Home>>திரை விமர்சனம்>>திரையில் ஒரு தமிழ் தேசிய புரட்சி-விடுதலை
திரை விமர்சனம்

திரையில் ஒரு தமிழ் தேசிய புரட்சி-விடுதலை

விடுதலை.

எத்தனையோ நல்ல படங்களை பார்த்துள்ளேன். அதை பார்த்து மகிழ்ந்து அதற்கான விமர்சனங்களையும் போட்டுள்ளேன்.

ஆனால் இந்த விடுதலை படத்தின் விமர்சனத்தை போடுவதில் பெருமிதம் அடைகிறேன். தமிழனாக அதை என் கடமையாக உணர்கிறேன்.

வெற்றிமாறன் என்னும் தமிழ் தேசிய காட்டாறு இந்த விடுதலை படத்தில் கரை கடந்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு படத்தை எடுப்பதற்கும், இது போன்ற ஒரு அரசியலை பேசுவதற்கும் மகா துணிச்சல் வேண்டும்.
யார் வேண்டுமானாலும் மிக அற்புதமான படங்கள் எடுத்து விட முடியும்.மிக அருமையாக இயக்கி விட முடியும். எத்தனையோ அற்புதமான இயக்குனர்கள் நம்மிடம் உள்ளனர்.ஆனால், வெற்றிமாறன் வெறுமனே மிகச்சிறந்த இயக்குனர் மட்டுமல்ல .அதை விட மிகச்சிறந்த மனிதர்.
ஒரு நல்ல மனிதன் தான் ஒரு நல்ல படத்தை கொடுக்க முடியும்.துளியும் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து மலையாளத் திரையுலகம்  கொடுக்கும் தரமான படங்களை பார்த்து பயங்கரமாக பொறாமைப்பட்டுள்ளேன். இப்படி மாஞ்சி மாஞ்சி வேறு ஒரு மொழி படத்துக்கு நம்மால் எழுதும் விமர்சனம் ஏன் நம் தமிழ் படங்களுக்கு எழுத முடியாத அளவுக்கு தொடர்ந்து கன்றாவி குப்பைகளாகவே இங்கே வருகின்றன என்ற ஆதங்கம் மேலோங்கி இருந்தது.
குறிப்பிட்ட வெகுசில இயக்குனர்கள் மட்டுமே மிகத் தரமான படங்களை கொடுக்கின்றனர். அதிலும் பல இயக்குனர்கள் வெறும் பொழுதுபோக்கு என்ற வகையிலே படங்களை கொடுக்கிறார்கள். வேறு சிலர் ஏதோ அரசியல் பேசுகிறேன் என்று ஒரு அரைவேக்காடான படத்தை கொடுக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் மத்தியில் வெற்றிமாறன் திரையில் பேசும் அரசியல் மட்டுமே நம் தமிழ்நாட்டிற்கு தேவையான ஆகச் சிறந்த அரசியலாக உள்ளது.
தமிழ் தேசியர்கள் மாஞ்சி மாஞ்சி இத்தனை ஆண்டு காலம் முகநூலில் எழுதும் அத்தனை அரசியலையும் அவரின் ஒரு படத்தில் உலகிற்கு உணர்த்தி விட்டார்.
ஆனால் அதை ஏதோ மேம்போக்கான திரை மொழியில் சொல்லாமல் உலக தரத்தில் சொல்லி இருக்கிறார்.

படத்தின் கதை சொல்வதற்கு அவர் நேரமே எடுத்துக் கொள்ளவில்லை. படம் ஆரம்பத்தில் வரும் அந்த 8 நிமிட ரயில் விபத்து  காட்சி  ஒன்றே போதும். அரக்க பறக்க திரையரங்குக்குள் சென்று உட்கார்ந்தவர்களை  தூக்கி நிமிர்த்தி இருக்கையின் நுனியில் உட்கார வைத்து விடுகிறார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட அந்த காட்சி நமக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. 1987-ல் புரட்சி படையினரால் அரியலூர்ல நடந்த ஒரு ரயில் விபத்தை நினைவுபடுத்தும் காட்சி.
சத்தியமா இப்படி ஒரு துவக்க காட்சியை எந்த ஒரு தமிழ் படத்திலும் பார்த்திருக்கவே முடியாது.

படத்தின் கரு.
தனிப்பட்ட சிலரின் நலனுக்காக அதிகார மையத்தால் மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் பொழுதும் ,மக்களுக்கான வளங்கள் சுரண்டப்படும் போதும், தன்னெழுச்சியாக மக்களின் போராட்டங்கள் வெடிக்கும்.
அந்த மக்களின் நியாயமான போராட்டங்கள் அதிகார மையத்தின் அடக்கு முறையால் சீரழிக்கப்படும்
பொழுது ,தீவிரவாதம் பிறக்கும் என்பதுதான் எழுதப்படாத உலக நியதி.
மக்களின் போராட்டம் எந்த வடிவில் இருக்க வேண்டும் , எந்த ஆயுதத்தை எடுத்து போராட வேண்டும் என்பதை தீர்மானிப்பது மக்கள் அல்ல. அதிகார மையமே..

