கஞ்சா ஒழிப்பு நல்லத் தொடக்கம்: ஆனால், போதுமானதல்ல… தீவிரம் காட்ட வேண்டும்!
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக, காவல்துறையினர் நடத்திய இரண்டாம் கட்ட கஞ்சா ஒழிப்பு சோதனையில் 2,423 கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சாவும், 6,319 குட்கா வணிகர்கள் கைது செய்யப்பட்டு 44.90 டன் குட்காவும் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல்துறை களமிறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த நடவடிக்கை போதுமானது அல்ல.
கல்விக்கும், தொன்மைக்கும் புகழ் பெற்ற தமிழ்நாடு இப்போது கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்களின் புகலிடமாக மாறியிருக்கிறது. ஆந்திரத்திலிருந்து வரும் தொடர்வண்டிகளில் பயணிகள் எண்ணிக்கையை விட கஞ்சா பொட்டலங்கள் தான் அதிகமாக வருகின்றன. சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் திண்பண்டங்களை விட மிகவும் எளிதாக கஞ்சா கிடைக்கிறது.
கஞ்சா மட்டுமின்றி, அபின், போதை மாத்திரைகள், கேட்டமைன், எல்.எஸ்.டி (Lysergic Acid Diethylamide -LSD) ஆகியவையும் சென்னையில் தாராளமாக புழக்கத்தில் உள்ளன. அண்மையில், சென்னையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு டைடோல் 50 (Tydol 50), நைட்ரோவிட் (Nitravet 10) மாத்திரைகளை போதைக்காக 10 மாத்திரைகள் ரூ.3,000 என்ற விலைக்கு விற்பனை செய்து வந்த கும்பல் கைது செய்யப்பட்டது. காவல்துறையால் யூகிக்க முடியாத போதை மருந்துகள் கூட சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மூலை முடுக்குகளில் கூட கிடைக்கின்றன.
வெளி மாநில மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் அதிக எண்ணிக்கையில் படிக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் கல்லூரிகளும் தான் போதைப்பொருட்கள் தடையின்றி பயன்படுத்தப்படும் பகுதிகளாக திகழ்கின்றன. படிப்புக்காக வீடுகளை விட்டு வந்து விடுதிகளிலும், தனியாக அறை எடுத்தும் தங்கியுள்ள இளைஞர்கள் மிகவும் எளிதாக போதைப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இந்த உண்மை அனைத்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கும் நன்றாகத் தெரியும் என்றாலும் கூட, அதை தடுக்கவோ, கண்டிக்கவோ எந்த நிறுவனமும் முன்வருவதில்லை.
மாணவர்கள் இந்த வகை போதைகளுக்கு ஆளாகின்றனர் என்றால் அடித்தட்டு இளைஞர்கள் குட்கா எனப்படும் போதைப்பாக்கு, ஹான்ஸ் எனப்படும் போதை புகையிலை போன்றவற்றுக்கு அடிமையாகி உள்ளனர். கஞ்சா, குட்கா, அபின் உள்ளிட்ட போதை பொருட்கள் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன என்றாலும் கூட, அவை தடையின்றி தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தின் இளைஞர்களும், மாணவர்களும் கெட்டு, சீரழிவதற்கு இவை தான் முதன்மை காரணங்களாக உள்ளன.
மதுப்பழக்கத்தால் குடும்பங்கள் சீரழிகின்றன என்றால், மதுப்பழக்கத்தால் இந்தியாவின் எதிர்காலத் தூண்களான மாணவர்களும், இளைஞர்களும் தங்களின் எதிர்காலத்தை மட்டுமின்றி தங்களையும் அழித்துக் கொள்கின்றனர். போதைப்பழக்கம் இளைஞர்களின் உடல் நலத்தையும், கல்வியையும் கெடுப்பது மட்டுமின்றி, குற்றவாளிகளாகவும் மாற்றுகிறது. போதையின் உச்சத்தில் இழைக்கப்படும் வன்கொடுமைகள், பாலியல் குற்றங்கள், கொலைகள் போன்றவை தற்போது அதிகரித்து வருகின்றன.
