“நம்பிக்கை நடவு செய்த உழவரைப் போற்றுவோம்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொங்கல் வாழ்த்து.
தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தித்திக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறோம். தை முதல் நாளாம் பொங்கல் திருநாள் தமிழகத்தில் மட்டுமின்றி புவிப்பரப்பெங்கும் விரிந்து பரவியுள்ள தமிழ் மக்கள் அனைவராலும் உவகையோடு கொண்டாடப்படுகிறப் பண்பாட்டு பெருவிழாவாகவும் திகழ்கிறது. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற முதுமொழிக்கேற்ப சாதி, மத பேதமற்ற சமத்துவப் பொங்கலாக பொங்கல் விழா கொண்டாடுவோம்.
பொங்கல் திருநாள் உழவர் – உழைப்பாளிகளின் திருநாள். இயற்கையோடு இயைந்தும் இசைந்தும் வாழப்பழகிய மனிதகுலம் கண்டுபிடித்த முதன்மையான தொழில்களில் ஒன்று வேளாண்மை. உலகிற்கு உணவுபடைத்து, உயிர்வளர்க்கிற உழவுத்தொழிலை சிறப்பித்துப் போற்றுகிற இந்த விழா இயற்கைக்கு நன்றி தெரிவிக்கிற விழாவாகவும் திகழ்கிறது. இந்தியத் திருநாட்டின் பன்முகப் பண்பாட்டை பறைசாற்றும் விழாவாகும் இது.
இந்த ஆண்டு பொங்கல் திருநாள் இந்திய விவசாயிகள் பெற்ற மகத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம் அர்த்த அடர்த்திமிக்கதாக மாறியுள்ளது. இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கைமாற்றிவிடும் வகையில் ஒன்றிய பாஜக கூட்டணி அரசினால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை தங்களது அயர்வற்ற தொடர் போராட்டத்தின் மூலம் திரும்பப் பெற செய்துள்ளனர் இந்திய உழவர்கள். உலகம் முழுவதும் உள்ள போராட்டக்காரர்களுக்கு புதிய நம்பிக்கையை நடவு செய்திருக்கிறது உழுகுடிகளின் வெற்றி. இத்தகையப் போராட்டங்களை தொடர்வதன் மூலமே இந்தியாவின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும்.
உலகம் இதுவரை எத்தனையோ கொடும் தொற்றுநோய்களை சந்தித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிதர்களை ஆட்டிப்படைக்கும் கொரோனா எனும் பெருந்தொற்று உருமாறி உருமாறி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. எனினும் மருத்துவ அறிவியலின் துணைகொண்டு, இந்த நோயிலிருந்தும் மனிதகுலம் மீளும் என்கிற நம்பிக்கைக் கொள்வோம். “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்பது வள்ளுவர் வாக்கு. முதலாளித்துவத்தின் கோரப்பசிக்கு இயற்கை வளத்தை வேட்டையாடியதால் பூமிக்கிரகத்தின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதும். இத்தகைய தொற்றுநோய்கள் பரவுவதற்கு ஒரு முக்கிய காரணம் என அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். எனவே சுற்றுச்சூழலையும், இயற்கை வளத்தையும், பல்லுயிர் பாதுகாப்பையும் காப்போம்.
ஆதிச்சநல்லூர், கீழடி, சிவகளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் அகழ்வாய்வுகளில் கிடைக்கும் பொருண்மைச் சான்றுகள் தமிழ்மொழியின் தொன்மைக்கு சான்று பகர்கின்றன. ஆனால் ஒன்றிய ஆட்சியாளர்கள் நம் நாட்டின் மொழிச்சமத்துவத்தைச் சிதைத்து இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிலேயே குறியாக உள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் பன்மைத்துவத்தை அழித்து ஒற்றை தன்மையை திணிக்கின்றனர். மாநில உரிமைகளைப் பறிக்கின்றனர். கூட்டாட்சிக்கு குழிபறிக்கின்றனர். இதைத் தடுத்து நிறுத்தி வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் உயர் பண்பை பாதுகாப்போம்.
நாடு முழுவதும் மத வன்முறைகளைத் தூண்டி அதன் மூலம் வாக்கு அறுவடை செய்ய இந்துத்துவா பரிவாரம் முயல்கிறது. இத்தகைய களைகளை அகற்றுவதன் மூலமே இந்தியாவின் ஒற்றுமைப் பயிர் செழித்து வளரும்.
தைபிறந்தால் வழிபிறக்கும் என்பது தமிழர்களின் முதுமொழி. ஆணும் பெண்ணும் சமமென கருதும் பாலின சமத்துவம் நிலைபெறவும், சாதி மதவெறி சக்திகளை முறியடித்து மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கவும் இந்தப் பொங்கல் நாளில் உறுதியேற்போம். பண்பாட்டு நிகழ்வாக திகழ்ந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை தமிழக மக்களின் ஒன்றுபட்ட போராட்டம்தான் மீட்டெடுத்தது. போராட்டங்களின் வழியே பொதுவுடமை மலர்ந்திடவும், மதச்சார்பற்ற இந்தியாவை பாதுகாத்திடவும் உறுதியேற்போம்.
—
திரு. கே. பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ (எம்),
தமிழ்நாடு.