தமிழ்நாட்டில் பச்சிளம் சிசுக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும், மனவலியையும் ஏற்படுத்துகின்றன. வரத்தை சாபமாகவும், சுகத்தை சுமையாகவும் நினைத்துக் கொண்டு செய்யப்படும் கொடுமைகளுக்கு நிரந்தரமாக முடிவு கட்டுவது தான் தமிழ்நாடு அரசு உடனடியாக செய்ய வேண்டிய சமூக நலக் கடமை ஆகும்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உடல் முழுவதும் நாய்களால் கடித்து குதறப்பட்ட நிலையில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை கடந்த 16-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அடுத்த இரு நாட்களில், அதாவது ஜூன் 18-ஆம் தேதி தஞ்சாவூரை அடுத்த வேலிப்பட்டியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன சிசு உடல் முழுவதும் எறும்பு மொய்த்த நிலையில் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு நிகழ்வுகளுக்கு முன்பாக கடந்த மே 29-ஆம் தேதி தருமபுரியில் கருவிலிருக்கும் குழந்தை ஆணா… பெண்ணா? என்பதைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதே போன்ற நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறு தெருக்களில் வீசப்படும் குழந்தைகள், கருவில் அழிக்கப்படும் குழந்தைகள், பிறந்தவுடனேயே மூச்சுத் திணறலை ஏற்படுத்திக் கொல்லப்படும் குழந்தைகள் ஆகியவற்றில் பெரும்பாலானவை பெண் சிசுக்கள் என்பது வேதனையான உண்மை ஆகும். பெண் குழந்தைகளை சுமையாக நினைப்பது, எந்தக் குழந்தையாக இருந்தாலும் அவற்றை வளர்க்க முடியாத/வளர்க்க விரும்பாத சூழலில் தாய் இருப்பது ஆகியவை தான் இத்தகையக் கொடுமைகளுக்கு காரணம். இக்கொடுமை போக்கப்பட வேண்டும்.
இந்தக் கொடுமைகளுக்கு தற்காலிகத் தீர்வு, தொய்ந்து கிடக்கும் தொட்டில் குழந்தை திட்டத்திற்கு புத்துயிரூட்டுவதும், அத்திட்டம் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு செல்வதும் ஆகும். பெண் சிசுக்கொலையையும், பெற்றோரால் வளர்க்க முடியாத சூழலில் உள்ள குழந்தைகள் கொல்லப்படுவதையும் தொட்டில் குழந்தை திட்டம் குறிப்பிடத்தக்க அளவில் தடுத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. கடந்த 1992&ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் இதுவரை 1283 ஆண் குழந்தைகள், 4498 பெண் குழந்தைகள் என மொத்தம் 5781 குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
தொட்டில் குழந்தை திட்டத்திற்கு நடப்பாண்டில் கூட ரூ.42.46 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அது பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் சிசுக்களை தெருக்களில் வீசி எறியும் நிலை உருவானதற்கு காரணம் ஆகும். தொட்டில் குழந்தை திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இப்படி ஒரு நிலைமை ஏற்படுவதை தமிழ்நாடு அரசால் தடுத்து நிறுத்த முடியும்.
பச்சிளம் சிசுக்கள், குறிப்பாக பெண் சிசுக்கள் தெருவில் வீசப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு, பெண் குழந்தைகள் எதிர்காலச் சுமைகள் என்ற எண்ணத்தை மக்களின் மனங்களில் இருந்து அகற்றுவது தான். பெண்கள் எந்தவகையிலும் சுமை இல்லை. இக்காலப் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதனைகளைப் படைப்பதுடன், பெற்றோருக்கு பெருந்துணையாகவும் உள்ளனர் என்பது உண்மை.
எனினும், கிராமப்புறங்களில் வாழும் ஏழை மக்களிடையே பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவை செலவு பிடிக்கும் விஷயங்களாக இருப்பதும், பெண்களை வளர்த்தெடுக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தான் பெண் குழந்தைகளை சுமையாக நினைக்க வைக்கின்றன. இந்த எண்ணத்தை மாற்றவும், பெண் குழந்தைகள் சாபமல்ல… வரம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவும் விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் பெண் குழந்தைகள் குடும்பத்தின் சொத்து என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்த முடியும்.
என்னைப் பொறுத்தவரை பெண் குழந்தைகள் குழந்தைகள் அல்ல… அவர்கள் வீட்டின் பெண் தெய்வங்கள். இந்த உணர்வு அனைவர் மனதிலும் ஏற்படும் போது அனைவராலும் பெண் குழந்தைகள் போற்றப்படுவர். எனவே, பெண் குழந்தைகளின் சிறப்புகள், பெருமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட வேண்டும். பெண் குழந்தைகள் பெயரில் வைப்பீடு செய்யப்பட்டு, 18 வயதை நிறைவு செய்யும் போது அவர்களுக்கு கிடைக்கும் தொகை ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம் சிசுக்கள் பிறக்கும் போதே இறக்கச் செய்யப்படும் கொடுமைக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
—
மருத்துவர் இராமதாசு,
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்.