— விஜயவர்மன், மன்னார்குடி
(2051 ஆனி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)
“நாங்கள் அழியும் தருணம், உங்களையும் கூட்டி செல்வோம் – இப்படிக்கு தேனீக்கள்”
என்ற வாசகம் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவத்தை பறை சாற்றுகிறது. மனிதர்கள் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கு உணவு – பூச்சிகளின் மகரந்த சேர்க்கை மூலமே கிடைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தேனீ – விவசாயிகளின் தோழன் என்ற வாசகத்தை பெரும்பாலும் அனைவரும் அறிந்திருப்போம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தேனீக்களை கடைசியாக எங்கே பார்த்தோம் என நினைவிருக்கிறதா? சிலர் அவ்வாறான தேனீ கூடுகளை பார்த்து பல வருடங்கள் இருக்கலாம்.
மனிதர்களுக்கு அடுத்து அதிகம் ஆராய்ச்சி செய்யப்பட்ட உயிரினம் தேனீ என்பதை அறிந்த பொழுது எனக்கு சற்று வியப்பு தான். தமிழகம் – புதுச்சேரி எல்லையில் கடலூர் – பண்ரூட்டி செல்லும் வழிக்கு அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்திற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்ற பின் அவ்வாறான ஆராய்ச்சிகளின் காரணம் புரிந்தது.
தேனீக்களின் கூடு ஒரு தனி அரசாங்கம்; நம் அரசியல் அமைப்பில் உள்ளது போல் மந்திரிகள், அமைச்சர்கள், சட்ட சபை உறுப்பினர்கள் எனத் தனித் தனி அந்தஸ்து எல்லாம் கிடையாது. ஓராயிரம் தேனீக்கள் சேர்ந்து ஒரு கூட்டினுள் வசிக்கிறது எனில் ஓரே ஒரு ராணி, சில ஆண் தேனீக்கள் மற்ற பல நூறு பெண் தேனீக்கள் (அனைத்தும் தொழிலாளி தேனீக்கள்).
ஏதேனும், சூழ்நிலையில் அந்த ராணி தேனீ இறந்துவிட்டால், தங்களுக்குள் வலிமையான பெண் தேனீ ஒன்றை தேர்வு செய்து அதனை ராணியாக ஏற்று கொள்வார்கள். பல நூறு தேனீக்களிலும், ராணி தேனீ மட்டும் கொஞ்சம் தடிமனாக, வலுவான தேனீயாக இருக்கும். ஏனெனில், இங்கு இனப்பெருக்கம் செய்வது ராணி தேனீயுடைய கடமை.
நாம் அங்காடிக்கு சென்று 2 தேன் பாட்டில்களை வாங்கி வருகிறோம்; பெரும்பாலும் அவை இரண்டின் சுவையிலும் சிறு மாறுதல்களைக் கூட காண இயலாது. ஆனால், நிதர்சனத்தில் ஒவ்வொரு தேன் கூடுகளில் (தேன் பெட்டிகளில்) உள்ள தேனின் சுவையும் மாறுபடும். வேப்ப மரங்கள் நிறைந்த பகுதியாய் இருப்பின், அதில் கசப்பு சுவை கலந்திருக்கும்.
தேனீக்களின் வசிப்பிடத்தில் உள்ள மரங்களும், அவற்றில் பூக்கும் பூக்களின் வகைகளை வைத்தே தேனின் சுவையில் மாறுதல்கள் ஏற்படும். ஒவ்வொரு தேனீயின் ஆயுட்காலம் 60 நாட்கள்; முதல் 15 நாட்கள் கூட்டினை பராமரித்தல், 16-20 நாட்கள் கூட்டிற்குள் வேறு உயிரினங்கள் புகாதவாறு படை வீரர்களாக செயல்படுதல்; 21-60 நாட்கள் உணவு சேகரிப்பு; 61 வது நாள் மரணம் என தனது வாழ்நாளை, தான் வசிக்கும் இடத்தை பலப்படுத்துவதில் அக்கறை காட்டுகின்றது இந்த உயிரினம்.
இரண்டு அடுக்குகள் கொண்ட பெட்டியில், தேனீக்களை வளர்ப்பது சுலபம். கீழ்தட்டு – ‘புரூட் பெட்டி’ எனவும், மேல் தட்டு ‘சூப்பர் பெட்டி’ எனவும் அழைக்கப்படுகிறது. கீழ் தளத்தை தேனீக்களின் உணவுக்காக வைத்து விட்டு, மேல் தட்டில் மட்டும் தேனை எடுத்து வியாபாரம் செய்கின்றனர், தேனீ வளர்ப்பாளர்கள்.
ஒரு பெட்டிக்கு 4 முதல் 5 சட்டங்கள் வரை வைக்கலாம். ஒவ்வொரு சட்டத்திற்கு நடுவிலும் உள்ள பகுதியில் தேனீக்கள் அறுகோண வடிவில் (Hexagon) தங்கள் கூடுகளை அமைத்து கொள்ளும். இந்த அறுகோண வடிவ கட்டுமானம் மிக பலம் வாய்ந்த கட்டுமான முறையாக இன்றும் கருதப்படுகின்றது.
தேனீ வளர்ப்பாளர்கள் தேன் விற்பனை செய்வதோடு மட்டுமின்றி, இது போன்ற பெட்டிகள் விற்பனை, தேனீக்கள் விற்பனை என தங்களால் இயன்ற வழியில் இந்த தொழிலை லாபகரமாக மாற்றி வருகின்றனர். ஒரு பெட்டியை தேனீக்களுடன் இடம் பெயர்தல் செய்யும் பொழுது அதில் ராணி தேனீயின் இருப்பை உறுதி செய்வது, இரவு நேரங்களில் மட்டுமே இடம் பெயர்தலை மேற்கோள்வது என தேனீக்களின் வாழ்க்கை முறையினை அறிந்து அதற்கேற்ப பல சூத்திரங்களை கையாளுகின்றனர்.
தேனீ வளர்ப்பில் ஆர்வம் உடையவர்கள், அதனை பற்றி அரிய விரும்புபவர்கள் ