Home>>அரசியல்>>சிதம்பரம் நடராசர் கோயிலை அறநிலையத்துறையே ஏற்று நடத்த வேண்டும்!
அரசியல்அறிக்கைகள்ஆன்மீகம்காவல்துறைசெய்திகள்தமிழர்கள்மதம்

சிதம்பரம் நடராசர் கோயிலை அறநிலையத்துறையே ஏற்று நடத்த வேண்டும்!

சிதம்பரம் நடராசர் கோயிலை அறநிலையத்துறையே ஏற்று நடத்த வேண்டும்!
==================================
அறநிலையத்துறை
விசாரணைக் குழுவிடம்
தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் மனு!
==================================
“சிதம்பரம் நடராசர் கோயிலை அறநிலையத்துறையே ஏற்று நடத்த வேண்டும்!” என்று தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை விசாரணைக் குழுவிடம் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் நேரில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகம் தொடர்பாக பொது மக்களிடம் கருத்துகளை கேட்டு விசாரிக்க, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இணை ஆணையர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் புதுப்பாளையத்திலுள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் இக்குழுவினரிடம் இன்றும் (20.06.2022), நாளையும் (21.06.2022) மனுக்கள் வழங்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதனையடுத்து, இன்று (20.06.2022) காலை 11 மணியளவில், கடலூர் புதுப்பாளையத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த தெய்வத் தமிழ்ப் பேரவையினர், சிதம்பரம் கோயில் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்த மனுவை விசாரணைக் குழுவிடம் நேரில் அளித்தனர்.
தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன், தேனி மாவட்டம் – குச்சனூர் இராசயோக சித்தர் பீடம் வடகுரு மடாதிபதி ஐயா குச்சனூர் கிழார், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் சித்தர் மூங்கிலடியார் (எ) பொன்னுசாமி (பதிணென் சித்தர் மடம், பீடம்), தமிழ் வேத ஆகமப் பாடசாலை நிறுவனர் சிம்மம் சத்தியபாமா அம்மையார், சிவ.வெ. மோகனசுந்தரம் அடிகளார் (தெய்வத்தமிழ்த் திருமுறை வழிபாட்டு இயக்கம், திருவில்லிபுத்தூர்), ) தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், ஆசீவக சமய நடுவ நிறுவனர் முனைவர் ஆசீவக சுடரொளி, வள்ளலார் பணியக ஒருங்கிணைப்பாளர்கள் ஐயா இராசமாணிக்கனார், ஐயா சுந்தர்ராசன், செந்தமிழ் ஆகம அந்தணர் ஐயா சிவ. வடிவேலனார், முனைவர் வே. சுப்ரமணிய சிவா உள்ளிட்டோர் இம்மனுவை நேரில் வழங்கினர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைத் தலைவர் திரு. க. முருகன், துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் மா. மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் ஆ. குபேரன், சிதம்பரம் செயலாளர் தோழர் வேந்தன் சுரேசு உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் உடனிருந்தனர்.
அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :
“உலகெங்கிலும் வாழும் சிவநெறியாளர்களின் தலைமைத் திருக்கோயிலாக விளங்குவது சிதம்பரம் நடராசர் (சபாநாயகர்) திருக்கோயிலாகும். சோழ மன்னர்கள் உள்ளிட்ட வழிவழி வந்த மன்னர்களாலும், செல்வந்தர்களாலும் நிறுவப்பட்டு, விரிவாக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட இக்கோயில் சைவர்களின் பொதுக் கோயிலாகும். “கோயில்” என்றாலே, சைவத்தில் சிதம்பரம் என்றுதான் பொருள்.
திருமூலர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்க வாசகர், வள்ளலார் உள்ளிட்ட ஞானிகளும், இறையாளர்களும் வழிபட்டு சிறப்பித்த பெருங்கோயிலாகும் இத்திருக்கோயில்!
அன்றாடம் பல்லாயிரக்கணக்கான உள்ளூர் – வெளியூர் – வெளிநாட்டு பக்தர்களும், மக்களும் வந்து வழிபடும் பொதுக்கோயிலாக இக்கோயில் விளங்குகிறது.
ஆயினும், இப்பெருங்கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தில்லை தீட்சிதர்கள், இத்திருத்தலத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் அன்றாடம் நடந்து வருகிறார்கள். தில்லை நடராசப் பெருமானை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பொருள் போல் நடத்தும் இத்தீட்சிதர்கள், பக்தர்களின் அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமைக்கு அச்சுறுத்தலையும், இடையூறையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி, சைவ நெறிகளுக்குப் புறம்பாக இத்திருக்கோயில் வளாகத்தை தங்கள் சொந்த மண்டபம் போல் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.
