Home>>தமிழ்நாடு>>உலக ஆண்கள் தினம்: பெண்மானம் காத்த வீரன்.
தமிழ்நாடுவரலாறு

உலக ஆண்கள் தினம்: பெண்மானம் காத்த வீரன்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் உள்ளது ராஜராஜசோழன் காலத்திய நடுகல். ஏரிக்கரையில் நட்டுவைத்த நடுகல், காலப்போக்கில் மண்அரிப்பின் காரணமாய் எடைதாங்காமல் கீழே விழுந்தது. தற்பொழுது அப்பகுதி வரலாற்று ஆர்வலர்கள் முயற்சிச்சால் மீண்டும் நிமிர்த்தி வைக்கப்பட்டு, இறந்த அவ்வீரனுக்கு மீண்டும் மரியாதை செய்யப்பட்டது.

கூத்தராற்றுப்படையில், வேள் நன்னனிடம் பரிசுபெற்ற ஒருகூத்தன், மற்றொரு கூத்தனுக்கு வழிகூறுகையில், வழியெங்கும் மாமரந்தோறும் நடுகல் இருக்கும், அதனை அடையாளம் கண்டு வா என கூறுவதாய் விளிக்கிறது. அப்பகுதிதான் இன்றைய செங்கம், சங்ககாலத்திலேயே இங்கு நடுகல் நிரம்பியிருந்ததை இதன் வழியாய் அறியலாம்.

கல்வெட்டு சிறப்புகள்:


ராஜராஜனின் 14ம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட இந்நடுகல், “சாலைய் கலமறுத்து அங்குள்ள மலைஆளர் தலையறுத்து” எனும் ஒரு வாக்கியம் அவரது மெய்கீர்த்தியில் இல்லாத தகவலை கூறுகிறது. எனவே இறந்துபோன இவ்வூரன் ராஜராஜனின் கன்னிப்போரான, காந்தளூர்சாலைபோரில் கலந்து கொண்டு “அங்குள்ள மலையாளர்” தலைகொய்த வீரர்களில் இவனும் இருந்திருக்கக்கூடும் என ஒரு கருத்தும் உள்ளது. ஆகவே உரிமையுடன் இவ்வூரார் மட்டும் ராஜராஜனின் மெய்கீர்த்தியில் இந்த “மலைஆளர் தலைஅறுத்து” எனும் வார்த்தையை சேர்த்திருக்கக்கூடும், இதேபோல் குமரிமாவட்ட மணவாளகுறிச்சி பகுதி ராஜராஜனின் மெய்கீர்த்தியில் “கோவில் பள்ளியகம் கொணர்ந்து” எனும் ஒரு வார்த்தை புதிதாக அங்குமட்டுமே கிடைப்பது, இந்த வாதத்திற்கு வலுசேர்க்கிறது. மேலும் இந்நடுகல்லில்,

“கவரை மாயிலெட்டி கம்பன் பெண்டுகள் கூரைகொள்ள எறிஞ்சி பட்டான்”
மாயிலெட்டி என்பதற்கு அந்தப்புர பெண்களிற்கு வழங்கப்படும் உயரிய சொல் என அகராதிகள் கூறுகிறது. இந்நடுகல்லில் கவரை என்பதற்கு முன்னுள்ள சொற்கள் சிதைந்துள்ளதால் சரியாய் விளக்கம் கொள்ள இயலவில்லை,

கூரைகொள்ள என்பதிலிருந்து, பெண்களின் வீடுகளிலுள்ள கூரைபிரித்து எவரோ தவறாய் நடக்க முயற்சிக்க அந்த கலகத்தில் இவ்வீரன் இறந்துள்ளான் என ஒருவாறு யூகிக்க முடிகிறது.


ஆய்வு மற்றும் தகவல் உதவி:
ஆற்றுப்படை,
வரலாற்று ஆய்வு குழு.

Leave a Reply