அப்படி இந்த மண்ணில் உதித்த தீவிரவாத படைகள் ,  தவறு புரட்சிப்படைகள் பல. திரு.தமிழரசன் முதற்கொண்டு திரு. கலியபெருமாள் வாத்தியார் வரை அதில் அடங்குவார்கள். அதில் திரு கலியபெருமாள் வாத்தியார் அவர்களை சான்றாதாரமாக கொண்டு பெருமாள் வாத்தியார் என்ற ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார் வெற்றி.

அது மட்டுமல்ல வீரப்பனை தேடும் சாக்கில் காவல்துறையினர் வாச்சாத்தி என்ற பகுதியில் பழங்குடி மக்களுக்கு செய்த  கொடுமைகளையும் மையமாக வைத்து இப்படி ஒரு காவியத்தை உருவாக்கியிருக்கிறார் .

திடீரென இங்கே உதிக்கும் எட்டு வழி சாலை, தங்க நாற்கர சாலை இவற்றின் பின்னணி என்ன என்பதை பற்றியும், வளர்ச்சி என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலை இல்லை என்றால் தாமிரமே  கிடைக்காது, கூடங்குளம் அணு உலை இல்லையென்றால் தமிழ்நாட்டு மக்களுக்கு மின்சாரமே இருக்காது என்றும் மக்களை மறைமுகமாக மிரட்டி நமது வளங்களை கார்ப்பரேட்டுக்கு  தாரை வார்க்கும் அதிகார மையத்தின் அரசியலை பட்டவர்த்தனமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது இந்த படம்.

பெரு முதலாளிகளின் வேட்டை நாய்களாக அவர்களின் ஆசையை நிறைவேற்ற அதிகார மையம்  மக்களுக்கு எதிராக எந்த நிலைக்கும் செல்வார்கள் என்பதையும் நம்மை பதைபதைக்க வைக்கும் அளவுக்கு சொல்லி இருக்கிறார்கள்.

காவல்துறையில் கீழ் நிலையில் உள்ளவர்கள் எந்த அளவுக்கு பெரும் துன்பங்களை அனுபவிக்கிறார்கள், உணவு,உறைவிடம் என்ற சராசரி அடிப்படை தேவைகள் கூட அவர்களுக்கு வழங்காதபடி அவர்களை ஆட்டு மந்தை போல் எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் ரொம்பவே உருக்கமாக சொல்லியிருக்கிறார்கள்.
படத்தை பார்க்கும் பொழுது படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரின் உழைப்பும் தெரிகிறது. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் ஏன் ஒவ்வொரு கட்டங்களையும் கூட நம்மால் எளிதாக கடக்க முடியவில்லை. அந்த அளவுக்கு தனது ஒட்டுமொத்த உழைப்பையும் வெற்றிமாறன் கொட்டியிருக்கிறார். அவர் ஒரு படத்தை எடுப்பதற்கு மிக நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறார் என்ற ஒரு விமர்சனமும் அவர் மேல் உண்டு. ஆனால் அதற்கான முழுப் பலனும் படத்தை பார்க்கும்போது தெரிகிறது. இப்படி ஒரு படத்தை எடுக்க அவர் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அப்படி ஒரு அசாத்திய உழைப்பு.
படத்தின் ஒளிப்பதிவும் , படத்தொகுப்பும் உண்மையிலேயே இரு கண்களாக செயல்பட்டுள்ளன. குறிப்பாக சூரி மலை உச்சியில் இருக்கும் காவலர்களுக்கு சாப்பாடு எடுத்துச் செல்லும் அந்த காட்சி. மேலிருந்து அந்த காட்சியை காட்டும் பொழுது அது எவ்வளவு கடினமான வேலை என்பதை  நமக்கு  உணர்த்துகிறது.
அடுத்து சூரி.
இவரைஎப்படித்தான் பாராட்டுவது என்றே தெரியவில்லை. சிலபேர் சொல்லுவாங்க உசுரகொடுத்து வேலை பார்த்து இருக்காங்கன்னு.
உண்மையிலேயே இந்த படத்திற்காக சூரி  உசுர கொடுத்துதான் வேலை பார்த்திருக்கிறார். என்ன ஒரு அர்ப்பணிப்பு. அனைத்து உயரிய விருதுக்கும் தகுதியானவர். குறிப்பாக படத்தின் இறுதிக் காட்சியில் அவரது நடிப்பு அபாரம். மிக அபாயகரமான சண்டை காட்சியையும் செய்துள்ளார். பார்க்கும்போது நமக்கே நெஞ்சு பதறுகிறது.

