Home>>இலக்கியம்>>என் தாத்தா …
இலக்கியம்கதை

என் தாத்தா …

– தினேஷ்குமார் மாரிமுத்து, மன்னார்குடி
(2048 ஆடிமாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)


பொன்னி கிழவி வளர்த்து எடுத்த புதல்வன் ….

பாமணி ஆற்றங்கரையில் புளியமரத்தின் இடையில் கிழக்கே உதிக்கும் சூரியனும் நீ வம்பட்டி பிடித்து வரப்பு வெட்டும் அழகை பார்த்துக்கொண்டே உதயமாகும் …..

பொட்டுக்கள்ள சக்கரையோட நீ பொன் ஏறு பூட்டுனா, பொழுதுக்குள்ள மழை வருமே…

நீ சாணி மொழுகி கோட்டை கட்டிய விதை நெல் அனைத்தும் கோடி தலைமுறை சொத்து ஐயா ……

நீ நீராராம் குடிச்சி வண்டி ஓட்டி எருவு அள்ளி வீசையிலே தரிசு நிலமும் தழைத்து வரும் ஐயா …..

நீ மதவடில மட மாத்துற வம்பட்டி களியில் உள்ள ஈரப்பதம் இன்னும் என் கைய விட்டு காயவில்லை…

நீ வாய்க்காங் கரையிலே வெத நெல்ல கரை சேர்க்கையிலே முளைத்து முளைத்து சிரிக்கும் ஒவ்வொரு நெல் மணியும் …

வண்டி மாடு பூட்டி நீ உழவு அடிக்கயிலே வடக்கி தெரு வரை மண் வாசம் வீசும் …

நீ மண்டி போட்டு நாத்து பறிக்கும் போது … நாத்து அதன் வேரில் இருந்து அருபட்டாலும் பல உயிர்களுக்கு பசி தீர்க்க போகிறோம் என்ற கர்வத்தோடு கரை சேரும் …

நீ நாத்து முடி வீசும் வேகத்திலே எங்கள் பசியெல்லாம் தீர்ந்தது ஐயா …..

நடவு நடும் ஒவ்வொரு நாளும் உன் கை பட்ட பண்ணும் டீயும் நீக்கமற நிறைந்து இருக்கும் ….

அன்றைய கால பொழுதில் நீ முப்பது ருபாய் சம்பளமும் ,காந்தி கடை வடையும் கொடுத்து கீழ் குண்டு களை எடுக்க ஆள் பிடிப்பதே ஒரு கலை தான்…

நீ அரை கால் சட்டையும் ஊர்வசி பனியனும் போட்டு முண்டாசு கட்டி …. துணி துவைக்கும் கல் சாத்தி கோட்டவத்துல ஒரு கை பிரட்டி கதிர் அடிக்கையிலே .. அங்கேயே அரிசி ஆகும் ஒவ்வொரு நெல்லும் …..

கண்டு மொதல் கண்டு, நெல் மூட்ட ஏத்தி டயர் வண்டி தென்பர வாய்க்கா கடக்கயில சேத்துல மாட்டும் வண்டிய எழுப்பிவிட

காண்டா விளக்கு வெளிச்சத்துல நீ போடும் சத்தம் என்னும் என் காத விட்டு போகலியே….

வைக்க தெர கட்ட வேப்பங் கம்பு ஒடிச்சி ஒரு ஆள் உட்கார்ந்து வைக்க எடுத்து கொடுக்க …நீ குச்சி சுத்த இதற்காகவே தவம் கிடந்தது போல் முறுக்கி கொண்டு முன்னேறும் ஒவ்வொரு பிரியும் ….

நீ வைக்க போறு தளை கூட்டயிலே மாடு எல்லாம் வைச்ச கண்ணு வாங்காம பார்க்கும் ஐயா ……

சிங்கப்பூர் போகும் ஒவ்வொரு ஆளும் சேமிக்கும் மிகப்பெரிய சொத்து ரோசு அல்லது பச்சை கலரு படுதா, நீ மட்டும் அதில் விதிவிலக்கா என்ன….

வீட்டு வாசலிலே யாவரி ஆளு கூப்டாந்து நெல்லு மூட்ட அளக்கையிலே ரெண்டு ஆளும் ஒரு முட்டு முட்டி தூக்கி வீசுறத நீ எண்ணி கொண்டே வேடிக்கை பார்க்க ,, அதை நான் எண்ணாமல் வேடிக்கை பார்ப்பேன் ….

நீ தேங்காய் எண்ண கொழப்பி தடவி பச்சை பெல்ட்டு போட்டு காவி துண்டு தோளில் போட்டு புறங்கையை பின்னால் கட்டி, கனைத்து நடக்கும் நடைக்கு எது ஈடு ஆகும்…

ராத்திரியில் கப்பி ரோட உரசி வருர உன் செருப்பு சத்தமும், பேச்சு சத்தமும் கேட்ட பின்பு தான் அந்தியில் நீ மேய்த்த மாடு அனைத்தும் நித்திரையில் அடங்க என்னும்….

