Home>>அரசியல்>>ஆறு ஒப்பந்தங்களும், ஆறாத இரணங்களும்!

தமிழர்கள் நாம் பழிவாங்கும் நோக்குடன் அலையவில்லை. நாங்கள் தேடுவது ஈழத் தமிழ் தேசிய இனத்திற்கான நீதியையே. சிறீலங்கா பௌத்த பேரினவாத அரசாங்கங்கள் ஒருபொழுதும் எமக்கான நீதியை வழங்கப்போவதில்லை. அதேபோல் சர்வதேசமும் எமக்கான தீர்வை நியாயமான முறையில் பெற்றுத் தரப் போவதில்லை. தங்களுக்கு சாதகமான விதத்திலேயே அவர்கள் நகர்வுகள் இருக்கும். யுக்ரைன்-ரஸ்யப் போரும்-அதன் விளைவுகளும், இதனால் எழும் பொருளாதார நெருக்கடிகளும்,  புவிசார் அரசியலில் உறவுநிலை மாற்றங்களும் எனப் பெரும் கள-நிலை மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது பூகோள அரசியல்.

சர்வதேச அழுத்தங்களை நீர்த்துப் போக வைப்பதற்காக அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை ராஜபக்சே சகோதரர்கள் அரசின் கண்துடைப்பு நாடகங்களில் ஒன்றே. அரசு எதிர்கொண்டிருக்கும் சர்வதேச விசாரணை மற்றும் நீதி பொறிமுறையை நீர்த்துப்போக வைக்கும் நடவடிக்கையாக சில உறுதிமொழிகளை வழங்கி இருப்பது பெரும் ஆபத்தான விளைவே. ஆம் நல்லிணக்க கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல கூறிக்கொண்டு எமது மக்களின் நீண்டகால முயற்சிக்கு பின்னர், தற்பொழுது ஐநாவில் முன்னெடுக்கப்படும் நீதிப் பொறிமுறையை அரசு தவிடு பொடியாக்க இடமளிக்க எடுக்கின்ற இந்நாடகத்திற்கு துணைபோகிற தமிழ் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும். இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் முகமாக புலம்பெயர் தமிழர்களின் முதலீட்டிற்கு அழைப்புவிடும் சுமந்தரன் போன்ற சுயதந்திரவாதிகளின் அழைப்பினையும் சிந்திக்கும் ஆற்றலும், தேசிய உணர்வும் மிக்க எந்தவொரு தமிழர்களும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சனை இருப்பதை  ஏற்றுக் கொள்ளாத அரசதரப்பு, அது வெறும் பொருளாதாரப் பிரச்சனைதான் என்று கூறும் அதன் அதிபரும் அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வு விடயமாக கருத்துக்களை தெரிவித்திருந்தாலும், அதை நிறைவேற்ற முடியாத நிலைமையில்  தான் இப்பொழுது ராஜபக்சக்களின் அரசாங்கம் விளங்குகிறது.

மனித உரிமை மீறல், யுத்தக் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றிற்கு ஆதாரமாக இருப்பது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரமாகும்.  இன்றும் சர்வதேச நீதி பொறிமுறைக்கு கொண்டு செல்வதற்கு ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஐநாவும் அதற்கான பலமான கோரிக்கைகளில் தமிழர் தரப்பும் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படியான சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு ஆதாரங்களைத் திரட்டுவது சம்பந்தமாக அரசின் நல்லிணக்க வெளிப்பாடுதான் எம்மக்களுக்கு நலன் தரும் பிரதான அம்சமாகும். அதைவிடுத்து கடந்தகாலங்களில் அதற்குத் தீர்வாக தாங்கள் உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கிறோம் என்று அரசு உறுதி மொழி வழங்கியமை  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை இல்லாமல் ஆக்குகின்ற செயலாகவே அமைந்தது.

காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்குகிறேன் என்ற கோத்தாவின் தற்போதைய நாடகமும் ஐநா மற்றும் தமிழர்களது முயற்சிகளை நீர்த்துப்போக வைக்கும் நடவடிக்கையாகும். இன்று நீலிக் கண்ணீர் வடிக்கும் அரசு ஒருபுறமும், பிரதமர் யாழ் வருகை தந்த வேளை அறப்போராட்டத்தில் பங்குபற்றிய வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து இரண்டு பெண்மணிகளை அடித்துடைத்து இருக்கின்றது அரசபடை.

இந்நாட்டில் அரசியல் கைதிகள் இல்லை என்று ஊடகங்களிலும் பாராளுமன்றத்திலும் உரையாற்றி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய நீதியமைச்சர். அவரின் தலைமையில் குழு ஒன்றை அமைத்து அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக சட்ட விடயங்களை பரிசீலிப்பதாக அரசு உறுதிமொழி வழங்கியிருப்பதும் வேடிக்கைக்கு உரியதே.

இவ்வாறான சூழ்நிலையில் இந்தியா இலங்கை இடையே ஆறு ஒப்பந்தங்கள் கைச்சாத்தகியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சிறீலங்காவிற்கு சென்று சனாதிபதி , பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகிய ராஜபக்ச  சகோதரர்களைச் சந்தித்ததும் அனைவரும் அறிந்ததே. அச்சந்தர்ப்பத்தில் ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இருநாடுகளிற்கிடையில் கைச்சாத்தான ஒப்பந்தங்களில் ஒன்று நயினாதீவு, நெடுந் தீவு,  அனலை தீவுகளில் மின் திட்டங்கள் (SOLAR WIND ENERGY) (சூரிய காற்று ஆற்றல்) இலங்கையின் பாவனைக்கு இந்தியா செய்யும் ஒரு உதவி மின் திட்டம் எனக் கூறப்படுகிறது.

