Home>>கட்டுரைகள்>>கருவை கூட கலைக்கும் சீமை கருவை
கட்டுரைகள்சுற்றுசூழல்தமிழ்நாடு

கருவை கூட கலைக்கும் சீமை கருவை

மரங்களில் பேய் இருப்பதாக சொல்லுவதுண்டு. ஆனால் அந்த மரமே பேயாக இருப்பதை பார்த்திருக்கிறோமா? அந்த பேய்களுக்கு மத்தியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேலி காத்தான், வேலி கருவை, முற்செடி என்றெல்லாம் அழைக்கப்படும் சீமை கருவேல மரத்தை தான் சொல்கிறேன். இது வேலி காத்தான் அல்ல வேளாண்மை சாத்தான்.

பசுமை புரட்சி என்ற பெருங்குற்றத்தின் முக்கிய குற்றம் இந்த சீமை கருவேல மரம். கரீபியன் தீவுகளில், அமெரிக்கா கண்டத்தில், மெக்ஸிகோ, பல்கேரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் காணப்பட்ட இந்த விஷ மரம் எப்படி இந்தியாவுக்கு வந்தது. விறகு வெட்ட பயன்படும் என்று சொல்லி 1960, 70களில் வானூர்தி (helicopter) மூலமாக சீமை கருவை விதைகள் இந்தியாவில் தூவப்பட்டன.

தூவப்படுவது விதைகள் அல்ல, சப்பானில் வீசப்பட்டதை விட ஆபத்தான அணுகுண்டுகள் என்பது அப்போது மக்களுக்கு தெரியவில்லை. ஆனால் வீசியவனுக்கும், வீசுவதற்கு அனுமதித்தவனுக்கும் தெரிந்தே இருந்தது. நம் நீர்வளத்தை கெடுத்து, வேளாண்மையை சிதைத்து, விவசாயியை அழித்து நிலங்களை கையகப் படுத்துவதே வீசப்பட்டதன் நோக்கம்.

சீமை கருவேல மரம் பூமிக்கு மேலே வளர்வது என்னவோ 12 அடி தான். ஆனால் அதன் வேர்கள் 100 அடிக்கும் மேலாக ஆழமாக வளர்ந்து செல்ல கூடியவை. ஆணி வேறை போன்று துணை வேர்களும் அழுத்தமாக இருக்கும். இதன் வேர்கள் நிலத்தில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சு எடுத்து விடும். நிலத்தடி நீர் குறைந்துகொண்டே போகும். இதன் தண்ணீர் பசி அருகில் இருக்கும் மரங்களுக்கு தண்ணீர் கொடுக்காது.

இதன் அருகில் எந்த சிறு தாவரங்களும் வளராது. இதன் வருகைக்கு பிறகு பல மூலிகை செடிகள் அழிந்திருக்கிறது. நிலத்தில் இருக்கும் அணைத்து சத்துக்களையும் உறிஞ்சு மண்ணை மலடாக்கும். பூமி வெப்பமடையும். நிலத்தடி நீரை உறிஞ்சுவதோடு மட்டும் அல்லாமல் காற்றில் இருக்கும் ஈர பதத்தையும் உறிஞ்சு விடும். இதன் விளைவாக அனல் காற்று அதிகரிக்கும், மழை பொழிவு குறையும். இம்மரங்கள் ஈசானி மூலையில் (வட கிழக்கு) கூடும் மேகங்களை கலைத்து மழையை தடுத்து நிறுத்தக் கூடியவை.

மிகுந்த வெப்பமான இந்த மரங்களில் பறவைகள் கூட கூடு கட்டாது. வேடந்தாங்கல் சரணாலயத்தில் இம்மரங்கள் பரவியதால் பல பறவைகள் செத்து விழுந்தன. பிறகு அதை முற்றிலுமாக அழித்தார்கள். இதன் காய்களை, விதைகளை உண்ணும் கால்நடைகளுக்கு வயிற்று கோளாறுகளும் பற்கள் தேய்மானமும் ஏற்படுகின்றது. இதன் அருகில் இருக்கும் கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது.

