மிகவும் பரபரப்பான அரசியல் சூழலில், அடுத்த ஐந்தாண்டை தன் கணக்கில் எழுதிவரும் கட்சி எதுவென பொதுமக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் ஏற்பட்ட அரசியல் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு இவ்வாய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் இடம்பெறும் 543 தொகுதிகளில் எக்கட்சிகளும் எக்கூட்டணிகளும் கைகோர்க்கும். வலு சேர்க்கும் என்பதை விட முக்கியமானதாக கருதப்படுவது, கடந்த மக்களவை தேர்தலுக்கு பின் நிகழ்ந்த நிகழ்வுகள் எவ்வாறு தற்போதைய மத்திய அரசை பாதித்துள்ளன என்பதாகும். குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி ( ) நடுத்தர வர்க்கத்தினரையும் தொழில்துறையினரையும் பி.ஜே.பி மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே கொள்ளவேண்டும்.
தற்போதைய 545 மக்களவை உறுப்பினர்களுள் 269 பி.ஜே.பி. உறுப்பினர்கள் இருப்பது கடந்த மக்களவை தேர்தலில் பி.ஜே.பி. முன்வைத்த வாக்குறுதிகளுக்கே அன்றி, இம்முறையும் அது பயனளிக்கும் என்று கொள்வதிற்கில்லை.
எதிர்பார்க்கப்படும் வெற்றி வாய்ப்புகள்:
அதிக (80) மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமான உத்திர பிரதேசத்தில் கடந்த 2017 மாநில பொதுத் தேர்தலில் யோகி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமைந்தது. 2011 சென்சஸ் கணக்கெடுப்பின் படி 79.73% கிந்துக்கள் வாழும் பூமியான உத்திரபிரதேசத்தில் இந்து நலனை முன்னிறுத்தி ஆட்சி நடத்திவரும் பாரதிய ஜனதா கட்சி எத்தகைய கூட்டணியுமின்றி தன் வெற்றி வாகையை சூடி வரும் என்பதில் ஐயமில்லை. மேலும் இம்மாநிலத்தில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை தன்னகத்தே அடக்கி வைத்துள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேவேந்திர பட்நாவிஸின் தலைமையின் கீழ் இயங்கி வரும் மகாராஷ்ட்ரா அரசு இயந்திரத்தில் தான் இரண்டாவது அதிகபட்சமான மக்களவை தொகுதிகள் அடங்கியுள்ளன (48). இம்மாநிலத்தின் இரண்டாம் பெரும்பான்மை கட்சியான சிவசேனாவிடம் தலா இரண்டரை ஆண்டு முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தோடு மக்களவை நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கூட்டணியானது பா.ஜ.க. – சிவசேனாவிடையே அமைந்துள்ளது. இது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் என்ற கருத்தையும் நாம் நினைவில் கொள்ளாத் தான் வேண்டும்.
மேலும் அருணாச்சல பிரதேசம், குஜராத் உட்பட நான்கு மாநிலங்களில் தனித்த பா.ஜ.க. அரசு இயங்கிவருவது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கு மேலும் 42 இடங்களை உறுதி செய்கிறது.
இந்நிலையில் அண்மையில் மேற்குவங்க முதல்வரான மம்தா பேனர்ஜியின் மோடிக்கு எதிரான பிரச்சார கூட்டணி பெருமளவில் வருகின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் எதிர்பார்க்கப்படுகிறது. அக்கூட்டணி தேர்தலுக்கு பின்னரும் பெருமளவு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைய வலுசேர்க்கும்.
வளர்ந்து வரும் அக்கூட்டணியில் 42 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தின் முதல்வரான மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வரான அரவிந் கெஜ்ரிவால், 25 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட ஆந்திராவின் முதலமைச்சரான சந்திரபாபு நாயுடுவும் மட்டுமின்றி ஒடிசா மாநில முதலமைச்சரான நவீன் பட்நாயக்கும் இணைந்துள்ளனர். ஒடிசாவில் 21 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவன்றி மேற்குறியவர்கள் யாவரும் தனிப்பெரும்பான்மையோடு அந்தந்த மாநில அரசுகளை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
எதிர்பாராத கூட்டணி
தமிழகத்தை பொறுத்தமட்டில் சற்றும் எதிர்பார்க்காத கூட்டணியாக பா.ஜ.க. – அ.தி.மு.க.- பா.ம.க. இணைந்துள்ளது. இக்கூட்டணி அறிவிப்பினாலேயே பா.ம.க. மீது இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் அழிந்துவிட்டது. எனவே, தி.மு.க. பிரச்சாரமின்றி மக்கள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இடம்புரிவதை மனதில் வைத்து, பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளையும் உள்நோக்கி பார்க்கவேண்டியுள்ளது.
மேற்குறிய மம்தா கூட்டணியோடு, தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் நெருக்கம் காட்டி வருவதாலும், நாடாளுமன்ற தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கும் கட்சியான காங்கிரசும் நட்பு பாராட்டி வருவதால், பெரும் திமிங்கிலத்தை அமுக்க வரும், அறிய பெரும் கூட்டணி ஒன்று பா.ஜ.க. எதிரே அமையப்போவதில் வியப்பேதுமில்லை.
கடந்த 2018ல் சட்டீஸ்கர் மாநில பொதுத்தேர்தலின் முடிவு பா.ஜ.க. மீதான அதிர்ப்தியை சுட்டிக்காட்டியிருப்பதாக தெரியவருகிறது. மொத்தமுள்ள 90தொகுதிகளில் 68 இடங்களை பெற்று மாபெரும் வெற்றியை நிலைநாட்டியிருக்கிறது காங்கிரஸ். அதேபோல் ராஜஸ்தானிலும் , மத்திய பிரதேசத்திலும் பெரும் வெற்றியை பெற்று, பா.ஜ.க. மீதான மக்களின் கோபத்தை பிரதிபலித்திருக்கிறது காங்கிரஸ்.
எனவே கூட்டணியாற்ற பெரும்பான்மையோடு 4 மாநிலங்களிலும், கூட்டணிகளோடு 13 மாநிலங்களிலும் பா.ஜ.க. அரசாண்டு வந்தாலும், தற்பொழுது அதிகரித்து வரும் அரசியல் சூழலில் பா.ஜ.க.விற்கு எதிரான காங்கிரஸ், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் போன்ற கட்சிகளின் மாபெரும் கூட்டணி பெருமளவு வெற்றி பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக 2018ல் சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் கணிக்கப்பட்டதை போன்றே அடிப்படை மற்றும் அரசியல் நுட்ப சான்றாதாரங்களை வைத்து பார்த்தாலும் பா.ஜ.க.விற்கு தோல்வி முகம் என்பது புலப்பட்டாலும், இந்திய வானிலை போல் மாறிக்கொண்டிருக்கும் அரசியல் களத்தில் என்ன நிகழப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
—சதீஷ் செல்வ குமார்
(2050 பங்குனி மாத மின்னிதழிலிருந்து)