“பொதுத் தீட்சிதர்கள்” என்று தங்களுக்குப் பெயர் சூட்டிக் கொண்டுள்ள இவர்கள், தங்களுக்குள் ஏலம்விட்டு நடராசர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளையும் தங்களுக்கான வணிக நிறுவனம் போல எடுத்துக் கொள்கிறார்கள். இந்த ஏலத் தொகையைத் தவிர, வேறு அனைத்து வருமானங்களையும் தங்களது சொந்த சொத்தாக எடுத்துக் கொள்கிறார்கள். மக்கள் அளிக்கும் பணம், இத்திருக்கோயிலின் பராமரிப்பிற்கோ, விரிவாக்கத்திற்கோ பயன்படுத்தப்படுவதில்லை.
வரலாற்றுச் சிறப்பும், சிவநெறித் தலைமையும் கொண்ட இத்திருக்கோயில், திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில் போல் அனைத்திந்திய புகழ் பெற்றிருக்க வேண்டும். ஆனால், தீட்சிதர்களின் அதிகார ஆணவச் செயல்களாலும், தன்னல நோக்கிலான கெடுபிடிகளாலும் அவ்வளர்ச்சியை எட்டாமல் இருக்கிறது.
கணக்கில் காட்டாமல், பெரும் செல்வந்தர்களிடம் பெருந்தொகையாகப் பணம் பெற்றுக் கொண்டு, கோயிலுக்குள்ளேயே திருமண விழாக்கள் உள்ளிட்ட தனிநபர் விழாக்களுக்கு அனுமதிப்பது தீட்சிதர்களின் வாடிக்கையாகிவிட்டது.
6.1.2014 நாளிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் (சிமிக்ஷிமிலி கிறிறிணிகிலி ழிளி.10620 ளிதி 2013) காரணம் காட்டி, தாங்கள் சட்டத்தின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டவர்கள் போல் கருதிக் கொண்டு, கண்ணியமற்று – ஒழுங்குமுறையற்று நடந்து கொள்கிறார்கள். இவ்வாறு அராஜகமாக நடந்து கொள்ள அவர்களை மேற்படி உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கட்டவிழ்த்துவிடவில்லை என்பது மிகமிக கவனிக்கத்தக்கது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அறநிலையத்துறை இத்திருக்கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள ஒரு செயல் அலுவலரை அமர்த்த எந்தத் தடையும் விதிக்கவில்லை. அத்தீர்ப்பின் பத்தி 49 கூறுவது கவனிக்கத்தக்கது.
49. We would also like to bring on the record that various instances whereby acts of mismanagement / maladministration / misappropriation alleged to have been committed by Podhu Dikshitars have been brought to our notice. We have not gone into those issues since we have come to the conclusion that the power under the Act 1959 for appointment of an Executive Officer could not have been exercised in the absence of any prescription of circumstances / conditions in which such an appointment may be made. More so, the order of appointment of the Executive Officer does not disclose as for what reasons and under what circumstances his appointment was necessitated.
என்று கூறுகிறது.
இந்து சமய அறநிலையத்துறை, தில்லை நடராசர் ஆலயத்திற்கு செயல் அலுவலரை அமர்த்தியதற்கு, சட்டநெறிகளின் படியான காரணங்களையும் அதற்கான சூழல்களையும் விளக்கவில்லை என்று தான் கூறியிருக்கிறது.
மத உரிமைகள், வழிபாட்டிடங்களின் நிர்வாகம் குறித்த உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட ஆயத்தின் புகழ்பெற்ற தீர்ப்பான சீரூர் மடம் தீர்ப்பு (1954 SC AIR 282) வழங்கியுள்ள வரையறுப்புகள் கவனிக்கத்தக்கவை.
அத்தீர்ப்பின் பத்தி 17 – கோயில் தொடர்பான அரசின் உரிமையைப் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறது.
The administration of its property by a religious denomination has thus been placed on a different footing from the right to manage its own affairs in matters of religion. The latter is a fundamental right which no legislature can take away, whereas the former can be regulated by laws which the legislature can validly impose. It is clear, therefore, that questions merely relating to administration of properties belonging to a religious group or institution are not matters of religion to which clause (b) of the article 26 applies.
குறிப்பிட்ட சமய வகைப் பிரிவினரின் கோயிலாக (Denominational Temple) இருந்தாலும், அதன் சொத்து நிர்வாகம் தொடர்பாக அரசு தலையிடலாம் என்று இத்தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.
ஆனால், தில்லை நடராசர் திருக்கோயில் தனித்த சமயப் பிரிவினரின் கோயில் அல்ல! இது ஒரு பொதுக்கோயில் (Public Temple). இந்த உண்மை நிலையை 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மாற்றிவிடவில்லை.
தில்லை தீட்சிதர்கள் ஸ்மார்த்த பிராமணர்கள். அவர்கள் ஒரு தனித்த சமயப் பிரிவினர் என்று கூறுகிற அத்தீர்ப்பு, இத்திருக்கோயிலை உருவாக்கியதோ, பராமரித்ததோ தீட்சிதர்கள் இல்லை என்ற உண்மையையும் எடுத்துக் காட்டுகிறது.
ஆனால், தங்களைத் தனித்த சமயப் பிரிவினர் (Denomination) என்று கூறியதை வைத்துக் கொண்டு, தாங்கள் பூசை செய்யும் நடராசர் திருக்கோயிலே தனித்த சமயப் பிரிவினரின் கோயில் (Denominational Temple) என்பதாக தீட்சிதர்கள் மோசடியாக வாதம் செய்கிறார்கள்.
இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதி 107 வழங்குகிற விதிவிலக்கு தில்லை நடராசர் கோயிலுக்குப் பொருந்தாது. இந்த விதி 107-ம் கூட சட்டமோ, அரசோ தலையிடாதபடி எந்தக் கட்டற்ற அதிகாரத்தையும் தீட்சிதர்களுக்கு வழங்கிவிடவில்லை.
தொடர்ந்து இவர்களது முறைதவறிய நிர்வாகம் பற்றியும் நிர்வாகச் சீர்கேடு பற்றியும் தங்களுக்கே புகார் வந்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது (பத்தி 49).
இப்பின்னணியில், சிதம்பரம் சபாநாயகர் திருக்கோயில் தொடர்பாக தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய சட்டவழிப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை பின்வரும் கோரிக்கைகளாக தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் முன்வைக்கிறோம்.
1. 2014 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அறிவுறுத்தலை ஏற்று, காரண காரியங்கள் மற்றும் சட்ட ஞாயங்களை விளக்கியும், பின்பற்றியும் உடனடியாக சிதம்பரம் நடராசர் (ஸ்ரீ சபாநாயகர்) கோயிலுக்குச் செயல் அலுவலர் (Executive Officer) ஒருவரை இந்து சமய அறநிலையத்துறை அமர்த்த வேண்டும்.
2. தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்றி, சிதம்பரம் சபாநாயகர் திருக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் சேர்க்க வேண்டும்.
3. சிற்றம்பல (கனகசபை) மேடையில் தேவாரம் – திருவாசகம் – திருமந்திரம் – கருவூறார் பாடல்கள் போன்ற சிவநெறிப் பாடல்களையும், மந்திரங்களையும் பாடியும், உச்சரித்தும் பக்தர்கள் வழிபட தெளிவான புதிய அரசாணை ஒன்று வெளியிட வேண்டும். (இதற்காக தமிழ்நாடு அரசு ஏற்கெனவே வெளியிட்ட ஆணையில் “சிற்றம்பல மேடையில் வழிபட” உரிமை வழங்கியிருக்கிறது. சிவநெறிப் பாடல்கள் பாடுவதற்கு உரிமையில்லை என்று தீட்சிதர்கள் வல்லடிவழக்குப் பேசுவதை முறியடிக்க இப்புதிய அரசாணை தேவைப்படுகிறது).
சிற்றம்பல மேடையில் ஏற அரசாணை வந்த பிறகு, அம்மேடையில் ஏறுவதற்கான நேரத்தை தீட்சிதர்கள் வேண்டுமென்றே குறைக்கிறார்கள். நேரக் குறைப்பைத் தவிர்த்து வழக்கம்போல் சிற்றம்பல மேடையில் ஏறி வழிபட அரசு ஆவன செய்ய வேண்டும்.
4. சிதம்பரம் நடராசர் கோயிலில் “அன்னைத் தமிழில் அர்ச்சனை” நடத்த தமிழ்நாடு அரசு தனி ஆணை பிறப்பிக்க வேண்டும்.
5. அண்மையில் சிதம்பரம் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடி வழிபட்ட பட்டியல் வகுப்புப் பெண்ணைத் தாக்கிய தீட்சிதர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்களை இதுவரை கைது செய்ய வில்லை. அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
6. அண்மையில் தமிழ்நாடு அரசு 2022 சூன் 7 – 8 ஆகிய நாட்களில் தில்லை நடராசர் கோயிலுக்கு அனுப்பிய இந்து சமய அறநிலையத்துறை உயரதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், அவர்களை அவமரியாதையாக நடத்தித் திருப்பி அனுப்பியுள்ளார்கள் தீட்சிதர்கள். இக்குற்றத்தில் ஈடுபட்ட தீட்சிதர்கள் மீது அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்த குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
7. இதுவரை சிதம்பரம் நடராசர் கோயில் வருமானம் முழுவதையும் தீட்சிதர்களே பங்கிட்டுக் கொள்கிறார்கள். கோடிக்கணக்கான வருமானம் வரும் இப்பொதுக்கோயிலில் அரசுத் தணிக்கை எதுவும் நடைபெறுவதில்லை. இவ்வருமானத்தில் தீட்சிதர்களின் செயல்பாடுகளில் குற்றச்செயல்கள் இருக்கின்றனவா என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பணி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். மன்னர்கள் காலத்திலிருந்து இன்றுவரை திருக்கோயிலுக்கு வழங்கப்பட்டு வரும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் அரியப் பொருட்கள் காணாமல் போனது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் பதியப் பட்டிருக்கின்றன. அவை குறித்து முழுவதுமாக இவ்விசாரணை ஆணையத்தில் விசாரிக்க வேண்டும்”.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பு நேரலைக் காட்சிகள்
================================
தெய்வத் தமிழ்ப் பேரவை
================================
முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 9841949462, 9443918095
================================

Leave a Reply