Home>>அரசியல்>>செண்பகவல்லி கால்வாய் தடுப்பணையை உடனே சீர் படுத்திடவும், கேரள அரசுடன் உடனே பேச்சுவார்த்தை நடத்திடக் கோரியும் செண்பகவல்லி உரிமை மீட்புக்குழு பெருந்திரள் பொதுக் கூட்டம்
அரசியல்இந்தியாசமூக பணிசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

செண்பகவல்லி கால்வாய் தடுப்பணையை உடனே சீர் படுத்திடவும், கேரள அரசுடன் உடனே பேச்சுவார்த்தை நடத்திடக் கோரியும் செண்பகவல்லி உரிமை மீட்புக்குழு பெருந்திரள் பொதுக் கூட்டம்

செண்பகவல்லி கால்வாய் தடுப்பணையை உடனே சீர் படுத்திடவும், கேரள அரசுடன் உடனே பேச்சுவார்த்தை நடத்திடக் கோரியும் தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட உழவர்கள் பங்கேற்ற செண்பக வல்லி உரிமை மீட்புக்குழு சார்பில் 15.6.2022 புதன் கிழமை மாலை 6.00 மணிக்கு சங்கரன் கோயில் , வடக்கு ரத வீதியில் பெருந்திரள் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மக்கள் செல்வர், நலத்திட்ட நாயகர். Dr.S.அய்யாத்துரைப்பாண்டியர் M.A..M.A.PGDBA அவர்கள் தலைமை வகித்தார். தோழர். க.பாண்டியன் B.A., அவர்கள் (தலைமை ஒருங்கிணைப்பாளர், செண்பகவல்லி உரிமை மீட்புக்குழு) முன்னிலையில், தோழர்.கி.வெங்கட்ராமன் அவர்கள் (தமிழ் தேசியப் பேரியக்கம் பொதுச்செயலாளர், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர்), சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் S.முத்தமிழ் M.A.,B.Ed, (பட்டிமன்ற நடுவர் ), O.A.நாரயாயணசாமி (மாநிலத் தலைவர், தமிழ் விவசாயிகள் சங்கம்), தமிழ் மணி ( தமிழக உழவர் முன்னணி துணைத் தலைவர்) , கதிர்நிலவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்), அ.கோ.தங்கவேல் (நாம் தமிழர் மாநில கொள்கை பரப்புச் செயலாளர்), செ.பசும்பொன் (நாம் தமிழர் மாநில கொள்கை பரப்புச் செயலாளர்), கரும்புலி. கண்ணன் (நிறுவனத் தலைவர், முல்லை நிலத் தமிழர் விடுதலைக்கட்சி ), நெல்லை ஜீவா (நிறுவனர், லட்சிய ஜனநாயகக் கட்சி), S.பழனிச்சாமி SJ.(Rtd) (Dr.S.அய்யாத்துரைப் பாண்டியன் பேரவைத் தலைவர்) மற்றும் செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு உறுப்பினர்கள் த.ஞானராசு, இடையன் குளம் செயக்குமார், சாத்தூர் கணேசன், விருதுநகர் பேரரசு , சிவகிரி பூமிநாதன், வன்னியம் பட்டி இராமச்சந்திரன், தென்மலை பாப்புராஜ், சிவகிரி இரத்தினவேலு, ஏழாயிரம் பண்ணை பி.எஸ். காளிராசு ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக தமிழின எழுச்சிப் பாடகர் ஈரோடு சமர்ப்பா குழுவினரின் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

உழவர் பெருங்குடி மக்கள், பொது மக்கள் பங்கேற்ற இந்த பெருந்திரள் பொதுக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. தமிழ்நாடு அரசு கேரள அரசோடு உடனடியாக பேச்சு வார்த்தை நடத்துக.

செண்பகவல்லி தடுப்பணை சிவகிரி சமீன் அவர்களால் 1733ஆம் ஆண்டு கட்டப்பட்டு சிவகிரி, சங்கரன் கோவில், திருவேங்கடம், சாத்தூர், இராசபாளையம், சிவகாசி, விளாத்திகுளம், எட்டையபுரம் உள்ளிட்ட வட்டங்களைச் சேர்ந்த வேளாண்மைக்கு பாசன நீராகவும் குடிநீராகவும் பயன்பட்டு வந்தது.

இந்த தடுப்பணை பெருவெள்ளத்தால் சேதமடைந்த போது, 1962இல் பெருந்தலைவர் காமராசர் ஆட்சியில் அந்த அணை சீர்செய்யப்பட்டது.

மீண்டும் ஒரு பெரு வெள்ளத்தில் 1969ஆம் ஆண்டு தடுப்பணை சேதமடைந்தது. அதனை சீர் செய்யும் படி உழவர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில், 1984ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான நிதியை கேரள அரசிடம் வழங்கினார். நீண்ட கால இழுத்தடிப்புக்குப் பிறகு கேரள அரசு பொய்யான காரணங்களைக் கூறி நிதியை திருப்பி அனுப்பி விட்டது.

அதன்பிறகு உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்த பின்னும் இப்பணியை மேற்கொள்ள அடாவடியோடும், இனப்பகையோடும் மறுத்து வருகிறது.

கடந்த ஆட்சியின் போது, தென்காசி மாவட்ட தொடக்க விழா கூட்டத்தில் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செண்பகவல்லி தடுப்பணையை சீர்படுத்துவது குறித்து கேரளாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதற்கான குழு அமைத்ததாக அறிவித்தார்.

