வங்கிகள் தனியார்மயமாக்கல் சட்ட முன்வடிவை எதிர்த்து நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
புதிய வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து மோடி தலைமையிலான அரசு பாடம் கற்றுக்கொண்டு, இனிமேலாவது சரியான திசையை நோக்கி நகரும் என நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், ஒன்றிய அரசின் செயல்பாடு மந்த நிலையில் உள்ள நாட்டின் பொருளாதாரம் மேலும் அதாள பாதாளத்திற்கு சென்று விடும் நிலையில் தான் உள்ளது.
விவசாயிகளின் மிகப்பெரிய போராட்டத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாத மோடி அரசு, வங்கித்துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் எதிர்ப்பையும் புறக்கணித்துவிட்டு, வங்கிகள் தனியார் மயமாக்கல் சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரில் கொண்டுவர முயல்கிறது.
குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளில் மக்களின் பணம் லட்சம் கோடி ரூபாய் உள்ளது. இவ்வளவு பெரிய தொகையை அப்படியே தூக்கி, வாங்கிய கடனைக் கூட கட்டாத கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மோடி அரசு ஒப்படைக்க போகிறது. இது நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகமாகும்.
மக்களின் பணத்திற்கு பாதுகாப்பு என்பது பொதுத் துறை வங்கிகள்தான். நாட்டின் வளா்ச்சிக்கும், பல்வேறு திட்டங்களுக்கும் பொதுத் துறை வங்கிகள்தான் உதவுகின்றன. ஆனால், தனியாா் மயமானால் பல்வேறு வகையான பிரச்னைகள் வருவதோடு, வேலைவாய்ப்புகளுக்கும் ஆபத்து ஏற்படும். மோடி அரசின் மோசமான நிர்வாக சீர்கேடுகளால், மந்த நிலையில் உள்ள நாட்டின் பொருளாதாரம் மேலும் அதாள பாதாளத்திற்கு சென்று விடும்.
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்களும், அலுவலர்களும், கடந்த மார்ச் 15 மற்றும் 16 ஆகிய இரு நாட்களில் நாடு தழுவிய மாபெரும் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினர். ஆனால், அப்போராட்டத்தை மோடி அரசு சிறியதும் கண்டுக்கொள்ளவில்லை.
பின்னர், 13 நிறுவனங்கள் 4 லட்சத்து 46 ஆயிரத்து 800 கோடி ரூபாயை கடன் வாங்கி திரும்பச் செலுத்தாமல் இருந்தன. இந்தக் கடனை அடைக்க இந்தியாவின் மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களான மிட்டல், ரிலையன்ஸ், டாட்டா, வேதாந்தா உள்ளிட்ட 9 நிறுவனங்கள் முன்வந்தன. கடன் தொகையை வங்கிகளிடம் பேரம் பேசிக் குறைத்து, வெறும் 1,61,720 கோடி ரூபாய்க்கு அந்த 13 நிறுவனங்களின் மொத்தச் சொத்துக்களையும் வாங்கிக் கொண்டன. இதன் காரணமாக, பொதுத்துறை வங்கிகளுக்கு சுமார் 2 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
இப்படி தனது மோசமான நிர்வாகத்தாலும், நடவடிக்கையாலும் பொதுத்துறை வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்படுத்தி விட்டு, பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதாக ஒன்றிய அரசு பழி சுமத்துகிறது.
அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பெரும் தொகையை கடனாக கொடுத்து விட்டு, அத்தொகையை தள்ளுபடி செய்து வந்த மோடி அரசு, தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களிடமே பொதுத்துறை வங்கிகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
முக்கியமாக, பொதுத்துறை வங்கிகளை கொஞ்சம் கொஞ்சமாக நலிவடையச் செய்து தனியார் வங்கிகளை கொழுக்க வைப்பதுதான் ஒன்றிய அரசின் திட்டம்.
பொதுத்துறை வங்கிகளை விற்பது மகத்தான தவறு என்று சுட்டிக்காட்டும் பொருளாதார வல்லுனர்கள், வங்கிகளை தனியார் மயமாக்கும் மோடி அரசின்கொள்கை தேசிய நலன்களுக்கு விரோதமானது என்று கூறுகிறார்கள்.
நெருக்கடியான இச்சூழலில் தான், வங்கிகள் தனியார்மயமாக்கல் சட்ட முன்வடிவை எதிர்த்து, நாளை மற்றும் நாளை மறுநாள், நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறை கூவல் விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு தெரிவிப்பதோடு, போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
—
திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.