Home>>அரசியல்>>மேக்கேத்தாட்டு அணைச் சிக்கல் : தமிழ்நாடு அரசே, மக்களை ஏமாற்றாதே! இந்திய அரசுக்குப் புரிய வைக்க முடியாது! போராடி பணிய வைக்கத் தான் முடியும்!
அரசியல்இந்தியாகர்நாடகாசெய்திகள்தஞ்சாவூர்தமிழ்நாடுதிருவாரூர்மாநிலங்கள்மாவட்டங்கள்

மேக்கேத்தாட்டு அணைச் சிக்கல் : தமிழ்நாடு அரசே, மக்களை ஏமாற்றாதே! இந்திய அரசுக்குப் புரிய வைக்க முடியாது! போராடி பணிய வைக்கத் தான் முடியும்!

மேக்கேத்தாட்டு அணைச் சிக்கல் :
தமிழ்நாடு அரசே, மக்களை ஏமாற்றாதே! இந்திய அரசுக்குப் புரிய வைக்க முடியாது! போராடி பணிய வைக்கத் தான் முடியும்!
==================================
மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==================================

மேக்கேத்தாட்டு அணைச் சிக்கல் குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை செயலரின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மக்கள் மீது அக்கறையுள்ள ஓர் அரசு ஒரு பிரச்சினையிலிருந்து தனது மக்களைக் காக்க – கடந்த காலத்தில் தோற்ற, நிகழ்காலத்தில் தோற்றுக் கொண்டிருக்கும் நடவடிக்கைகளையே தொடராது. அதைவிட பயன்தரும் மேம்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

ஓர் அரசு அப்படிச் செய்யவில்லை என்றால், ஒன்று அதற்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்று பொருள் அல்லது எதிரிக்கு ஆதரவாக, தெரிந்தே மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என்று பொருள்.

தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலர், மேக்கேதாட்டு பிரச்சினையில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளார்.

1). 2021 சூன் 17 – முதல்வர் பிரதமரிடம் மனு.
2). 2021 சூலை 6 – தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் ஒன்றிய நீர்வளத்துறை (ஒன்றிய அரசின் சமஸ்கிருத வளர்ப்பு செயல்பாடான ஜல்சக்தி துறை என குறிப்பிடுவதை தமிழ்நாடு அரசு தவிர்க்கவில்லை) அமைச்சரிடம் முறையீடு.
3). 2021 சூலை 16 – தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி குழு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தல்.
4). 2022 மார்ச் 23 – தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டது.
5). 2022 மார்ச் 31 – முதல்வர் தில்லியில் பிரதமரிடம் வலியுறுத்தல்.
6). 2022 மே 26 – சென்னை வந்த பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை மனு.
7). 2022 சூன் 4 – காவிரி ஆணையத்திடம் வலியுறுத்தி கடிதம்.
8). 2022 – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு.
9). 2022 சூன் 7 – தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் அறிக்கை.
10). 2022 சூன் 13 – பிரதமருக்கு முதல்வரின் கடிதம்.

இவ்வளவுக்கு பிறகும் நடந்தது.. நடப்பது என்ன?

ஒன்றிய அரசின் சட்டத்துறை தான் மேக்கேத்தாட்டு பற்றி காவிரி ஆணையம் விவாதிக்க எந்த சட்டபூர்வ தடையும் இல்லை என்று சட்டரீதியான கருத்துரை வழங்கி இருக்கிறது.

இன்று வரை பிரதமர் மோடி தமிழ்நாடு அரசின் மன்றாடுதலுக்கு இரங்கி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், தோற்றுக் கொண்டிருக்கும் நடவடிக்கைகளையே தொடர்ந்து எடுப்பது இதைவிட மேம்பட்ட, பயன்தரக்கூடிய மாற்று நடவடிக்கைகளை எடுக்காமல், தன் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி அரசு அறிக்கை வெளியிடுவது – சொந்த மக்கள் மீது அரசின் அக்கறையற்ற தன்மையையும், மக்களை ஏமாற்றும் நோக்கத்தையுமே வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாடு அரசே! நமது தரப்பு நியாயத்தை ஒன்றிய அரசுக்கு மனு கொடுத்து, சட்டமன்றத் தீர்மானம் இயற்றி வலியுறுத்தி
புரிய வைக்க முடியாது. மக்களை திரட்டி தெருவில் இறங்கிப் போராடி ஒன்றிய அரசைப் பணிய வைக்கத்தான் முடியும்.

முதல்வரே! இந்த இறுதிக் கட்டத்திலாவது தங்களுக்கு வாக்களித்து, வாழ்வளிக்கும் தமிழர்களுக்கு உண்மையாக செயல்படுங்கள்! இந்திய ஒன்றிய அரசின் தமிழின பகைப் போக்கை மக்களிடம் வெளிப்படையாக பேசுங்கள்!

மக்களைத் திரட்டி போராடி தமிழினத்தின் காவிரி நீர் உரிமையை காப்பாற்றுங்கள்!

இல்லையேல், ஈழப் பிரச்சினையில் தங்கள் தந்தையார் சுமக்கும் பழியைப் போன்று, காவிரி பிரச்சினையில் நீங்களும் சுமக்க நேரிடும்!

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

Leave a Reply