Home>>அரசியல்>>வேளாண் விரோத சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது.
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

வேளாண் விரோத சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது.

நவம்பர் 26 அன்று வெற்றி விழாவாக கொண்டாட கட்சி அமைப்புகளுக்கு வேண்டுகோள்! வேளாண் விரோத சட்டங்கள் திரும்பபெறப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி!!

விவசாயிகள் – தொழிலாளர்கள் – பொதுமக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு!!!

விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் வகையிலும், இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பை சீரழிக்கும் வகையிலும், கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமான முறையிலும், நாடாளுமன்ற ஜனநாயக பண்புகளை மதிக்காமல் நரேந்திர மோடி அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவது என பிரதமர் அறிவித்துள்ளார். இது வரலாறு காணாத ஒன்றுபட்ட விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

உலக வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத அளவு ஓராண்டு காலம் கொடுமையான கொரோனா பேரிடர், கடுங்குளிர், கொடுமையான கோடை வெயில், அரசின் அடக்குமுறைகள், தாக்குதல்கள் என அனைத்தையும் நெஞ்சுறுதியோடு போராடியது வீர வரலாறு படைத்த போராட்டமாகும். ஓராண்டு காலமாக ஒன்றிய அரசு மற்றும் பாஜகவின் அடக்குமுறைகளையும், அவதூறுகளையும் எதிர்த்து அமைதியான முறையில் போராடி வெற்றி கண்ட விவசாயிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனதார பாராட்டுகிறது. இந்த போராட்டத்தில் ஆரம்பம் தொட்டு உறுதியாக நின்றவர்கள் என்ற முறையில் இந்த வெற்றியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெருமகிழ்ச்சியடைகிறது.

அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடி இந்த சட்டத்தில் விவசாயிகள் விரோத அம்சங்களை நியாயப்படுத்தியும், விவசாயிகள் தான் அந்த சட்டத்தின் நன்மைகளை புரிந்து கொள்ளவில்லை என்று சொல்வதும் அவர் முழுமையாக மாறவில்லை என்பதையே காட்டுகிறது. லக்கிம்பூர்கேரி கொலைகள் உள்பட எந்தவொரு விவசாயின் கொலைக்கும், மரணத்திற்கும் முன்பும் சரி, இப்போதும் சரி ஒரு வருத்தத்தைக் கூட தெரிவிக்கவில்லை என்பது பாஜக அரசின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்துகிறது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நின்ற தொழிலாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்த வேளாண் சட்டங்கள் கைவிட வேண்டுமென முதன்முதலில் தீர்மானம் நிறைவேற்றிய தோழர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடது முன்னணி அரசுக்கும், ஆட்சிக்கு வந்தவுடனேயே இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசுக்கும், இதேபோன்று தீர்மானங்களை நிறைவேற்றிய பிற மாநில அரசுகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்திய மக்களின் வாழ்வில் திணிக்கப்படும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் கிடைத்துள்ள முதன்மையான, முக்கியமான வெற்றி இது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் போராடுகிற மக்களுக்கு போராட்ட உத்வேகத்தை இந்த வெற்றி அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக முன்னுக்கு வந்துள்ள பொதுத்துறை மற்றும் அரசு சொத்துக்கள் விற்பனை, தொழிலாளர் உரிமைகளை மறுப்பதற்கு என்றே உருவாக்கப்பட்டுள்ள தொழிலாளர் விரோதச் சட்டங்கள் ஆகியவற்றிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கும் இது மிகப் பெரிய உத்வேகத்தை அளிக்கும்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தினக்கூலி உழைப்பாளிகள், ஆலை தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தொடக்க காலம் முதல் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வற்புறுத்தி ஆதரவு இயக்கங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பிலிருந்த அஇஅதிமுக, நரேந்திர மோடி அரசின் மோசமான வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்ததுடன், சட்டமன்றத்திலும் அதற்கு ஈடான சட்டங்களை நிறைவேற்றியது தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்த போராட்டத்தில் கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும் மற்றும் பல்வேறு வகைகளில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த மரணங்களுக்கு ஒன்றிய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். விவசாயிகளின் இதர கோரிக்கைகளான மின்சார சட்டத்தில் மாறுதல் செய்வது, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது, விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்குவது, அரசு கொள்முதலை முழுமையாக நிறைவேற்றுவது ஆகிய கோரிக்கைகளையும் நரேந்திர மோடி அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

நவம்பர் 26 வெற்றி விழா

புதுதில்லியில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் துவங்கிய தினமான நவம்பர் 26 அன்று “விவசாயிகளின் போராட்ட வெற்றி விழாவாக” தமிழகம் முழுவதும் கொண்டாட வேண்டுமென கட்சியின் அமைப்புகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.


திரு. கே. பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

Leave a Reply