Home>>கட்டுரைகள்>>லித்தியம் ஏழு ஆண்டுகள் உத்திரவாதம் மற்றும் பத்து ஆண்டுகள் உழைக்கும் என விளம்பரம் செய்கிறார்கள்.
கட்டுரைகள்செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

லித்தியம் ஏழு ஆண்டுகள் உத்திரவாதம் மற்றும் பத்து ஆண்டுகள் உழைக்கும் என விளம்பரம் செய்கிறார்கள்.

இப்போதெல்லாம் என்னிடம் இன்வெர்ட்டருக்கு பேட்டரி வாங்குபவர்கள் “லித்தியம் பேட்டரி” கேட்கிறார்கள். தற்போது பயன்பாட்டில் உள்ள லெட் ஆசிட் பேட்டரியை மட்டமானதாக எண்ணத் தொடங்கிவிட்டனர்.

எல்லோருக்கும் பேட்டரி தொழில்நுட்பத்தில் “லித்தியம்” முன்னணியில் உள்ளது என்றும், அதுவே சிறந்தது என்றும் கருதுகிறார்கள். போதாத குறைக்கு பல யூடியூப் காணொலி மற்றும் விமர்சனம் எல்லாம் லித்தியம் பேட்டரியை ஆகச் சிறந்த பொருளாக உருவகம் செய்ததே இதற்கு காரணம்.

மேலும் லெட் ஆசிட் பேட்டரி என்றால் அதற்கு பராமரிப்பு, டிஸ்டில்டு வாட்டர் ஊற்றுதல் போன்ற கூடுதல் பணிகள் உள்ளது. லித்தியம் பேட்டரியில் எவ்வித பராமரிப்பும் இல்லை.

லெட் ஆசிட் பேட்டரி அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் உத்திரவத்துடன் கிடைக்கிறது. உத்தேசமாக ஐந்து ஆண்டுகள் உழைக்கிறது. லித்தியம் ஏழு ஆண்டுகள் உத்திரவாதம் மற்றும் பத்து ஆண்டுகள் உழைக்கும் என்றும் விளம்பரம் செய்கிறார்கள்.

உண்மையில் ஒவ்வொரு பேட்டரிக்கும் இன்னென்ன கருவிகளுக்கு ஏற்றது என்கிற வரையறை உள்ளது. ஒவ்வொரு நுகர்வோருக்கும் வெவ்வேறு விதமான தேவை உள்ளது.

உதாரணமாக வங்கிகள் மற்றும் டேட்டா சென்டர் போன்றவர்களின் பேட்டரி பயன்பாடு ஒருவிதமாக இருக்கும். ஆனால் வீடுகளில் பேட்டரி பயன்பாடு வேறு விதமாக இருக்கும்.

லேப், உயர் தொழில்நுட்ப மின்னணு கருவிகள் பயன்படுத்தும் இடங்களில் பேட்டரி பயன்பாடு வேறு விதமாக இருக்கும்.

ஆலைகளில் வேறுவிதம். செல்போனில் வேறுவிதம். பொம்மைகளில் வேறுவிதம்.
தொழிலாளர்கள் பயன்படுத்தும் கருவிகளில் வேறுவிதம்.

இவை எல்லாவற்றையும் பார்த்து குழப்பிக் கொள்ளக்கூடாது.

வீடுகளில் வாரத்தில் சில மணி நேரம் மட்டுமே பேட்டரி பயன்படும். அவ்வாறு பயன்படுத்தப்படும் மொத்த காலம் 500 மணி நேரம் ஆவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகிவிடும். அதற்கேற்பவே லெட் ஆசிட் பேட்டரிகள் வீட்டு பயன்பாட்டிற்கு சிபாரிசு செய்யப்படுகிறது. மேலும் இவை அறை வெப்ப நிலையில் இயங்கக் கூடியவை. வெடிக்கும் அபாயம் குறைவு. எளிதாக மறுசுழற்சி செய்ய முடியும். கையாள்வது, ஏதேனும் சிறு பழுதுகள் ஏற்பட்டால் சரிசெய்வது எளிது. இதற்கான சார்ஜிங் தொழில்நுட்பமும் விலை மலிவு.

ஆலைகளில் பயன்படுத்தப்படும் லெட் ஆசிட் பேட்டரியில் ஒரே ஒரு செல்தான் இருக்கும். வீடுகளில் பயன்படுத்தப்படும் லெட் ஆசிட் பேட்டரியில் ஆறு செல்கள் இருக்கும். இவற்றை தனியாக பிரித்து எடுக்க முடியாது. முழுமையாக உருக்கி புதிதாகத்தான் செய்ய முடியும்.

ஆனால் லித்தியம் பேட்டரி என்பது நூற்றுக்கணக்கான செல்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படுவது. ஆலை அல்லது மிகப்பெரிய இயந்திரம் ஏதோ ஒன்றில் பயன்படுத்தப்பட்டு செயலிழந்த லித்தியம் பேட்டரியை பிரித்து அதில் நல்ல நிலையில் உள்ள செல்களை மட்டும் எடுத்து வீட்டுத் தேவைக்கு லித்தியம் பேட்டரி தயாரித்து மலிவான விலையில் விற்கிறார்கள்.