இத்தீவுகளில் சீன செயல்படுத்தவிருந்த  மின்திட்டத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி  எதிர்த்தது. தற்பொழுது  மானியத்துடன் செயற்படுத்தும் யுக்தியைக் கையாண்டு இந்தியா இலங்கையுடன் இவ்வொப்பந்தத்தின் மூலம் ராஜதந்திரரீதியாக தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்கிறது. இலங்கையும் சீனக்கடன் பொறியில் சிக்க வைக்;கும் சீனாவின் திட்டத்தை நிராகரித்துவிட்டு இந்தியாவின் மானிய உதவியுடனான திட்டத்தை ஏற்றுக்கொண்டது. சீனத்தூதுவர் இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இதற்கடுத்த ஒப்பந்தம் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் Maritime Rescue Co-ordination Centre (MRCC).  இதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவும்- இலங்கையும் ஆளுமையைத் தங்கள் வசம் வைத்திருத்தல்.

கொழும்பில் உள்ள இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மூலம் அமைக்கப்படவுள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் (எம்.ஆர்.சி.சி) டெல்லி மற்றும் கொழும்பு ஆகியவை இந்தியப் பெருங்கடலில் தங்கள் ஒத்துழைப்பை ஆளுமையை அதிகரிக்கின்றன. உண்மையில் உற்று நோக்கினால் இந்தியாவின் கண்காணிப்பும், கட்டுப்பாடும் வடக்கு-கிழக்கில் மட்டுமல்லாது முழு இலங்கையிலும் நிலைத்து, கடல்சார் பிரதேசங்களின் பாதுகாப்பு ஆளுமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

MRCC ஒப்பந்தம் பற்றி:

  •  MRCC உடன்படிக்கையின்படி, ஹம்பாந்தோட்டையில் கடல்சார் மீட்பு துணை மையம் ஒன்று அமைக்கப்படும்.
  • தெற்கில் காலி, ஆர்கம் விரிகுடா, மட்டக்களப்பு, திருகோணமலை, கிழக்குக் கடற்கரையில் கல்லாவ மற்றும் வடக்கில் முள்ளிக்குளம் மற்றும் பருத்தித்துறை ஆகிய ஏழு துணைப் பிரிவுகளைக் கொண்ட ஆசுஊஊ வலையமைப்பை முழு இலங்கைக் கடற்கரையிலும் கடற்படைத் தளங்களில் BEL அமைக்கும்.
  • இது இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியில் இந்தியாவுக்கு கண்களைக் கொடுக்கும்.
  • MRCC வலையமைப்பு என்பது இலங்கையின் தற்போதைய தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு அதிக ஆற்றலையும் ஆழத்தையும் வழங்குவதுடன், இந்தியாவின் உதவி தேவைப்படும் பட்சத்தில் நேரடித் தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதாகும்.

இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்கள்:

  • இலங்கை விமானப்படைக்கு இந்திய டோர்னியர் விமானங்களுக்கான ஒப்பந்தம்.
  • இலங்கையில் உள்ள பௌத்த தலங்களின் பராமரிப்புக்காக இந்தியா 15 மில்லியன் டொலர்களை மானியமாக வழங்கவுள்ளது.
  • சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனம் மற்றும் கொழும்பை தளமாகக் கொண்ட பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்.
  • இந்தியாவின் மானிய உதவியுடன் இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள (SL-UDI) திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம். இது இந்தியாவின் ஆதார் மாதிரியாக இருக்கும்.
  • காலி மாவட்டத்தில் 200 பாடசாலைகளில் கணனி ஆய்வகங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு இலங்கையின் முக்கியத்துவம்: 

இந்தியாவின் நெருங்கிய கடல்சார் அண்டை நாடான இலங்கை, இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ளது.

அதன் ‘அக்கம்-முதல் கொள்கை’ மற்றும் ‘சாகர் (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) கோட்பாட்டின்படி, இந்தியா “இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை அமைதியானதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க” இலங்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால் இவற்றை வென்றெடுக்க கையாளப்பட்ட தமிழர் பிரச்சனைகள் ஆறாத ரணங்களுடன் பரிகார நீதி தேடி அலைகிறது. அதேவேளை பாக்குநீரிணையின் இருகரையோரங்களிலும் வாழும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தமிழினத்தைக் கணக்கில் எடுக்காமல், புறந்தள்ளிவிட்டு  யாராலும் ஆதிக்கப்போட்டியில் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளவும் முடியாது.

மனிதன் நீதி தவறினாலும், இயற்கையின் நீதி புதுத் தீர்ப்பொன்றை எழுதியே தீரும். ஒரு இனத்தினைச் சிதறடித்த அத்தனை நாடும் சிதறுண்டே போகும். தமிழர் நாம் தேடும் நீதி  பழிவாங்கல் அல்ல இனப்படுகொலைக்கான பரிகார நீதியே!

செய்தி
முகுந்த முரளி
டொரோண்டோ , கனடா
ஈழமுரசு ஊடகவியலாளர்

Leave a Reply