Home>>அரசியல்>>மேக்கேத்தாட்டு அணைக்கு அனுமதி வழங்க முனையும் இந்திய அரசைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அரசியல்இந்தியாசெய்திகள்தஞ்சாவூர்தமிழ்நாடுமாவட்டங்கள்வேளாண்மை

மேக்கேத்தாட்டு அணைக்கு அனுமதி வழங்க முனையும் இந்திய அரசைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மேக்கேத்தாட்டு அணைக்கு அனுமதி வழங்க முனையும் இந்திய அரசைக் கண்டித்தும், உரியவாறு அதை எதிர்க்கத் தவறும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்! செய்ய போவதாக “காவிரி உரிமை மீட்புக் குழு கூட்டத்தில் முடிவு!”.


காவிரி உரிமை மீட்புக் குழுவின் கூட்டம், இன்று (15.12.2021) காலை தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் தலைமை தாங்கினார். காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் திரு. த. மணிமொழியன், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. க. செகதீசன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழர் தேசிய முன்னணி இளைஞரணிச் செயலாளர் தோழர் மன்னை இராசசேகரன், மனித நேய சனநாயகக் கட்சி நகரச் செயலாளர் திரு. அப்துல்லா, இந்திய யூனியன் முசுலிம் லீக் நகரச் செயலாளர் திரு. சைனுலாப்தீன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட கோவில்பத்து தட்சிணாமூர்த்தி, காவிரி உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் துரை. இரமேசு, சாமி கரிகாலன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

2022 சனவரி 6 அன்று தஞ்சையில் போராட்டம் கூட்டத்தில், வரும் 06.01.2022 அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு – மேக்கேத்தாட்டு அணைக்கு அனுமதி வழங்க முனையும் இந்திய அரசைக் கண்டித்தும், உரியவாறு அதை எதிர்க்கத் தவறும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதென காவிரி உரிமை மீட்புக் குழு முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டன.

தீர்மானம் – 1 :
——————-
மேக்கேத்தாட்டு அணைக்கு ஆதரவாக இந்திய அரசு!
தமிழ்நாடு அரசின் எதிர்வினை என்ன?

கர்நாடக அரசு தனது எல்லையில் காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டு அணை கட்டி, தமிழ்நாட்டிற்கு வெள்ள நீர் கூட வராமல் தடுக்கும் வேலையில் தீவிரமாக உள்ளது. கர்நாடகத்தின் இந்த சட்ட விரோதச் செயலை நரேந்திர மோடியின் இந்திய ஆட்சி ஊக்கப்படுத்தித் தூண்டி வருகிறது என்பதற்கான சான்று, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை 22.12.2021 அன்று கர்நாடக சட்டப்பேரவையில் அறிவித்த செய்தியாகும்.

மேக்கேத்தாட்டு அணை கட்டுவதற்கு இந்திய அரசின் நீர்வளத்துறை ஏற்கெனவே அனுமதித்து விட்டது. காவிரி மேலாண்மை ஆணையமும் அனுமதிக்க உள்ளது என்று 22.12.2021 அன்று கர்நாடக சட்டப் பேரவையில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் எழுப்பிய வினாவுக்கு விடையளித்த பொம்மை, “மேக்கேத் தாட்டில் 67.16 ஆ.மி.க. (டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதற்கு ஏற்கெனவே ஒன்றிய அரசின் நீர்வளத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதலைப் பெற முயன்று வருகிறோம். மேக்கேத்தாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி உள்ளோம். 27.12.2021 அன்று நடைபெறும் கூட்டத்தில் மேக்கேத்தாட்டு அணைக்கு மேலாண்மை ஆணையம் அனுமதி அளிக்கும்; அதற்கான முயற்சிகளில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது” என்று கூறினார்.

நூற்றுக்கு நூறு பொய் !
——————————-
இப்போதுள்ள கர்நாடக அணைகளிலிருந்து வெளியேறும் மிகை வெள்ள நீரைத் தேக்கித் தமிழ்நாட்டிற்குத் திறந்து விடுவோம் என்று கர்நாடக ஆட்சியாளர்கள் கூறுவது நூற்றுக்கு நூறு பொய்! வரலாறு காணாத மழையும் வெள்ளமும் வந்த நடப்பு ஆண்டில்கூட உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி மாதாமாதம் திறந்துவிட வேண்டிய காவிரி நீரைக் கர்நாடகம் தரவில்லை.

வரலாறு காணாத அடைமழையும் வெள்ளமும் வந்த இவ்வாண்டு கூடக் காவிரியிலிருந்து கடலில் கலந்த தண்ணீர் அளவு 42 ஆ.மி..க. (டி.எம்.சி) என்று இந்திய நீராற்றல் துறை கூறியுள்ளது. (நம் கொள்ளிடத்தில் இரண்டு இலட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்).

