உன்னைக் கொண்டதிலிருந்து
நடுயாமத்தைத் தாண்டியும்
உயிர்த்திருக்கிற
எல்லா இரவுகளிலும்
பௌர்ணமியோடு கூடி
ஆழப்புணர்ந்து சில்லிடுகிறாய்
பனிக்காற்றின் கூரிய
விரல்முனைகளால்
என்வசம் நீ!
*
தனிமையில் இரசித்துக்கொண்டிருக்கும்
பெருங்கடல் அலைகள் மேல்
துள்ளி விளையாடுகிறாய்
மீன்களைப்போல்
குறும்புகளால் நீ…
வீட்டிற்குவந்து
கை கால் முகம்கழுவி
அறைக்குள் முடங்குகையில்
தூங்கவிடாமல்
விழுங்கிக் கொண்டிருக்கின்றன
ஆந்தைகளும் நரிகளும்
வௌவால்களும் அலைந்திசைக்கும்
உன் விழிப்புணர்ந்த
தாக்குதல்கள்!
*
நாளைமுதல் நிச்சயம்
வாய்க்கப்போவதில்லை
இதயம் தகர்த்து வீழ்த்தும்
உன் அலங்கரித்த வருகை….
குழந்தை மொழிகளால்
கொலுசொலி சிணுங்களால்
செல்ல சண்டைகளால்
செவ்வாய் சுழிப்புகளால்
நேய சுடரொளி மின்னி
நீ அமர்ந்திருக்கும் இருக்கையில்
உன்னைக் காணாமல்
ஏங்கும் என் விழிகள்
விரைவில் பார்வையற்றுப் பட்டும் போகலாம் …
நிலவில்லா இரவாய்
நிழலில்லா சாலையாய்
மலரில்லா வனமாய்
மழையில்லா நிலமாய்
மனமின்றி அழியப்போகிறேன்
நீயற்ற நரக அறைக்குள்
நடைபிணமாய் நான்!
—பொன்.தெய்வா, ஐவேலி.
(2050 சித்திரை மாத மின்னிதழிலிருந்து)