அரசுக்கு இல்லை. அப்படி புரிதல் இருந்தாலும் கூட, மோடி அரசிடம் நன்மையை எதிர்ப்பார்ப்பது நம்முடைய முட்டாள் தனம்.

ஏனென்றால், அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இரவு, பகல் பாராமல் வேலை பார்க்கும் மோடி அரசு, புவி வெப்பமயமாதல், பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்ட உயர்வு குறித்து எப்போதும் சிந்திக்காது, கவலைப்படாது.

எனவே, இயற்கை நமக்களித்த கொடை என்பதை புரிந்துக்கொண்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காக இயங்கி வரும் மோடி அரசின் நாசக்கார திட்டங்களை கைவிட ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

புவி வெப்பமயமாகும் பிரச்சனையின் பின்னே உள்ள பொருளாதாரம் மற்றும் அரசியலை முறியடித்து, காடுகள், கடல்கள், வேளாண்மையை பாதுகாக்க தமிழர்கள் ஒன்று திரள வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

காடுகள், கடல்களை பாதுகாக்காமல், வேளாண் சட்டத்திருத்தத்தை கைவிடாமல், நிலக்கரி சுரண்டலை ஒழிக்காமல் பருவநிலையில் மாற்றத்தை காண முடியாது என்ற உண்மையை ஒன்றிய அரசுக்கு நாம் புரிய வைக்கவும் நாம் உறுதியேற்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி எடுத்துரைக்கிறது.


திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.

Leave a Reply