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நாம் தொடர்ந்து கூறி வருகிறோம் – எவ்வளவு மிகை வெள்ளம் காவிரியில் வந்தாலும் கடலில் கலப்பது 50 ஆ.மி.க. வுக்கு (டி.எம்.சி) மேல் போகாது என்று! மேக்கேத்தாட்டு அணையின் கொள்ளளவு 67.16 ஆ.மி.க. (டி.எம்.சி). எவ்வளவு மிகை வெள்ளம் வந்தாலும் “மேக்கேத்தாட்டு” அணையிலிருந்து சொட்டு நீர் கூட திறந்துவிடும் நிலை கர்நாடக அரசுக்கு வராது!

மேக்கேத்தாட்டு அணை கட்டினால் – தமிழ்நாட்டில் 26 இலட்சம் ஏக்கர் பாசன நிலம் பாலை வனமாகிவிடும். சென்னை, இராமநாதபுரம், வேலூர், திருப்பூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்குக் குடிநீர் கிடைக்காது.

கர்நாடகத்தின் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் தலைமையில், 10.01.2022 அன்று பெங்களுருவில் தொடங்கி பத்து நாட்கள் பல ஊர்கள் வழியாக பேரணியாகச் சென்று 19.01.2022 அன்று மேக்கேத்தாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள். பா.ச.க. ஆட்சிகள் மேக்கேத்தாட்டு அணையை விரைந்து கட்ட முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டின்பேரில் இந்த ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் எதிர்வினை என்ன?
—————————————————-
இவ்வாறு இந்திய அரசின் துணையோடு மேக்கேத்தாட்டு அணை கட்டுவதற்கு முயற்சிகள் கர்நாடகத்தில் நடக்கும்போது, இதனைக் கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் அல்லது நீராற்றல் துறை அமைச்சர் எந்தக் கருத்தும் கூறவில்லை, அறிக்கையும் வெளியிடவில்லை என்பது உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றமளிக்கிறது.

காவிரி மேலாண்மை ஆணையம் தனது 27.12.2021 கூட்டத்திற்கான பொருள் நிரலில் (அஜென்டாவில்) மேக்கேத்தாட்டு அணை அனுமதி குறித்து பேசுவது என்று சேர்த்து அறிவித்தது. (பின்னர் அக்கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது). காவிரி மேலாண்மை ஆணையம் ஒவ்வொரு கூட்டத்திலும் செயலாக்கப் பொருள் நிரலில் (அஜண்டாவில்) மேக்கேத்தாட்டு அணைக்கு அனுமதி வழங்கலை வைத்து வருகிறது.

ஏற்கெனவே பல கூட்டங்களில் மேக்கேத்தாட்டைப் பொருள் நிரலில் வைப்பதைத் தமிழ்நாட்டு அதிகாரிகள் எதிர்த்து, அது பொருள் நிரலில் விவாதிக்காமல் கிடப்பில் போடப்பட்டது. அப்போக்கை, தமிழ்நாடு அரசு கண்டனம் செய்ததில்லை. இப்பொழுது மீண்டும் 27.12.2021 கூட்டத்திற்கான பொருள் நிரலில் காவிரி மேலாண்மை ஆணையை அதிகாரிகள் சேர்த்திருப்பதிலிருந்தே, மோடி ஆட்சி, சட்ட விரோத – உச்ச நீதிமன்றத் தீர்ப்பு விரோத – மேக்கேத்தாட்டிற்கு அனுமதி கொடுப்பதில் தீவிரம் காட்டுகிறது என்ற உண்மை அம்பலமாகிறது.

மேக்கேத்தாட்டு அணை அனுமதியைப் பொருள் நிரலில் முன்வைத்தால் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் முடிவைத் தமிழ்நாடு முதலமைச்சர் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். புதுச்சேரி, கேரள முதல்வர்களும் இவ்வாறு அறிவிக்குமாறு தமிழ்நாடு முதல்வர் வேண்டுகோள் வைக்க வேண்டும்.

இந்நிலையில், மேக்கேத்தாட்டு அணையைக் கட்டுவதற்கு ஏற்கெனவே நீர்வளத்துறையின் மூலம் அனுமதி கொடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்திலும் அதற்கான ஏற்பிசை கிடைப்பதற்கான பணிகளை மோடி ஆட்சி முனைந்து செய்து வருகிறது. பா.ச.க. ஆட்சியின் இந்த தமிழன விரோதப் போக்கு நடவடிக்கைகளைக் கண்டித்தும், இதற்கு உரியவாறு எதிர்வினையாற்றி தமிழ்நாட்டுக் காவிரி நீரைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் – வரும் 2022 சனவரி 6 (வியாழன்) அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென காவிரி உரிமை மீட்புக்குழு முடிவு செய்கிறது!

இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்டத்திலிருந்து கடலூர் மாவட்டம் வரையுள்ள உழவர்களும், மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 2 :
——————-
இணையதளக் கொள்முதலைக் கைவிட்டு
நேரடிக் கொள்முதலைச் சீர்செய்க!

நடப்பு சம்பாப் பருவ நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்கள் தங்கள் நெல்லை நேரடியாகக் கொண்டு சென்று விற்க அனுமதி மறுத்து, இணையதளத்தில் முன்பதிவு செய்து, அதிகாரிகளின் முன் அனுமதி பெற்று விற்கும் விதிமுறைகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் முன்பதிவு முறைகளை அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள நிபந்தனைகளை நிறைவேற்றி கிராமத்து உழவர்கள் நெல்லை உடனுக்குடன் விற்க வாய்ப்பில்லை.

ஆதார் அட்டை எண் – நிலத்தின் சிட்டா நகல் (புல எண்), கொள்முதல் நிலையத்தின் முகவரி முதலியவற்றை இணையத்தில் பதிவு செய்து உழவர்கள் காத்திருக்க வேண்டும். அதிகாரிகள் ஒதுக்கீடு செய்யும் நாளில், ஒதுக்கீடு செய்யும் கொள்முதல் நிலையத்தில் உழவர்கள் தங்கள் நெல்லைக் கொண்டு சென்று விற்க வேண்டும்.

இப்புதிய முறையில் உள்ள சிக்கல்கள் :

1. கிராமத்து உழவர்கள் இணையதளப் பதிவிற்கு அடுத்தவர்கள் உதவியை நாட வேண்டும்!

2. இதுவரைக் கொள்முதல் நிலையங்கள் முன் காத்துக் கிடந்த நெல் மூட்டைகள் இனி களத்து மேட்டிலோ, வேறு இடங்களிலோ காத்துக் கிடக்க வேண்டும். இணைய வழியாக அனுமதி கிடைக்கும் வரையும் – அதில் குறிப்பிடப்படும் நாள் வரையும் நெல் மூட்டைகளை வெட்டவெளியில் உழவர்கள் பாதுகாக்க வேண்டும்.

எனவே புதிய சுமைகளை உழவர்கள் தலையில் சுமத்தும் சிக்கலான இணையதளப் பதிவு முறையைக் கைவிட்டு, நேரடிக் கொள்முதல் நிலையங்கள் உடனுக்குடன் நேரடியாக நெல்லை வாங்கும் முறையை ஊழலற்றதாக – விரைந்து செயல்படுத்துவதாக அரசு திருத்தி அமைத்து செயல்படுத்த வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 3
——————-
பெருமழை சேத இழப்பீட்டுத் தொகை
உடனே வழங்க வேண்டும்!

அண்மையில் பெய்த பெருமழையில் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஒரு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்தது. ஒரு ஹெக்டேர் என்பது இரண்டரை ஏக்கர். ஆனால், ஒரு டீஏக்கர் சாகுபடி செலவு குறைந்தது 30,000 ரூபாய் ஆகும். மிகவும் குறைத்து ஒரு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் என அறிவித்த தொகையைக் கூட உழவர்களுக்குத் தமிழ்நாடு அரசு இன்னும் வழங்கவில்லை. உடனடியாக அத்தொகையை தமிழ்நாடு அரசு உழவர்களுக்கு வழங்க வேண்டும்!

தீர்மானம் – 4
——————-
காவிரி உரிமைப் போராட்ட வழக்குகளைத்
தள்ளுபடி செய்ய வேண்டும்!

காவிரி உரிமைக்கான போராட்டங்கள் பல்வேறு சனநாயக வடிவங்களில் நடந்தன. அவற்றில், ஏராளமான உழவர்களும், அவர்கள் வீட்டு இளைஞர்களும் பெண்களும் பங்கேற்றனர். இவர்கள் மீது போட்ட வழக்குகள் இதுவரை தள்ளுபடி செய்யப்படவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உழவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் தள்ளுபடி செய்வோம் என ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனால், காவிரி உரிமை மீட்புக்காக சனநாயக வழியில் போராடிய உழவர்கள் மீது போட்ட வழக்குகளை தள்ளுபடி செய்வோம் என்று இதுவரை அறிவிக்கவில்லை.

இதில் இன்னொரு பெரிய தீங்கு நடந்து கொண்டுள்ளது. ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை அன்று மாலையே விடுவித்து விடுகின்றனர். ஆனால், இவ்வழக்குகள் காவல் நிலையக் கணிப்பொறிகளில் ஏற்றப்படுகின்றன.

பின்னர், இளைஞர்கள் ஓட்டுநர் உரிமம் பெற, வெளிநாட்டுக்குச் செல்ல கடவுச்சீட்டு பெற – இன்னும் பல அரசுப் பணிகளைப் பெற காவல் நிலையத்தில் வழக்கில்லை என சான்றிதழ் கேட்கிறார்கள். அவ்வாறு கேட்கும்போது, கணிப்பொறியைப் பார்த்துவிட்டு, அதில் பல ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டு, நீதுிமன்றத்தில் நடத்தப்படாத முதல் தகவல் அறிக்கைகள் (FIR) இருக்கின்றன. அவற்றில் இவர்கள் பெயர்கள் இருக்கின்றன. எனவே காவல் நிலையத்தில் வழக்கில்லை என சான்றிதழ் கொடுக்க மறுக்கிறார்கள். இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏராளமான இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு மிகவும் துயரநிலையில் இருக்கிறார்கள்.

இவர்களுக்கெல்லாம் வாழ்வளிக்கக்கூடிய வகையில், இந்த வழக்குகள் அனைத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கைவிட வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது!


செய்தி உதவி:
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு.


செய்தி சேகரிப்பு:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply