வள்ளலார் வழி ஆன்மிகச் சான்றோராக விளங்கிய தவத்திரு ஊரன் அடிகளார் இன்று (14.7.2022) அடக்கம் ஆனார்கள் என்ற செய்தி மிகவும் துயரமளிக்கிறது. வள்ளலார் வழியில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு, வடலூர் சன்மார்க்க நிலைய வளாகத்தையே தமது வாழ்விடமாக்கிக் கொண்டவர் ஊரன் அடிகளார்.
நான் திருச்சி தேசியக் கல்லூரியில் புகுமுக வகுப்பு (பி.யூ.சி) படிக்கும் போது, தங்கிப் படித்த திருச்சி சிந்தாமணி பாப்பம்பாள் சத்திர அறக்கட்டளை விடுதியில் ஒரு சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று சிறப்பாக சைவநெறி, வள்ளலார்நெறி ஆகியவை பற்றி உரையாற்றினார். இவ்வுரை 1966-இல் நடந்தது. ஆற்றோட்டமான தெளிவான பேச்சு!
பிற்காலத்தில் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் சன்மார்க்க நெறியை மிக நுட்பமாகவும், துல்லியமாகவும் விளங்கிக் கொண்டு, மக்களுக்கு விளக்கினார்.
தமிழ்ச் சைவை சித்தாந்தத்திற்கும் வள்ளலாரின் அருட் பெருஞ்சோதி கோட்பாட்டிற்கும் இடையே உள்ள நுட்பமான வேற்பாடுகளையும் விளக்குவார். அதே போல் வள்ளலாரின் சன்மார்க்கத்திற்கும் சைவ சித்தாந்தத்திற்கும் இடையே உள்ள ஒருமைப்பாட்டையும் சிறப்பாக விளக்குவார்.
சிறந்த எழுத்தாளர். பல நூல்கள் எழுதியுள்ளார். சிக்கலான மெய்யியல் கருத்துகளை எளிதல் புரிந்து கொள்ளும் படி விளக்கும் ஆற்றல் பெற்றவர். வள்ளலாரின் மனித சமநிலைக் கோட்பாட்டிற்கும் முதன்மை கொடுப்பார் ஊரன் அடிகள்.
ஊரன் அடிகள் காட்டிய வழியில் வள்ளலாரின் தமிழர் மெய்யியலை மக்களிடம் மேலும் மேலும் கொண்டு செல்வதே, ஐயார் அவர்கட்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் ஆகும்!
தவத்திரு ஊரன் அடிகளாரின் நினைவைப் போற்றுவோம். தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் ஐயா அவர்களுக்குப் புகழ் வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.
—
திரு. பெ.மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர்,
தெய்வத்தமிழ்ப் பேரவை.
செய்தி உதவி:
தெய்வத் தமிழ்ப் பேரவை