Home>>கவிதை>>கோடை வெயில்
கவிதை

கோடை வெயில்

கோடை வெயில்
தாங்க முடியவில்லை
என்று எங்கெங்கும் மானுட புலம்பல்…
பனி, மழை, இரவு, வசந்தம் என இவற்றை மட்டுமே கவிதை வடிக்கும் கவிஞர்களால், கதிரவன் அடைந்த கோபம் தான்
இந்த வெயில்!

பள்ளி  விடுமுறை நாட்களில் கோடையென்றால்
கொண்டாட்டம் தான்…!
அப்பாவிடம் ஏற்கனவே போட்ட ஒப்பந்தப்படி
சென்று வருவோம்
குற்றாலம், கொடைக்கானல், ஊட்டி, ஆழியாறு, தேக்கடி என..!

உச்சி வெயிலில்
மதியம் சாப்பிட்ட பின்பு….
வேப்ப மரத்தின் அடியில்
கயிற்று கட்டிலில்  –
படுத்து தூங்கும் சுகம்!

பனை விசிறி
வீசியப்படியே ..?
மாலையில் –
தெரு பஞ்சாயத்து பேசும் அப்பா!

ஞாயிற்றுக் கிழமை ஆனால்,
அப்பாவோடு வயலுக்கு சென்று
இளநீர் குடித்து ஆழ் குழாய் நீரில்
குளித்து வீட்டுக்கு வந்தால்,
அம்மியில் அரைத்து,
அம்மா வைத்த அயிர
மீன் குழம்பு!
ஐந்து முறை சாப்பிட்ட
நினைவுகள்.

கோடையில் வற்றிய  வாய்க்காலில்
பள்ளம் தோண்டி சுத்தமான ஊற்று நீரை குடித்து மகிழ்ந்த தருணங்கள்.

இளமையில் கோடையில்

கிராமங்களில் நாம் வாழ்ந்த வீடுகள், வெயிலை சாட ஒருபோதும் காரணமாக இருக்கவில்லை.

எல்லாம் இருந்தும் இந்த நகரம்தான்
ஒவ்வொரு கோடையிலும்,
கூடும் வெயிலின் கொடுமையில்
நமக்கு சொல்கிறது,
நாம்  சுகமாய் வாழ,
நாம் அஞ்சாமல்  அழித்த,
அத்தனை இயற்கை பசுமைகளின் சாபமே
இந்த வெயில்….!


  – —முனைவர் சா.சம்பத், மன்னார்குடி.
(2050 சித்திரை மாத மின்னிதழிலிருந்து)

 

Leave a Reply