நீ மூங்கி முள் எடுத்து, பால கிழிச்சி வேலி கட்டையிலயும் , மட்ட வெட்டி கீத்து பின்னையிலயும் ஓணான் அனைத்தும் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும்…..

நீ கொட்டாய் ஏறி கீத்து போட்டு ,வைக்க பரப்பி பிரி போட்டு கட்டி, வேப்பிலை சொறுவினால் மாடி வீடும் மயங்கி நிற்கும் …..

பொங்கல் அன்று கோடு வெட்டும் பொழுது…போன வருடம் கரி போட்டு மூடிய அதே இடத்தில் உன் வம்பட்டி விழும் நினைவாற்றல் கண்டு பல முறை வியந்து போய் இருக்கிறேன்…..

மாட்டுப்பொங்கல் அன்று நீ தேய்த்து குளிக்கும் எண்ணையிலும் , புலி மார்க் சீயக்காயிளையும் பாதி பங்கு கேட்கும் நம்ம பசு மாடு …..

நீ இடுப்பில் கட்டிய துண்டுடன் , மா இலையில் நீர் தெளித்து கொண்டே பொங்கலே பொங்கல் … பொங்கலே பொங்கல் ….என கத்தும் சத்தம் இனி எந்த சாமியிடம் பொங்கல் வைத்தாலும் என் தலைமுறைக்கு வாய்க்குமா……

அதே மாட்டு பொங்கல் அன்று உப்பு மிளகாய் போட்டு தென்கிழக்கில் கை நீட்டியபடி நீ தூக்கும் திருஷ்டி சட்டி சத்தம் போடும் உன் சங்கதியை …..

தேங்காய் வித்து லாபம் பார்த்ததயும் பார்த்து இருக்கேன் …நீ பத்துக்கு ரெண்டு லாப கா கொடுத்ததையும் பார்த்து இருக்கேன் ….

ஊரு காமண்டி கொளுத்தும் பொழுது நீ முடிஞ்சி கொண்டு வந்து கொடுக்கும் கடலை சூட்ட நான் இன்னமும் உணர்வேன் ….

உள்ளிக்கோட்டையார் குடிச்சாலும் நாள் முழுக்க உழுத காசிலே தானே தவிர, நூறு கூலி கூட விக்கலையே என ஊரார் கூற சுக்கு நூறாக உடைந்தே போனேன் ……

இன்று சம்பாவும் எனக்கு இல்ல,
குருவையும் எனக்கு இல்ல,
தாளடியும் எனக்கு இல்ல ….

கோட்டவமும் எனக்கு இல்ல … எலந்த மர நிழலும் எனக்கு இல்ல , மதவடியும் எனக்கு இல்ல … பாமணி ஆத்து சுக்காணும் எனக்கு இல்ல… ஏறி கரை கிட்டியும் எனக்கு இல்ல… வண்டி மாடும் எனக்கு இல்ல ,, நீ தார் அடித்த பத்தாயமும் எனக்கு இல்ல… காமாண்டியும் எனக்கு இல்ல….

மூங்கி குத்தும் எனக்கு இல்ல ,,, மா மரமும் எனக்கு இல்ல …சுண்ணாம்பு தடவிய கைத்து கட்டிலும் எனக்கு இல்ல …கட்டு பரணியும் எனக்கு இல்ல … பூசண மரமும் எனக்கு இல்ல… கிளுவ போத்தும் எனக்கு இல்ல…

வேம்படையார் கோயில் கரி ரசமும் எனக்கு இல்ல ….. வேளாண் வீட்டு சாமி பொம்மையும் எனக்கு இல்ல …மாரியம்மன் கோயில் திருவிழாவும் எனக்கு இல்ல… கம்பு சொருவயும் எனக்கு இல்ல … அறுவடை கால பட்ட சோறும் எனக்கு இல்ல .. கப்பி கல்லு ரோடும் எனக்கு இல்ல …

ஏன் சுடுகாடும் எனக்கு இல்ல …..

நான் வாழ்ந்தது உன்னுடன் என்னவோ பத்து வயது வரை தான் ….. அனால் நான் பழகியதோ பூமியில் பொன் விளைவிப்பது முதல் பொன் ஏறு பூட்டுவது வரை …..

உன் மரபு வழி வாழ்க்கையை வாழாமல் போனதன் விளைவு தானோ இன்று விவசாயிக்கும் பஞ்சம் ஐயா…..

நிம்மதிக்கும் நிலை இல்லை ஐயா…….

என் ஆகாச வீரனுக்கு அடுத்தவனே…

Leave a Reply