Home>>அரசியல்>>கொலைக்களங்களாக மாறிக்கொண்டிருக்கும் சென்னை நகரச் சாலைகள்
அரசியல்போக்குவரத்து

கொலைக்களங்களாக மாறிக்கொண்டிருக்கும் சென்னை நகரச் சாலைகள்

சமீபத்தில் போரூரை சேர்ந்த 22 வயதான ஷோபனா என்னும் மென்பொருள் பொறியாளர் 12ம் வகுப்பு படிக்கும் தனது தம்பியை திருவேற்காட்டிலுள்ள பள்ளியில் விடுவதற்காக இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தாம்பரம் மாற்றுவழி சேவைச் சாலையில் மதுரவாயல் அருகே சென்றுகொண்டிருந்தபோது சாலையில் உள்ள பள்ளம் காரணமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த சமயத்தில் பின்னால் மணல் ஏற்றிவந்த லாரி ஒன்று ஷோபனா மீது ஏறி இறங்கியது. கண் முடி திறக்கும் முன்பு நடந்த இந்த கொடிய விபத்தில் ஷோபனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நல்வாய்ப்பாக அவரது தம்பி உயிர் தப்பினார்.

மோசமான சாலைகள் மற்றும் அதில் உள்ள சாலைப்பள்ளங்கள் காரணமாக விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.குறிப்பாக சென்னையில் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கின்றது. சில மாதங்களுக்கு முன்பு கூட புதிய தலைமுறை பத்திரிகையாளர் ஒருவர் சாலைப்பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்தார். இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் டின் கார் விபத்துக்குக்கூட சாலையில் உள்ள பள்ளம் தான் காரணமாக சொல்லப்படுகிறது.

அரசாங்கம் இந்த அளவுக்கு மக்கள் உயிர் மீது ஏன் அலட்சியம் காட்டுகிறது?? எந்த ஒரு வளர்ந்த நாட்டிலாவது இப்படி நடக்குமா??
சாலைகளை அவர்கள் மனம் போன போக்கில் தோண்டி விட்டு எந்த விதமான குறியீடுகளும் சைகைகளும் இல்லாமல் அப்படியே விட்டு விடுவது.மேலும் சாலை ஒப்பந்தத்தை முழுமையாக கடைபிடிக்காமல் ஊழல்கள் செய்து தரமற்ற சாலைகளை போடுவது, சாலையில் உள்ள பள்ளங்களை உடனே சரி செய்யாமல் அலட்சியமாக இருப்பது, சாலைக்கு மத்தியில் இருக்கும் சாக்கடை மூடிகளை அலட்சியமாக திறந்து விட்டு விடுவது, என்ன முழுக்க முழுக்க அரசின் நிர்வாகச் சீர்கேட்டினால் தான் இத்தகைய விபத்துக்கள் நடக்கின்றன.
இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய அரசாங்கம் அதில் எந்தவித அக்கறையும் காட்டாமல் மக்கள் தலைக்கவசம் போடாதது ஒன்றே விபத்து ஏற்படுவதற்கான காரணம் என்பதுபோல தவறாக சித்தரித்து தலைக்கவசம் போடாதவர்களிடம் ஆயிரக்கணக்கில் அபராதம் விதிப்பதுதான் இதற்கு தீர்வு என்று நினைக்கிறார்கள்.
முதலில் விபத்து ஏற்பட காரணம் என்ன? அதற்கு காரணமானவர்கள் மீது என்ன தண்டனை எடுத்து இருக்கிறார்கள்? விபத்தில் கை கால்கள் இழந்தவர்கள்,வாகனம் உடலில் மீது ஏறி இறந்தவர்கள் இவர்களுக்கும் தலைக்கவசத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு??

மக்கள் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையிலேயே பல இடங்களில் வாகனங்களில் செல்ல வேண்டியதாயிருக்கு.குறிப்பாக இரவு நேரங்களில் மிக மிக ஆபத்தான பயணங்களை தான் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. பல மாதங்களாக சென்னையில் பல சாலைகள் இப்படித்தான் இருக்கின்றன. சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான்.

அதற்கு உதாரணமாக,

சென்னையில் அதிக மக்கள் புழங்கும் மேடவாக்கம் – கீழ்கட்டளை சாலையை சொல்லலாம்.சில மாதங்களாகவே அந்த சாலையின் நிலையை கீழ்க்காணும் புகைப்படங்கள் முலம் காணலாம்.

இங்கே இரவில் தெருவிளக்குகள் கூட இல்லை என்பது கூடுதல் செய்தி.
தமிழகத்தின் தலைநகரத்திலே இந்த நிலை என்றால் குக்கிராமங்கள் பற்றி சொல்லவே வேண்டாம். இரவில் இந்த சாலையில் செல்பவர்கள் உயிரை பணயம் வைத்து தான் செல்ல வேண்டும். இப்படி மக்கள் உயிர் மீது எந்த அக்கரையும் இல்லாமல் மிக அலட்சியமாக செயல்படும் அரசாங்கத்தின் நிர்வாகச் சீர்கேடு கண்டிக்கத்தக்கது.

வளர்ச்சி என்ற பெயரில் நீங்கள் மண் அள்ளிப்போட்டு மூட வேண்டியது விவசாய நிலங்கள் அல்ல.சாலையில் உள்ள பள்ளங்கள்.

சாலையில் உள்ள பள்ளங்கள் காட்டி விடுகிறது உங்கள் ஆட்சியின் வளர்ச்சியை..

இந்தியாவிற்கு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டு காலம் ஆகியும், தமிழகத்தை மிக நீண்ட காலமாக திராவிட கட்சிகள் ஆண்டும் இன்னும் இந்த தரமான சாலை என்ற அடிப்படை விடயத்திலேயே தன்னிறைவு பெற முடியவில்லை என்பது வெட்கக்கேடு.
எதிர்பாராமல் ஏற்படுவது தான் விபத்து.ஆனால் எந்நேரமும் விபத்து ஏற்படலாம் என்று நிலையில் சாலைகளை வைத்திருப்பது என்பது அரசின் கொலை முயற்சி என்றே சொல்லலாம்.

இன்னும் எத்தனை உயிர்களை பலி வாங்க காத்திருக்கிறதோ இந்த சாலை என்னும் கொலைக்களங்கள்.

-மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply