Home>>உலகம்>>பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் ( International Day for the Elimination of Violence against Women)
உலகம்கனடாசமூக பணிசெய்திகள்பெண்கள் பகுதி

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் ( International Day for the Elimination of Violence against Women)

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் ( International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் உலகெங்கிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு அவசியமான நாள் ஆகும்.உலகளாவிய ரீதியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். தினமும் அதிர்ச்சியூட்டும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

நவம்பர் 25ல் தொடங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம், அதனை தொடர்ந்து டிசம்பர் 10 ஆம் தேதி முன்னெடுக்கப்படும் மனித உரிமைகள் தினம் வரையில் 16 நாட்களின் வரையிலான செயல்பாட்டின் தொடக்கத்தையும் குறிக்கிறது.பெண்களுக்கு எதிரான வன்முறை அனைத்து நாடுகளிலும் மனித உரிமை மீறல்களில் மிகவும் முக்கியனமான அவசியமான ஒன்றாகும் என்பதை இந்த தொடர் முன்னெடுப்புகள் நமக்கு நினைவூட்டுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் இந்த காலகட்டத்தில் ஒரு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்ய உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் அழைக்கப்படுகின்றனர்.

இதனை செயல்படுத்தும் வகையில் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கவும், சூழ்நிலையை எதிர்கொண்டு மீளவும் ஏற்ப ஆளுமை திறனை வளர்த்து முன்னேற்றத்தை நோக்கி பெண்களை பயணிக்க வைக்கவும் பல கொள்கை மற்றும் திட்டங்களை கொண்டு செயற்றிவரும் எங்களது INTERNATIONAL UNITED WOMENS FEDERATION அமைப்பின் சார்பாக பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) விழிப்புணர்வு கருத்தரங்கம் நவம்பர்  21, 2021 கனடா நேரம் காலை  10:00 – 12:00 வரை இணைய வழியாக நடைபெற்றது.

INTERNATIONAL UNITED WOMENS FEDERATION சர்வதேச செயரபாட்டாளர் திருமதி.சுபாங்கி சிவா அவர்களின் தொடக்கவுரையை தொடர்ந்து INTERNATIONAL UNITED WOMENS FEDERATION நிறுவனர் திருமதி. இராஜி பாற்றர்சன் வரவேற்ப்புரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக கனடா நாடளுமன்ற செயின்ட் லாரன்ட் தொகுதி உறுப்பினர் செல்வி எம்மானுல்லா இலாம்புருஸ் (Ms. Emmanuella Lambropoulos, Member of House of Commons, Canada) கலந்து கொண்டு பெண்களுக்கெதிரான வன்முறையை தடுக்கும் முதன்மை வழி கல்வியறிவும் விழிப்புணர்வுமே மூலமே கிடைக்கப் பெறும் என்று வலியுறுத்தினார். பிள்ளைகளை பாலின வேறுபாடில்லாமல் துணிவோடிருக்கும்படி வளர்க்க வேண்டும் எனவும், பெண்கள் தனது எல்லைகளை தாங்களே நிர்ணயக்கும் துணிவோடிருக்க பழக்க வேண்டும் எனவும் தனது கருத்துக்களை முன்வைத்தார்.

அவரையடுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் மக்கள் மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்ட கனடா, மொன்றியலை சேர்ந்த லவால் நகர ஆலோசகர் செல்வி.மேரி த்ரோஸ் (Ms. Mary Deros City Councilor-Parc Extension District, Montreal, Canada)  தமிழில் வணக்கம் முதல் பல்வேறு மொழிகளில் தனது வணக்கத்தை முன்வைத்தது தனது கருத்துக்களை முன்வைத்தார். வன்கொடுமைகளுக்கு முகங்கொடுக்கவும் உதவிக்கரம் நீட்டவும் அரசும், அமைப்புகளும் அதிகாரிகளும் துணையிருக்கும்போது பாதிக்கபட்டால் வெளியே சொல்லவும், தகுந்த உதவி கோரவும் பெண்கள் பயிற்றுவிக்கபட வேண்டும். பிரச்சனைகளை வெளியே பேச முன்வரவேண்டும் எனவும் தனது கருத்துக்களை பதிவுசெய்தார்.

அதனையடுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  இந்தியாவைச் சேர்ந்த விமர்சன அறிஞர், சமூக நீதி ஆர்வலர், பாரிஸ்டர் மற்றும் எழுத்தாளர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியின் சட்டம், மேம்பாடு மற்றும் மோதல் ஆய்வுகளின் பேராசிரியராக உள்ள டாக்டர் ராதா திசோசா (Dr. Radha D’Souza Professor of Law, the University of Westminster in the United Kingdom) அவர்கள் அரச வன்முறை குறித்த தனது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தார். மிகவும் பின்தங்கிய குரலற்ற மற்றும் தலித் சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளை பற்றிய தனது ஆழமான கருத்துக்களை முன் மொழிந்தார்.

அவரையடுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இலாப நோக்கமற்ற சேவை நிறுவனமான வெஸ்ட் ஐலேண்ட் மகளிர் மையத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சர்வதேச அமைப்புகளில் கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வரும் திருமதி.சாரா ஃபோர்டு (Ms. Sarah Ford, Executive Director West Island Women’s Centre) தங்கள் அமைப்பு வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மற்றும் புலம்பெயர் பெண்களுக்கு அளிக்கும் சேவை குறித்தும் தங்கள் சேவை மையத்திற்கு வரும் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை குறித்தும் தாங்கள் அவ்வகையான பெண்களுக்கு வழங்கும் சேவைகள் மற்றும் ஆதரவுகள் குறித்தும் தனது கருத்துக்களை முன்வைத்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  மாண்ட்ரீலின் பார் நிர்வாக உறுப்பினர் மற்றும் குடும்பச் சட்டம் மற்றும் இளைஞர் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற வழக்குரைஞர், SOS-AVOCATS INC. நகர கவுன்சிலர் திருமதி. வலேரி அசோலின் (Ms. Valerie Assouline Advocate, SOS-AVOCATS INC. City Councillor) அவர்கள் கலந்துகொண்டு குடும்ப சட்டத்தில் உள்ள குறைபாடுகள் குறித்த தனது கருத்துக்களை முன்வைத்தார் .குறிப்பாக புலம்பெயர் பெண்களுக்கு இவ்வகை  சட்ட குறைபாடுகள் அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்கு எவ்வாறு ஆதரவாக இருக்கிறது என்பதை தகுந்த உதாரணங்களோடு விளக்கி கூறினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட 21 ஆண்டுகளாக டொராண்டோ போலீஸ் சேவையில் உறுப்பினராகவும், தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை குடும்ப வன்முறை மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து தப்பியவர்களுக்கு உதவுவதற்காக சமூகத்திற்காக அர்ப்பணித்துள்ள Det. செரில் ஜோன்ஸ்(Detective Cheryl Jones Sex Crime Unit, TORONTO POLICE, Canada) அவர்கள் தனது பணி அனுபவத்தில் சந்தித்த வன்கொடுமைகள் குறித்த தனது அனுபவங்களை முன்வைத்து அரசாங்கமும் அரசு சார்ந்த அமைப்புகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காகவே செயல்பட்டு வருவதாகவும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உளவியல் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றுள்ள, புகழ்பெற்ற மெக்கில் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற, கியூபெக், மாண்ட்ரீலை சார்ந்த உளவியல் நிபுணர் டாக்டர். லாவண்யா சாம்பசிவம் தனது அனுபவத்தின் ஊடாக என்ன மாதிரியான வன்கொடுமைகள் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்றது என்றும் அதனால் என்னென்ன பாதிப்புகள் வருகின்றன என்றும் அதிலிருந்து எவ்வாறு பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்றும் வன்கொடுமைகள் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் தனது அனுபவம் மிகுந்த உரையை தகுந்த காணொளி மூலம் அருமையாக விளக்கி கூறினார்.

அதனை தொடர்ந்து பாகிஸ்தானை சார்ந்த  சமூக மேம்பாடு மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளரும், INTERNATIONAL UNITED WOMENS FEDERATION பாகிஸ்தான் பொறுப்பாளருமான செல்வி.எலைன் ஆலம் (Ms. Elaine Alam Development & Public Policy Ambassador-IUWF (Pakistan)) பாகிஸ்தான் மற்றும் மற்றும் ஆசிய நாடுகளில் சிறுபான்மை இன பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளை கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் தனது கருத்துக்களை முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கேள்வி பதில்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டு வினாக்களும் அதற்கான விடைகளும் அளிக்கப்பட்டன. இறுதியாக ,INTERNATIONAL UNITED WOMENS FEDERATION  மேற்பார்வையாளர் திருமதி இளவரசி இளங்கோவன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும். ஆதரவு நல்கிய அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி உரை கூற பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) விழிப்புணர்வு அரங்கம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றிய கருத்தரங்கங்களும் விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்தப் பெறவேண்டும். பிரச்சினைகளை பேச பேச அது கருத்துரு கொள்ளும். பிறகு கருத்துரு செயலாக்கத்திற்கு வழிவகுக்கும். செயலாக்கம் வன்கொடுமையை தடுப்பதற்கான ஒரு வழியை சமைக்கும். அது மட்டுமே பாலின வேறுபாடு அற்ற வன்கொடுமைகள் நீக்கப்பட்ட வளமான ஒரு சமூகத்திற்கு வழிகாட்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பற்றிய விழிப்புணர்வு கொள்வோம். வன்கொடுமைகளை வெளியில் சொல்ல துணிவோம். வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம். கரம் கொடுப்போம். வன்முறையற்ற வளமான வாழத்தகுந்த பூமி படைப்போம்.

திறவுகோலும் ஊடக அனுசரணை வழங்கி இந்நிகழ்வுக்கு துணை நின்றது குறித்து பெருமை கொள்கிறது.


செய்தி சேகரிப்பு:
இளவரசி இளங்கோவன்,
கனடா.

Leave a Reply