படத்தின் நாயகியாக  பவானி என்ற கதாபாத்திரமும் அருமை. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை அவர். அற்புதமான நடிப்பு.

விஜய் சேதுபதி சில காட்சிகளே வந்தாலும் அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் திரையரங்கம் தெறிக்குது.
“சாதி மதங்கள் தோன்றும் முன்னரே மொழியும், மரபும் வந்துவிட்டது. அந்த மொழிக்கும் மரபுக்கும் ஏதேனும் பிரச்சனை வந்தால் மக்கள் தன்னெழுச்சியாக போராடுவார்கள்”
” அப்படிப்பட்ட  மக்களின் தன் எழுச்சியான போராட்டத்தை எந்த ஒரு அரசாங்கமும் கட்டுப்படுத்த முடியாது”

ஒரு அதிகார மையத்திற்கு எதிரான ஒரு புரட்சியாளனின் சுய சரிதையை 30 வருடங்கள் கழித்தும் ஒருவர் படிக்கும் பொழுது அது நியாயமாக தெரிந்தால் அந்த 30 ஆண்டுகளாக அந்தப் பிரச்சினை சரி செய்யப்படாமல் உள்ளது என்றே அர்த்தம். அதுவே அரசாங்கத்தின் மாபெரும் தோல்வி.
என இப்படிப்பட்ட வசனங்கள்  பின்னி எடுக்குது..
பொதுவாகவே வெற்றிமாறன் இடதுசாரி சிந்தனை உடையவர் தான். அவரது கேள்விகள் அனைத்தும் அதிகார மையத்தை நோக்கியே இருக்கும். ஆனால் அதை இதுவரை மென்மையாக செய்த அவர் இந்த படத்தில் சும்மா இறங்கி அடித்திருக்கிறார்.

சில படங்களை ரசிக்கலாம். சில படங்களை தான் உணர முடியும்.
அப்படி இந்த படத்தை நாம் உணர முக்கியமான காரணமாக இருப்பது இளையராஜாவின் இசை.
படத்தில் வரும் இரண்டு பாடல்களும் கேட்பதற்கு அவ்ளோ  இனிமையாக உள்ளது. சமீப காலங்களில் இனிமையான இசை என்பதே இல்லாமல் போய்விட்டது. மீண்டும் ராஜா வந்து விட்டார்.
படத்திற்கு தேவையான அளவிற்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார். இசை வேறு படம் வேறு என்று பிரித்து பார்க்க முடியவில்லை. ஆனாலும் இன்னும் சிறப்பாக பின்னணி இசை அமைத்திருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து .

மொத்தத்தில் விடுதலை என்பது மோசமான படங்களில் இருந்து தமிழ் சினிமாவுக்கு கிடைத்த “விடுதலை” என்று சொல்லலாம்.
எங்களிடம் உலகத்தரம் வாய்ந்த ஒரு இயக்குனர் இருக்கிறார் என்று மார் தட்டி சொல்லலாம்.

தமிழ் சினிமாவிற்கு ஆயிரம் சங்கர்களை விடவும் ஆயிரம் லோகேஷ் கனகராஜ்களை விடவும் ,
வெற்றிமாறன் போன்ற போராளிகள் தான் இங்கே தேவை. இன்னும் நமக்கு பல வெற்றி மாறன்கள் தேவை.
ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதே போக்கை மட்டும் அல்ல. நம் பொழுதை அர்த்தமாக்க வேண்டும். அதுதான் ஒரு நல்ல திரைப்படத்திற்கான அடிப்படை தத்துவம்.
அப்படி ஒரு அரிதான படைப்பாக  வந்துள்ள படம்  தான் “விடுதலை”.
கண்டிப்பாக பாருங்கள் என்று சொல்வதை விட இந்த படத்தை பார்ப்பது நமது கடமை என்று நாம் ஒவ்வொருவரும் உணர்வோம்.
உலகின் எந்த உயரிய விருதுக்கும் தகுதியான படம் தான் இது. ஆனால் அதிகார மையத்தை நோக்கி கேள்வி கேட்கும் படங்களுக்கு விருது கிடைப்பது கடினம் தான்.
மக்கள் நமது பாராட்டுகளே இந்த படத்திற்கான உண்மையான விருது.

இது போன்ற படங்கள் பெரும் வெற்றி தான் இன்னும் பல இயக்குனர்கள் இப்படிப்பட்ட நல்ல அரசியலை சொல்லும் படங்களை எடுக்க முன் வருவார்கள்.

இப்படி ஒரு ஆகச்சிறந்த உன்னத திரை அனுபவத்தை கொடுத்து வெற்றிமாறனுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

-மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply