அம்பலமான சுங்கக்கட்டண சுரண்டல்: விசாரணை நடத்த வேண்டும் – சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்!
தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களில் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணமாக ரூ.3421 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இது கடந்த சில ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட சுங்கக்கட்டணத்தை விட மிக அதிகம் என்பதைக் கடந்து, கடந்த காலங்களில் சுங்கக் கட்டண வசூல் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தை உறுதி செய்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள 47 சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட்ட சுங்கக்கட்டணம் குறித்த விவரங்களை மத்திய நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான 7 மாதங்களில் தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் ரூ.3421 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாக மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு முழுவதும் வசூலிக்கப்பட்ட சுங்கக்கட்டணமான ரூ.3,875 கோடியில் இது 90 விழுக்காட்டுக்கும் அதிகமாகும். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் சுங்கக்கட்டண வசூல் உயராமல் நிலையாக இருந்த நிலையில், இந்த உயர்வு வியக்கத்தக்கது ஆகும்.
தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கக் கட்டண உயர்வு, தமிழ்நாட்டில், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்திருப்பதற்குக் காரணம் போக்குவரத்து அதிகரித்ததோ, சுங்கக்கட்டணம் உயர்த்தப் பட்டதோ அல்ல. மாறாக, சுங்கக்கட்டண சுரண்டல் கிட்டத்தட்ட தடுக்கப்பட்டிருப்பது தான். 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி வரை சுங்கக்கட்டணம் பணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. அதில் பெரும்பகுதி கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் ஃபாசுடாக் (FasTag) முறையில் கட்டணம் வசூலிக்கப்படுவதால், அதை மறைக்க முடியாது. அதனால் தான் நடப்பாண்டில் சுங்கக்கட்டண வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது.
2020-21 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டின் சுங்கக்கட்டண வசூல் இதே அளவில் நீடித்தால் 51% அதிகமாக இருக்கும். கடந்த நிதியாண்டிலும் ஒன்றரை மாதங்கள் பாஸ்டாக் முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் அதை ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ள முடியாது. 2019-20 ஆம் ஆண்டு கட்டணத்துடன் ஒப்பிட்டால், நடப்பாண்டின் கட்டண வசூல் 72% அதிகமாக இருக்கும். இதன் பொருள் கடந்த ஆண்டில் சுமார் 51 விழுக்காடும், அதற்கு முந்தைய ஆண்டில் சுமார் 72 விழுக்காடும் சுங்கக் கட்டணம் சுரண்டப்பட்டிருக்கிறது என்பது தான். இதை உறுதி செய்வதற்கு புள்ளிவிவரங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 47 சுங்கச்சாவடிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. அதேபோல், ஆண்டுக்கு ஆண்டு சுங்கக்கட்டணம் சராசரியாக 10% வரை உயர்த்தப்படுகிறது. அதன்படி சுங்கக்கட்டண வசூல் ஆண்டுக்கு குறைந்தது 15% அதிகரிக்க வேண்டும். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் சுங்கக்கட்டண வசூல் குறிப்பிடத்தக்க அளவில் மாறாமல், 2016-17இல் ரூ.3,320 கோடி, 2017-18இல் ரூ.3,894 கோடி , 2018-19இல் ரூ.3,262 கோடி, 2019-20 இல் ரூ.3392 கோடி, 2020-21இல் ரூ.3,875 கோடி என்ற அளவில் நிலையாகவே உள்ளது. இதற்குக் காரணம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள், குறிப்பிட்ட விழுக்காடு கட்டணத்தை கணக்கில் காட்டாமல் மறைத்து விடுவது தான்.
தனியாரால் அமைக்கப்பட்ட சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி, ஒரு நெடுஞ்சாலையை அமைப்பதற்காக செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்ட பிறகு பராமரிப்புக்காக 40% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். உண்மையான கணக்கு காட்டப்பட்டால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கசாலைகளுக்கும் செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்டிருக்கும். அதன்பிறகு 40% கட்டணத்தை மட்டுமே வசூலிக்க முடியும் என்பதால், அதை தவிர்த்து, இன்னும் பல ஆண்டுகளுக்கு முழுக் கட்டணத்தையும் வசூலிக்க வேண்டும் என்பதற்காகத் தான் சாலைகளை அமைத்த நிறுவனங்கள் முழுமையான கணக்கை காட்டுவதில்லை எனக் கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக ரூ.732 கோடி மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் அதைவிட ரூ.243 கோடி அதிகமாக ரூ.975 கோடி வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் ஒவ்வொரு சாலைக்கும் ஒரு கணக்கு உள்ளது. இது இயல்பானது அல்ல. கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்ததற்கான காரணம் என்ன? கடந்த ஆண்டுகளில் சுங்கக்கட்டண வசூல் மறைக்கப்பட்டதா? என்பன போன்ற வினாக்களுக்கு அதிகாரப்பூர்வ விடை காணும் வகையில் சுங்கக்கட்டண வசூல் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். விசாரணை முடிவடையும் வரை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டும் வரும் சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும்.
—
மருத்துவர் அன்புமணி ராமதாசு,
மாநிலங்களவை உறுப்பினர்,
பாட்டாளி மக்கள் கட்சி.