லித்தியம் பேட்டரியின் இயல்பான ஆயுட்காலம் 1500 மணி நேரம். ஆனால் நீங்கள் வாங்கும் பேட்டரி புதிதாக உற்பத்தி செய்யப்பட்டதா என்றே கண்டுபிடிக்க முடியாது. எனவே லெட் ஆசிட் பேட்டரி கொடுக்கும் 500 மணி நேர பயன்பாட்டைக் கூட லித்தியம் பேட்டரி கொடுக்குமா என்று கணிக்க முடியாது.
இவ்வகை மறுகட்டமைப்பு செய்த லித்தியம் பேட்டரிகள்தான் தற்போதைய மின்சார வாகனங்களில் பொருத்தப்பட்டு மலிவான விலையில் அல்லது அதிக லாபத்தில் விற்கப்படுகின்றன.
இவை தவிர லித்தியம் பேட்டரிகளில் சில தொழில்நுட்ப சிரமங்கள் உள்ளன.

ஏதேனும் சூழலில் முழுவதும் டிஸ்சார்ஜ் ஆகிவிட்ட பேட்டரியை நெடுநாட்களுக்கு மீண்டும் சார்ஜ் செய்யாமல் விட்டுவிட்டால் எல்லா வகை பேட்டரிகளுமே உறக்க நிலைக்கு சென்றுவிடும். லெட் ஆசிட் வகையில் உறக்க நிலைக்கு சென்ற பேட்டரியை மீட்பதில் 60% வாய்ப்புள்ளது. அதே லித்தியம் வகையில் 5% மட்டுமே வாய்ப்புள்ளது. எனவே முழு பேட்டரியும் நட்டமாக்கலாம்.

ஏதேனும் சூழலில் சார்ஜரில் பழுது ஏற்பட்டு வரையறையை மீறி சார்ஜ் அல்லது டிஸ்சார்ஜ் நடந்தால் அதை நீங்கள் உணரும் முன்னர் பேட்டரி வெடித்து விடும். ஒருவேளை வெடிக்காமல் வெறுமனே புகைந்தால் கூட அந்த நச்சுப்புகை கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஒரு கணக்கீட்டிற்க்காக:

வீட்டுப் பயன்பாட்டிற்கான 100AH லெட் ஆசிட் பேட்டரி விலை சுமார் 10,000 ரூபாய் வரும். ஆனால் முதல்தர 100AH லித்தியம் பேட்டரி விலை சுமார் 72,000 ரூபாய் வரும். இரண்டாம் தர பேட்டரி சுமார் 50,000 ரூபாய் வரும். எனில் உங்களிடம் யாரேனும் 20,000 ரூபாய்க்கு தருவதாக சொன்னால் அது எந்த தரத்தில் இருக்கும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக, இரண்டாம் தரத்தில் லித்தியம் பேட்டரி வாங்குகிறீர்கள் எனக்கொள்வோம். நல்வாய்ப்பாக அதன் பயன்பாடு 1500 மணி நேரம் முழுமையாகக் கிடைக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். ஒரு லெட் ஆசிட் பேட்டரியை விட மூன்று மடங்கு அதிகமாக உழைத்துள்ளது.
மகிழ்ச்சிதான். ஆனால் நீங்கள் ஐந்து மடங்கு அதிக விலை கொடுத்துள்ளீர்கள். தவிர பழைய லெட் ஆசிட் பேட்டரியை உங்கள் விற்பனையாளர் ஒரு விலைக்கு எடுத்துக் கொள்வார். ஆனால் பழைய லித்தியம் பேட்டரியை வாங்கிக் கொள்ள மாட்டார்கள்.

எனில் லித்தியம் பேட்டரி யாருக்கு தேவை..?

ஒரு நாளில் சில மணி நேரங்கள் மட்டுமே பேட்டரியை சார்ஜ் செய்ய மின்சாரம் கிடைக்கும் சூழல்.
பெரிய அளவிலான பேட்டரியை வைக்க இடமில்லா சூழல். பேட்டரி எடை குறைவாக இருந்தே ஆக வேண்டிய சூழல்.

பேட்டரியை செங்குத்தாக அல்லாமல் பல வசங்களில் வைக்க வேண்டிய இக்கட்டான சூழல்.
பேட்டரி மின்சாரத்திற்காக எவ்வளவு வேண்டுமாலும் செலவு செய்ய முடிகிற சூழல்.

குறுகிய நேரத்தில் அதிகளவு பேட்டரி மின்சாரம் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டிய சூழல்.
அநேகமாக வீட்டுப் பயன்பாட்டிற்கு மேலே குறிப்பிட்ட எத்தகைய சூழலும் இருக்காது என்று கருதுகிறேன்.

இனி எது வேண்டும் என நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள்.!


எழுதியவர்:
திரு. V. செந்தில்,
மன்னார்குடி.


பட உதவி:
இணையம்


செய்தி சேகரிப்பு:
திரு. விக்னேசு,
மன்னார்குடி.

Leave a Reply