Home>>அரசியல்>>மூன்று மாதமாய் எரிகிறது மணிப்பூர்! பாலியல் வல்லுறவு – இன அழிப்பு!
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமணிப்பூர்வரலாறு

மூன்று மாதமாய் எரிகிறது மணிப்பூர்! பாலியல் வல்லுறவு – இன அழிப்பு!

மூன்று மாதமாய் எரிகிறது மணிப்பூர்!பாலியல் வல்லுறவு – இன அழிப்பு: மகளிர் ஆயம் தலைவர் தோழர் அருணா கண்டனம்!


கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில், மணிப்பூரில் ‘குக்கி’ இனக்குழுவைச் சேர்ந்த இரண்டு பெண்களை, மெய்த்தி இனத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி, வீதியில் நடத்தி பாலியல் வன்கொடுமை செய்த செய்தி தீயாகப் பரவி வருகிறது.

நாட்டையே உலுக்குகின்ற இந்நிகழ்வு பெண்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் சீரழிக்கின்ற நிகழ்வு. மகளிர் ஆயம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது!

பா.ச.க. அரசின் துணையோடு, கடந்த மே 3 தொடங்கிய இந்த இன வன்முறையின் தொடர்ச்சியாக, மே 4 அன்று, இக்கொடிய நிகழ்வு நடந்திருக்கிறது. காவல்துறையின் பாதுகாப்பிலிருந்த குக்கி பெண்களும், ஆண்களும் ஆயிரம் பேர் கொண்ட மெய்த்தி கும்பலிடம் காவல்துறையாலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் கண்ணெதிரேயே இப்பெருங்கொடுமை நிகழ்ந்திருக்கிறது.
இந்த வன்முறையை நிகழ்த்தியவர்கள், தங்களது இந்த இழிச்செயலை அவர்களே காணொலியாக எடுத்து பரப்பியிருக்கிறார்கள். மின்னணு ஊடகத் தடை இப்போது நீக்கப்பட்டுள்ளதால், வெளியுலகத்திற்கு இந்த அநீதி தெரியவந்துள்ளது.

பா.ச.க.வின் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், “இதுபோல் 100 நிகழ்வுகள் நடந்திருக்கின்றன” என்கிறார். இது, பா.ச.க. அரசு தேசிய இன நலன்களுக்கு எதிரானது, பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது, மதச் சிறுபான்மையினருக்கு எதிரானது, பெண்களின் மாண்பிற்கு எதிரானது என்பதனைக் காட்டுகிறது.

மணிப்பூர் பெண்கள் அளப்பரிய ஆற்றலும் மனத்திடனும் கொண்டவர்கள். ஆயுதப் படைப் பிரிவினருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டத்திற்கு எதிராகவும், மணிப்பூர் பழங்குடிப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக தங்களை உடலையே ஆயுதமாக்கி “INDIAN ARMY RAPE US” எனப் பதாகை தாங்கி நிர்வாணப் போராட்டம் நடத்தி, அச்சட்டத்தைத் திரும்பப் பெற வைத்தர்கள். இன்றும் குக்கிப் பெண்கள் தங்கள் மண்ணையும் மக்களையும் காப்பதில் முன்வரிசையில் நிற்பவர்கள்.

பல ஆண்டுகளாக இம்பால் சமவெளி மெய்த்தி மக்களுக்கும், மலைவாழ் குக்கி பழங்குடியின மக்களுக்கும் நிலம், வழிபாடு போன்ற அடிப்படையில் முரண்பாடுகள் உண்டு. இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 342, குக்கி உள்ளிட்ட பழங்குடி மக்களின் நிலவுரிமையை – அவர்களின் தாயக உரிமையை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு எதிராக, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் துணையோடு, பழங்குடி மக்களின் நில உரிமையைப் பறித்து, மெய்த்திக்களுக்குக் கொடுப்பதற்கு மெய்த்தி இன மக்களை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு பா.ச.க. அரசு சூழ்ச்சி செய்தது. இதுவே இந்த இனமோதல் தீவிரமடைந்திருப்பதற்கு அடிப்படைக் காரணமாகும்.
மெய்த்தி மக்களை பழங்குடிப் பட்டியலில் சேர்த்த பிறகு, பெருங்குழும முதலாளிகளுக்கு மணிப்பூர் நிலத்தையும், வளத்தையும் வாரிக் கொடுக்க சூழ்ச்சி செய்கிறது பா.ச.க. அரசு! இச்சூழ்ச்சியின் விளைவாக, கடந்த மூன்று மாதமாக மணிப்பூர் பற்றி எரிகிறது!

எந்தவொரு சமூகத்திலும் சாதியப் பிரச்சனை, சமயப் பிரச்சனை, போர் போன்ற அனைத்திலும் பெண்கள் பண்டமாகக் கருதப்பட்டு வன்முறைக்குள்ளாவர். மணிப்பூரிலும் இவ்வாறே நடந்தேறியுள்ளது. இன்னும் பெண்கள் மீதான எத்தனை கொடுமைகள் நடந்தேறியுள்ளன என்று தெரியவில்லை. பா.ச.க. முதலமைச்சரே நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்வுகள் என்று கூறுகிறார்.
எனவே மணிப்பூரில் உடனடியாக அமைதியை நிலைநாட்ட, ஆவன செய்ய வேண்டும். பெண்களின் பாதுகாப்பு உறுதிப்பட வேண்டும். மணிப்பூர் பா.ச.க. அரசு நீக்கப்பட வேண்டும்.

இந்திய – மணிப்பூர் மாநில பா.ச.க. அரசுகளின் மீது நம்பிக்கை இல்லாததால் உடனடியாக உச்ச நீதிமன்றம் தனது கண்காணிப்பில், மனித உரிமை செயல்பாட்டளர்கள், சான்றோர்களை உள்ளடக்கிய குழுவை அமர்த்தி, தீர்வு காணும் வகையில் தலையிட வேண்டும் என மகளிர் ஆயம் கோருகிறது!


செய்தி உதவி:
செய்தித் தொடர்பகம்,
மகளிர் ஆயம்,
தொடர்புக்கு: 7373456737, 9486927540

Leave a Reply