Home>>இந்தியா>>மேகதாது அணை கட்ட கர்நாடகாவில் காங்கிரசு கட்சி பேரணியா?
இந்தியாகர்நாடகாசெய்திகள்தமிழ்நாடுமாநிலங்கள்வேளாண்மை

மேகதாது அணை கட்ட கர்நாடகாவில் காங்கிரசு கட்சி பேரணியா?

ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு,
பெசன்ட் நகர்,
சென்னை,
நாள்: 23.12.2021.


மேகதாது அணை கட்ட கர்நாடகாவில் காங்கிரசு கட்சி பேரணியா? கண்டனம் தெரிவித்து சனவரி 18 ராசிமணலில் பேரணி ஆர்ப்பாட்டம் பி.ஆர். பாண்டியன் அறிவிப்பு.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் அவர்கள் சென்னையில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட்டு வரும் நிலையில், கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நோக்கோடு தமிழ்நாடு நலனுக்கு எதிராக காங்கிரசு கட்சியின் கர்நாடகாவில் அறிவித்துள்ளது.

வரும் ஜனவரி 9ஆம் தேதி பெங்களூரில் நடைப்பயணமாக துவங்கி, சனவரி 18ல் மேகதாதுவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக விவசாயிகளின் ஒன்றுபட்ட தீவிர போராட்டத்தால் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு ஆணையத்திற்கான நிரந்தர தலைவரும் தேர்வு செய்யப்பட்டு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலோடு ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆணையத்தை மிரட்டும் உள்நோக்கத்தோடு, அரசியல் லாப நோக்கத்தோடு முடிந்துபோன காவிரி பிரச்சினையை மீண்டும் காங்கிரசு கட்சி துவக்குவது தமிழ்நாட்டு நலனுக்கு எதிரானது.

இதனை அறிந்த கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அனுமதி கிடைத்த பிறகு உடனடியாக அணை கட்டுமானப் பணி துவங்கும் எனவும், அதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தமிழக விவசாயிகள் மீண்டும் போராட்டத்திற்கு தள்ளுவதாக அமைகிறது.

இதனை கண்டித்தும், ராசிமணல் அணையை கட்டி கடலில் கலக்கும் உபரி நீரை தடுத்து மேட்டூர் அணை மூலம் பாசனம் பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் அடிக்கல் நாட்டிய ஒகேனக்கல்லுக்கு மேலே கிருஷ்ணகிரி மாவட்ட வன எல்லையில் உள்ள ராசி மணலில் அணை கட்டுவதற்கான நடவடிக்கையை துவங்கவும் வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரும் ஜனவரி 16 ஆம் தேதி பூம்புகாரில் துவங்கி நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் திருச்சி நாமக்கல் ஈரோடு மேட்டூர் பகுதிள் வழியாக பேரணி நடத்தி 18ஆம் தேதி ஒகேனக்கல் ராசிமணல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

காங்கிரசு கட்சி காவிரி மட்டுமன்றி முல்லைப் பெரியாறிலும் அரசியல் உள்நோக்கத்தோடு தமிழகத்திற்கு எதிராக அணையை உடைத்து புதிய அணை கட்ட வேண்டும் என்கிற விசம பரப்புரையில், போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளது. இதற்கு முடிவு கட்டும் வகையில் வரும் 28ஆம் தேதி மதுரையில் அனைத்து உழவர்கள், சமூக சேவை அமைப்புகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைத்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்க உள்ளோம்.

இதற்காக வைகை முல்லைப் பெரியாறு அணை உரிமையை மீட்பதற்காக மதுரை மண்டல உழவர்களை பாதுகாப்பதற்காக வைகை, முல்லை பெரியாறு பாசன பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பை துவங்கி உள்ளோம்.

பாரதிய சனதா கட்சி தமிழ்நாட்டிற்கு எதிராக கர்நாடகம், கேரளாவில் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், தற்போது அதனை காங்கிரசு கட்சி கையில் எடுப்பது தோல்வியிலேயே முடியும் என்பதை எச்சரிக்கிறோம் என்றார்.

சென்னை மண்டல தலைவர் வி.கே. துரைசாமி, சைதை சிவா, இசிஆர் பால்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


செய்தி உதவி:
திரு. என்.மணிமாறன்,
செய்தித் தொடர்பாளர்.


செய்தி சேகரிப்பு:
திரு. ஸ்ரீதர்,
திருவாரூர்.

Leave a Reply