Home>>மருத்துவம்>>மருத்துவ வினா விடை
மருத்துவம்

மருத்துவ வினா விடை

– மருத்துவர் பாரதிசெல்வன் இலரா அவர்களுடன் ஒரு கேள்வி பதில் விவாதம்,
பாரதி இதய மருத்துவமனை, மன்னார்குடி

(2048 ஆடிமாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)


1. ஒருவர் மருத்துவமனையை நாடாமல் இருக்க எப்படிப்பட்ட வாழ்வியல் இருக்க வேண்டும்?

இன்று நடைமுறையில் உள்ள, நாம் வாழும் மாசுபட்ட, ஒழுங்கற்ற, இயற்கை கெடுக்கப்பட்ட புறச் சூழலில் , இச்சூழலைச் சார்ந்துள்ள நமது வாழ்வில், நமது தனிப்பட்ட வாழ்வியல் நடைமுறைகளால் , நாம் மருத்துவமனைக்கு செல்வதைத் தடுக்கமுடியுமா என்பது ஐயத்திற்குறியதே.

இதே போன்ற வினாவுக்கு ஐயா நம்மாழ்வார் அவர்களின் விடை இதோ!

உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.

ஒன்று… பசி வந்து சாப்பிட வேண்டும், இரண்டு… தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், மூன்று… சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், நான்கு… தூக்கம் வந்து தூங்க வேண்டும்.

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள்.

‘இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய்’

– என்கிறார் வள்ளுவர்.

அளவறிந்து அமைதியாய் சாப்பிட்டால் ஆரோக்கியம் நம் பக்கம் நிற்கும். இல்லாவிட்டால் வள்ளுவர் சொல்வதுபோல் நோய்தான் நம் பக்கம் நிற்கும். இன்றைய இளைய தலைமுறையினருக்குச் சாப்பிடக்கூட நேரம் இல்லை. அவசரம் அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓடுவது நிறைய வியாதிகள் வருவதற்குக் காரணமாகிவிடுகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக அதில் கலக்கும் ரசாயனங்கள் நம் வயிற்றுக்குள் சென்றும் அதே வீரியத்தோடுதான் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பசித்தால் மட்டுமே உணவு, அதுவும் இயற்கை உணவு; அதையும் கொஞ்சம் கொஞ்சமாக உமிழ்நீரோடு சேர்த்து ரசித்து மென்று சாப்பிட்டால் எப்படி வரும் வியாதி? எல்லாமே கலைதான்!

நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.

2. பல நாடுகளில் கார்லிக்சு மற்றும் காம்பிளான் போன்ற பொருள்களுக்கு தடை உள்ளதே ஏன் இங்கு இல்லை?

கார்லிக்சு, காம்பிளான் போன்ற சத்துமாவுகள் என்ற விளம்பரத்தோடு, விற்பனை செய்யப்படும் பொருட்கள் “தேவையற்ற மருந்துகள்” (Non Essential Drugs) என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததால் மக்கள் நலனில் அக்கறை கொண்ட சில நாடுகளில், இப்பொருட்களின் விற்பனை தடை செய்யப்பட்டிருக்கிறது.

இப்பொருட்களை உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்களின் நலனில் அக்கறை கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் இவற்றின் விற்பனை தடை செய்யப்படவில்லை. கார்லிக்சைவிட கேழ்வரகுக் கூழ் குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த சத்துணவு என்பதே உண்மை.

3. சித்தா, ஆயுர்வேதம் போன்ற பிற மருத்துவ முறைகளை எந்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்தலாம், அலோபதியை எந்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்தலாம்?

அனைத்து நோய்களையும் முற்றிலும் குணப்படுத்தும் ஒற்றை மருத்துவ முறை என்பது இல்லை. சித்தா எப்படி தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையோ, அதைப்போல இந்தியாவின் பிற பகுதிகளில் ஆயுர்வேதம் பாரம்பரிய மருத்துவ முறை, ஐரோப்பிய நாடுகளில் அல்லோபதி(ஆங்கில), ஓமியோபதி மருத்துவ முறைகள் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன.

அரசு அந்தந்த மருத்துவ முறைகளைக் கையாளும் திறமையான, நேர்மையான, சமூக அக்கறையுள்ள மருத்துவர்களைக் கொண்ட ஆய்வுக்குழு அமைத்து, ஒவ்வொரு நோய்க்கும் சிறந்த தீர்வளிக்கும் மருத்துவமுறை எது என்பதைப் பற்றிய ஆய்வறிக்கை பெற்று அதை மக்களுக்கு அறிவித்து, அது முறையாக நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்பதையும் உறுதி செய்யவேண்டும்.