இவை ஒருபுறம் இருக்க போதைக்கு அடிமையானவர்களால், அதை அனுபவிக்காமல் இருக்க முடியாது என்பதால், எப்படியாவது போதைப் பொருட்களை வாங்கி விட வேண்டும் என்பதற்காக இளைஞர்களும், பல நேரங்களில் சிறுவர்களும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். போதைக்காக நடைபெறும் மோதல்கள் பல நேரங்களில் கொலைகளில் முடிகின்றன. திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட சிறார்களிடம் நடத்திய விசாரணையில் 87% பேர் மது, போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என்று சிறார் குற்றவாளிகள் குறித்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அந்த வகையில் போதை மருந்து பழக்கம் தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையாகவும் மாறி வருவதை தமிழக அரசு உணர வேண்டும்.
தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்திருப்பதற்கு காரணம் காவல்துறையின் தோல்வி தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கஞ்சா, குட்காவை ஒழிப்பதற்காக கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 27-ஆம் தேதி காவல்துறை இயக்கம் நடத்தியது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த திசம்பர் 6-ஆம் தேதி முதல் ஜனவரி 6-ஆம் தேதி வரை காவல்துறை இதே போன்று முதற்கட்ட சோதனையை நடத்தியது. அந்த சோதனையில் கஞ்சா, குட்கா 8,929 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் 3 மாதங்கள் கழித்து இப்போது நடத்தப்பட்ட காவல்துறை சோதனையில் ஒட்டுமொத்தமாக 8,742 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட கஞ்சா ஒழிப்பு சோதனை முடிவடைந்த 3 மாதங்களில் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனையிலும் கிட்டத்தப்பட்ட அதே எண்ணிக்கையிலானவர்கள் கைது செய்யப்பட்டு, அதே அளவிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றால், முதற்கட்ட சோதனையால் எந்த பயனும் இல்லை என்று தானே பொருள்? இப்போது கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் முதற்கட்ட சோதனையிலும் கைது செய்யப்பட்டவர்களாகவே இருக்கக்கூடும். இன்னும் 3 மாதங்கள் கழித்து மூன்றாவது கட்ட கஞ்சா ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டாலும் இவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவர். கஞ்சா மற்றும் குட்கா விற்பனையும் எந்தவித தடையும் இல்லாமல் நடத்து கொண்டிருக்கும். இது தொடர்கதையாக இருக்குமே தவிர கஞ்சா, குட்கா விற்பனையையும், இளைஞர்கள் சீரழிவதையும் தடுக்க முடியாது.
காவல்துறை சோதனை நடந்த காலத்தில் கூட கஞ்சா, குட்கா விற்பனை தொடர்ந்தது. சோதனையை காரணம் காட்டி விலை தான் அதிகரிக்கப்பட்டிருந்தது. ஒரு சாலையில் 100 மீட்டர் நடந்து சென்றால், குறைந்து 10 இடங்களிலாவது குட்கா, ஹான்ஸ் காலி உறைகளை பார்க்க முடியும். அந்த அளவுக்கு போதைப் பொருள் வணிகம் தடையின்றி நடைபெறுகிறது. ஆனால், காவல்துறையினர் நினைத்தால் அதிகபட்சமாக மூன்றே நாட்களில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.
ஆனால், இது சாத்தியமாகாததற்கு கஞ்சா வணிகத்திற்கு காவல்துறையில் உள்ள சில ஆதரவளிப்பது தான் காரணம் ஆகும். கஞ்சா வணிகர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை காவலர்களே விற்றதாக காவல்துறை தலைவராக இருந்து ஓய்வு பெற்ற கண்ணப்பன் அவர்கள் கூறியுள்ளார். அண்மையில் கூட நாகப்பட்டினத்தில் கஞ்சா கடத்தல் கும்பலுடன் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் பிரியாணி விருந்து சாப்பிட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
காவல்துறையில் உள்ள கஞ்சா வணிகர்களுக்கு ஆதரவான கருப்பாடுகள் களையெடுக்கப்பட வேண்டும். கஞ்சா, குட்கா போன்றவை எங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வருகிறது என்பதை கண்டறிந்து, மூலத்திலேயே அவற்றை அழிக்க வேண்டும். கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் வணிகத்தைத் தடுக்க காவல் துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். போதைப் பொருள் வணிகர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது, திடீர் சோதனைகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டும். அதன் மூலம் கஞ்சா, குட்கா, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.