Home>>அரசியல்>>திமுக குறுநில மன்னர்களையும், பணத்தையும் நம்புவதற்கு பதிலாக தமிழ் மக்களை நம்புங்கள்.
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

திமுக குறுநில மன்னர்களையும், பணத்தையும் நம்புவதற்கு பதிலாக தமிழ் மக்களை நம்புங்கள்.

திமுகவினர் கவனத்துக்கு – மதுரையில் அமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மீது பாஜகவினர் செருப்பு எறிந்து வன்முறையில் ஈடுபட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக கட்சியும், திமுக அரசும் பாஜகவிடம் பம்முகிறீர்கள். எனவே பாஜகவினர் ஆட்டம் போடுகிறார்கள். இந்த அணுகுமுறை மாற்றப்படவில்லை என்றால் திமுக கட்சியும், அரசும் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

தற்போதைய நிலைமையை சற்றே கண்ணுறுங்கள்:

* நாட்டுக்கு திராவிட மாடல், ஆனால் முதல்வர் வீட்டிலோ திருப்பதி பார்ப்பனர்களின் ஆரிய மாடல்!

* தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட சித்தாந்தப் பயிற்சிகளாம், பட்டறைகளாம். ஆனால் திமுககாரர்கள் நெற்றியில் பட்டையும், ருத்திராட்சக் கொட்டையுமாக அலைகிறார்கள்.

* பல முக்கியத் துறைகளில் மக்கள் சேவைகளுக்கு போதிய நிதி இல்லை. ஆனால் அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் தேடிச்சென்று, மக்கள் பணத்தில் தாராளமாகச் செலவுகள் செய்து, பூசை புனஸ்காரங்கள் செய்து, பார்ப்பனீயத்துக்கு பால் வார்த்துக் கொண்டிருக்கிறார்.

‘ஏக்நாத் ஷிண்டே வைரஸ்’ திமுகவில் பரவிவிடக்கூடாது என்கிற அச்சம்; பழம் தின்று கொட்டைப் போட்டு, தற்போது தில்லியைக் கண்டு விழிபிதுங்கி நிற்கும் பல முன்னணி கழகக் குடும்பங்களுக்கு எந்தவித ஆபத்துக்களும் வரக்கூடாது என்கிற ஆசை; சின்னவர் பட்டாபிஷேகம் சிறிதளவும் தடங்கல் இன்றி நடக்க வேண்டும் என்கிற ஆர்வம் … இப்படியாக திமுக தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இவையெல்லாம் போதாதென்று, காவல்துறையில் காவிகளின் ஊடுருவல். ஒன்றிய அரசின் உதவியோடு பல்வேறு துறைகளிலும் காவிகள் உட்புகுந்து செய்யும் அட்டகாசங்கள், அவர்களிடமிருந்து தகவல்கள் பெற்று அரைகுறையாகப் புரிந்துகொண்டு, அலப்பறை அரசியல் செய்யும் அரைவேக்காடுகளுக்கு அளிக்கப்படும் அதீத முக்கியத்துவம் என தமிழ்நாட்டு அரசியல் திசைமாறிப் போய்க்கொண்டிருக்கிறது.

“கம்பும் உடையக்கூடாது, பாம்பும் சாகக்கூடாது” எனும் நிலைப்பாடில்லா நிலைப்பாடு இனியும் உதவாது என்பதை புரிந்துகொள்ளுங்கள் திமுக ஐயாமார்களே!
மூளை, முதுகெலும்போடு பார்ப்பனீய பாசிசத்தை தைரியமாக எதிர்த்து நில்லுங்கள். மக்கள் பணிகளில் கவனம் செலுத்துங்கள். ஊழல், ஊதாரித்தனம், இயற்கையழிப்பு போன்ற இழிசெயல்களுக்கு இடங்கொடாமல் ஆட்சி செய்யுங்கள். “ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துகிறது; அதனால் மின்கட்டணத்தை ஏற்றுகிறோம், சலுகைகளை நிறுத்துகிறோம்” என்று விளக்கம் சொல்லாமல் தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காகப் போராடுங்கள்.

கூட்டணிக் கட்சித் தலைவர்களைப் பேச, கருத்துத் தெரிவிக்க அனுமதியுங்கள். “இடிப்பார் இல்லா ஏமரா மன்னன்” கதை இங்கே நடக்க விடாதீர்கள். திமுக சட்டமன்ற உறுப்பினர்களை, அமைச்சர்களை, கட்சிக்காரர்களை, பொதுமக்களை முதல்வர் நேரில் சந்திக்க அனுமதியுங்கள். முதல்வர் ஒரு நல்ல மனிதர், அனைவரையும் மதிக்கிறவர் என்பதை நானே நன்கறிவேன். ஒரு சந்திப்பின்போது தான் காலதாமதமாக வந்ததற்காக ஒரு பொருட்டேயில்லாத என்னிடமே விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்த பண்புநிறை மனிதர் அவர். அவரை மற்றவர்களிடமிருந்து விலக்கி வைக்காதீர்கள்.

திமுகவில் தமிழ்நாட்டின் பெரும்பாலானப் பகுதிகளில் ஒருவரே அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும், குறுநில மன்னராகவும் இயங்கும் அவலத்தை மாற்றியமையுங்கள். திமுகவில் ஒரு ‘காமராஜ் பிளான்’ கொண்டுவந்து பல பதவிகளையும், பணமூட்டைகளையும், ஏராளமானச் சொத்துக்களையும் கட்டிப்பிடித்துக் கொண்டு, கட்சியையும், தமிழ்நாட்டையும் நசுக்கிக்கொண்டிருக்கும் மூத்தத் தலைவர்களுக்கு ஓய்வளியுங்கள்.

கட்சியின் நிறுவனர் அறிஞர் அண்ணா அவர்கள் கொண்டிருந்தது போன்ற எளிமையும், நேர்மையும், திறமையும் கொண்ட இளம் தலைவர்களை உருவாக்குங்கள். இப்படியெல்லாம் செய்தால், ஷிண்டேக்களும் உருவாக மாட்டார்கள்; ஆர்எஸ்எஸ் ரவிகளும், ஆர்எஸ்எஸ்-காந்துகளும் அடக்கி வாசிப்பார்கள்.
“உண்மையைச் சொல்லி, நன்மையைச் செய்யுங்கள்!” “இந்த ஆட்சி எங்கள் ஆட்சி” என்று சாதாரண மக்களைக் கொண்டாடச் செய்யுங்கள். அப்படிச் செய்யும்போது, எவனைக் கண்டும் நீங்கள் அஞ்சத் தேவையில்லை. ஆட்சியைக் கலைத்தால், அதிக எண்ணிக்கையிலான இடங்களுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவீர்கள். எங்கள் வாழ்க்கையை எளிதாக்கிய, இனிதாக்கிய அருமைமிகுப் பெரியவரின் மகன் சின்னவரே ஆட்சிக்கு வரட்டும் என்று மக்கள் உதவிக்கரம் நீட்டலாம்.

திமுக குறுநில மன்னர்களையும், பணத்தையும் நம்புவதற்கு பதிலாக தமிழ் மக்களை நம்புங்கள். காவிகளை, கையாலாகாதவர்களைக் கண்டு அஞ்சுவதற்கு பதிலாக தமிழ் மக்களைக் கண்டு அஞ்சுங்கள்.


திரு. சுப. உதயகுமாரன்,
நாகர்கோவில்,
நிறுவனர் – பச்சைத் தமிழகம் கட்சி.
ஆகத்து 14, 2022.

Leave a Reply