Home>>இந்தியா>>ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் 50% குறைப்பு.
தமிழ்நாடு சட்டமன்றம்
இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் 50% குறைப்பு.

சென்னை மாநகரில் உள்ள நேரடி ஆவின் பாலகங்களுக்கு 4.5%கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகள் இன்று (01.10.2023) எந்தவிதமான முன்னறவிப்பும் இன்றி 50% குறைத்து விநியோகம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான ஆவின் பாலினை விநியோகம் செய்ய முடியாமல் பால் முகவர்கள் கடும் அவதியுற்றனர்.

மேலும் இன்று 50% அளவு குறைக்கப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் அளவை பழையபடி வழங்க முடியாது எனவும், வேண்டுமானால் இனிமேல் குறைக்கப்பட்ட பால் பாக்கெட்டுகளுக்குப் பதிலாக 1% கொழுப்பு சத்து குறைவான ஆனால் பச்சை நிற பால் பாக்கெட்டின் விற்பனை விலை (500மிலி 22.00ரூபாய்) கொண்ட 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற (பசும்பால்) பாக்கெட்டினை வேண்டுமானால் நாளை முதல் தருவதாக தெரிவித்திருப்பதை வைத்து பார்க்கும் போது இதன் மூலம் பொதுமக்கள் தலையில் லிட்டருக்கு 8.00ரூபாய் மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்துவதிலேயே ஆவின் நிர்வாகம் குறியாக இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

அத்துடன் ஏற்கனவே 5%, 10%, 20%என நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விநியோகத்தை தமிழகம் முழுவதும் படிப்படியாக குறைத்து வந்துள்ள ஆவின் நிர்வாகம் சென்னை மாநகரில் தற்போது ஒரேயடியாக 50% குறைத்துள்ளதை வைத்துப் பார்க்கும் போது பச்சை நிற பால் பாக்கெட் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த திட்டமிட்டு வருவதாகவே தெரிகிறது. ஆவின் நிர்வாகத்தின் இந்த மக்கள் விரோத போக்கிற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகத்தில் ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காத சூழலில் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக ஆவினுக்கான பால் வரத்து கடுமையாக சரிவடைந்தது. இதனால் வடமாநிலங்களில் இருந்து வெண்ணெய் மற்றும் பால் பவுடர் கொள்முதல் செய்து அதன் மூலம் பால் உற்பத்தி செய்யும் நிலைக்கு ஆவின் தள்ளப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய பாலில் கொழுப்பு சத்து அளவையும், பால் பாக்கெட்டில் பாலின் அளவையும் குறைத்து, அதன் மூலம் லிட்டருக்கு 5.00ரூபாய் முதல் 8.00ரூபாய் வரை மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்தி கொண்டிருப்பதை மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இனியேனும் அனுமதிக்காமல் பால் கொள்முதலை அதிகரிக்க பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, அத்துடன் ஆவின் பால் விற்பனை விலையையும் நியாயமான அளவில் மாற்றி அமைத்து, மக்கள் விரும்பி வாங்கும் ஆவின் பால் பாக்கெட்டுகளை தட்டுப்பாடின்றி உற்பத்தி செய்து விநியோகம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.


தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்

Leave a Reply