தொடர்ந்து தேக்க நிலை நீடிப்பதால் 36000 ஏக்கர் விளைநிலங்களும், பல இலட்சம் மக்களின் குடிநீர் தேவையும் நிறைவு பெறாமலே இச்சிக்கல் நீடிக்கிறது.

இந்நிலையில் இன்றைய புதிய தமிழ்நாடு அரசு செண்பகவல்லி தடுப்பணையை சீர்செய்வது குறித்து முதலமைச்சர்கள் மட்டத்தில் கேரள அரசோடு உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த பெருந்திரள் உழவர்கள் பொதுக்கூட்டம் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

கேரள அரசு தடுப்பணையை சீர்செய்ய முன்வராமல், தொடர்ந்து தமிழினப் பகையோடு நடந்து கொண்டால் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்திற்குச் செல்லும் பொருள் போக்குவரத்தை தடை செய்வது உள்ளிட்ட சனநாயக வழிப்பட்ட உரிமை மீட்பு நடவடிக்கைகள் அனைத்திலும் தமிழ் நாடு அரசு ஈடுபட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

2. மாநில எல்லை சீரமைப்பு சட்டவிதிகளுக்குப் புறம்பாக கேரள அரசு செய்துள்ள நில ஆக்கிரமைப்பை தமிழ்நாடு அரசே தடுத்து நிறுத்துக.

மாநில சீரமைப்புச் சட்டத்திற்கு இணங்க மொழி- இனவழி மாநிலமாக தமிழ்நாடு 1956 நவம்பர் ஒன்றில் உருவாக்கப்பட்டது. அப்போது தமிழர் தாயகப் பகுதிகள் பலவும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு அநீதியான முறையில் ஒதுக்கப்பட்டன.

இது ஒருபுறமிருக்க தமிழ் நாடு எல்லைக்குள்ளேயே குறிப்பாக தென்காசி தேனி கன்னியாகுமரி மாவட்டங்களில் கேரள அரசின் வனத்துறை தமிழ்நாடு எல்லைக்குள் அன்றாடம் எல்லைக் கற்களை மாற்றி நட்டு ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. செண்பக வல்லி கால்வாய்ச் சிக்கல் இருமாநிலப் பிரச்னையாக நீடிப்பதற்கும் முல்லைப் பெரியாறு கண்ணகி கோயில் சிக்கல்கள் தீவிரப்படுவதற்கும் இதுதான் காரணம்.

செண்பக வல்லி கால்வாய் சீரமைப்பு பணி 1962இல் தமிழ் நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் , 1984இல் சீரமைப்பு பணியை தமிழ்நாடு அரசே கேரளாவிடம் ஒப்படைத்தது. கேரளத்தின் ஆக்கிரமிப்பு அடாவடியை தட்டிக் கேட்காமல் தமிழ்நாடு அரசு பாராமுகமாக இருந்ததின் விளைவு இது.

எனவே தமிழ்நாடு அரசு இப்போதாவது விழித்துக் கொண்டு 1956 க்குப் பிறகு கேரள அரசு குறிப்பாக கேரள வனத்துறை ஆக்கிரமித்துள்ள தமிழ்நாட்டுப் பகுதிகளை மீட்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

3. தமிழ்நாடு அரசே சட்டவிரோத கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்துக.

தென்காசி மாவட்டத்தில் தேவிபட்டினம், சிவகிரி, அரியூர், இராசபாளையம் வட்டத்தில் சொக்கநாதன் புத்தூர் , தென்காசி வட்டத்தில் காவூர், சொக்கலிங்காபுரம், ஆலங்குளம் மற்றும் செங்கோட்டை வட்டங்களில் தாயின் மார்பை பிளப்பது போல சட்டவிரோதமான முறையில் மலைகள் பிளக்கப்பட்டு இரவு பகலாக கனிமவளக் கொள்ளை நடந்து வருகிறது.

நாள்தோறும் பல்லாயிரம் டன் கனிமப் பாறைகள் பல நூற்றுக்கணக்கான கனரக ( டாரசு ) வண்டிகளில் புளியரையை கடந்து கேரளாவிற்கு கடத்தப்படுகிறது.

இதன் காரணமாக மேற்படி ஊர்களில் நீர்வளம் வற்றிப்போவதும் மாசுபாடு பல மடங்கு அதிகரித்தலும் பெரிய ஊர்திகளின் மிகைப் போக்குவரத்து காரணமாக விபத்துகள் நடைபெறுவதும் நடைபெறுகிறது.
வளமான இப்பகுதிகள் விரைவில் பாலைவனமாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தொடர் நோய்களும் விபத்துகளும் மக்களை அச்சுறுத்துகின்றன.

பட்டப்பகலில் மக்கள் கண்முன்னே நடக்கும் இந்த வளக்கொள்ளை சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு சட்டவிரோதமாக இந்த இயற்கை வளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

கண்முன் நடக்கும் இந்த வனக்கொள்ளை கைகட்டி பார்த்துக் கொண்டிராமல் இந்த அநீதியை தடுத்து நிறுத்த வீதிக்கு வந்து சனநாயக நெறிப்படி போராட முன்வரவேண்டும் வேண்டுமென உழவர்களையும் இளையோரையும் பெண்களையும் அழைக்கிறோம்.

Leave a Reply