அதன் குட்டிகளும் ஊனமாக பிறக்கிறது. விலங்குகள் மட்டும் அல்ல மனிதர்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது. பெண்களுக்கு கரு கலையும் அபாயமும் இருக்கிறது. இதன் அருகில் குடி இருக்கும் பெரியோர்களுக்கு குழந்தைகளுக்கும் மூர்க்கத்தனமும் முரட்டுத்தனமும் அதிகரிக்கிறது. மேலும் உடம்பில் இருக்கும் நீர்ச்சத்தையும் எண்ணெய் பிசுபிசுப்பையும் உறிஞ்சு விடுகிறது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.

சீமை கருவை பூக்களில் இருந்து தேனீக்கள் தேன் எடுப்பதால் சுத்தமான தேன் கிடைப்பதே இல்லை என்பது பெரும் அதிர்ச்சி. அதனால் தான் குழந்தைகளுக்கு தேன் கொடுத்தால் சளி பிடிக்கிறது. அதனால் இந்த காலத்து பெற்றோர்கள் தேன் கொடுப்பதையே நிறுத்திவிட்டார்கள்.

விறகு பயன்பாடு என்று சொல்லி தான் இந்த மரம் இங்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இது விறகு அல்ல, பெண்களுக்கான சிகரெட். இதை விறகெரிக்கும் போது அதன் ஒரு சிறு கட்டையில் இருந்து வரும் புகை 14 சிகரெட் பிடித்ததற்கு சமம் என்று ஆய்வு சொல்கிறது. இந்த மரத்தின் புகையை சுவாசித்தால் புற்று நோய் கூட ஏற்படும். மேலும் ஆஸ்துமா, தோல் நோய்கள், நிரம்பு பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

“ஆழம் வேலம் பல்லுக்குறுதி” என்று சொல்லுவார்கள். அதில் வேலம் என்பது நமது நாட்டு கருவேல மரத்தை குறிக்கிறது. பல்லுக்கு உறுதி கொடுத்த, பல நோய்களுக்கு மருந்தாக பயன்பட்ட, மூலிகை தன்மை கொண்ட மகத்தான நம் நாட்டு கருவேல மரத்தின் பெயரை நீர்வளத்தை கெடுக்கும், நிலத்தை சிதைக்கும், சுற்று சூழலை மாசு படுத்தும், கரி காற்று (carbon-di-oxide) அதிகம் வெளியிடும், ஆண்மையின்மை உண்டாக்கும், கருவையே கூட கலைக்கும் இந்த மோசமான கருவைக்கு வைத்தது பெரும் பாவச்செயல். தற்போது சீமை கருவேல மரம் நாடெங்கும் வளர்ந்து கிடக்கிறது. நாட்டு கருவேல மரம் கண்ணில் தென்படுவதே இல்லை.

சீமை கருவேல மரங்களில் காய்கள் மண்ணில் விழுந்துகொண்டே இருக்கிறது. 5 வருடங்களுக்கு அவை மண்ணில் மக்காது. பிற மரங்களின் வளர்ச்சியை தடுக்கும் சீமை கருவை தனது விதைகளையும் வளர விடாது. பெரும் மரங்களை அகற்றினால் மண்ணில் கிடக்கும் அதன் விதைகள் மீண்டும் முளைக்கும். அதை தடுக்க ஒரே வழி அகற்றப்பட்ட இடத்தில நமது நாட்டு மரங்களை வைத்து 5 ஆண்டுகள் பராமரித்தால் சீமை கருவை அடியோடு அழிக்கப்படும்.

எந்த ஒரு அரசாங்கமுமே இதை அகற்ற முன் வராது. மக்கள் நாம் தான் முன் வர வேண்டும். கேரளாவில் மக்கள் விழிப்புணர்வு தான் அரசாங்கத்தை முன் வர வைத்தது. விளைவு கேரளாவில் சீமை கருவை முற்றிலுமாக அழிக்க பட்டுவிட்டது. கேரளா அழகின் ரகசியம் இது தான்.

சீமை கருவேல மரங்களை
அழிப்போம்!

நாட்டு கருவேல மரங்களை
வளர்ப்போம்!


– நிரஞ்சன்,
மன்னார்குடி
(2051 ஆவணி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)

Leave a Reply