எனது அனுபவத்தில் புற்றுநோய், அறுவை சிகிச்சையால்  அகற்றப்படவேண்டிய கட்டிகள், மாரடைப்பு, கிருமிகளால் ஏற்படும் நோய்கள், உடலிலிருந்து நீர்ச்சத்து இழப்பு ஏற்படுத்தும் வயிற்றுப்போக்கு , வாந்தி, திடீர் இரத்த இழப்பு போன்றவற்றிற்கு ஆங்கில மருத்துவமே சரியானது. இதேபோல் எந்தெந்த நோய்களுக்கு சித்த மருத்துவம் சிறந்த தீர்வினைத் தரும் என்பதை அத்துறை சார்ந்த மருத்துவர்கள்தான் சொல்லமுடியும்.

4. பெருவாரியான மருந்துகளில் பக்க விளைவுகள் ஏற்படுவதாக செய்திகள் வருகிறதே அதனை பற்றி…

எல்லா ஆங்கில மருந்துகளும்  பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையே. இதன் அடிப்படையில் எந்த நோயாளிக்கு குறிப்பிட்ட மருந்தைப் பயன்படுத்தக் கூடாது என்பதை மருத்துவர் அறிந்திருக்க வேண்டும். பக்க விளைவுகளில் சில தாங்கக்கூடியவை. சில உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. சில பக்கவிளைவுகள் 100க்கு 10 பேரை, பாதிக்கக்கூடும்.

சில 1000ல் ஒருவரை சில 10000ல் ஒருவரைத்தான் பாதிக்கும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து என்ன பக்க விளைவுகளை உண்டாக்கக் கூடும், அதை எப்படி கண்டறிவது, உடனே என்ன செய்யவேண்டும் என்பதை நோயாளிக்கு தெரியப்படுத்தவேண்டும். ஒரு நோயாளிக்கு நோயால் பாதிப்பு ஏற்படலாம். ஆனால், மருத்துவர் கொடுக்கும் மருந்தினால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பது ஆங்கில மருத்துவ அடிப்படை நூல் ஒன்றில் நான் படித்தது.

5. குடும்ப மருத்துவர் என்பது ஏற்புடையதா, இல்லை அந்தந்த சிறப்பு மருத்துவரை அணுகுவது ஏற்புடையதா?

குடும்ப மருத்துவர் முறை மிகச் சிறந்தது. ஏனென்றால் நோய்களைப் பற்றியும், மருத்துவ படிப்புகள் பற்றியும் குறைந்தபட்ச விழிப்புணர்வு படித்தவர்களிடம்கூட இல்லாத தற்போதைய நிலையில், எந்த நோய்க்கு யாரை அணுகவேண்டும் என்பது நோயாளிகளுக்கு தெரியவில்லை. பல மருத்துவர்களும் நோயாளிகளுக்கு சரியாக வழிகாட்டுவதில்லை. எனவே நம்பிக்கையான குடும்ப மருத்துவர் சாதாரண நோய்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சையளிப்பார். குறிப்பிட்ட நாட்களுக்குள் நோய் சரியாகவில்லை என்றால் அந்த நோய்க்கான சிறப்பு மருத்துவரைப் பார்க்க பரிந்துரைப்பார்.

நோயின் தன்மையைப் பொருத்து ஆரம்ப நிலையிலேயேகூட அதற்கான சரியான சிறப்பு மருத்துவருக்கு பரிந்துரைப்பார். தொடர்ந்து ஒரு குடும்ப மருத்துவரிடம் சிகிச்சை பெற்றால் , அந்த நோயாளிக்கு உள்ள அடிப்படை நோய்கள், அவருக்கு எந்த மருந்து ஒத்துக்கொள்ளும், எது ஒத்துக்கொள்ளாது என்பதை குடும்ப மருத்துவர் அறிந்திருப்பார். எல்லாவற்றுக்கும் மேலாக, தொடர்ந்து தொடர்பில் இருப்பதால், நோயாளியின் உடல்நலத்தின்மீது குடும்ப மருத்துவருக்கு அதிகபட்ச பொறுப்புணர்வு இருக்கும். ஒருசில உயிர்காக்கும் அவசர சிகிச்சை தேவைப்படும் சந்தர்ப்பங்களில் சிறப்பு மருத்துவரை நேரடியாக அணுகலாம்.

Leave a Reply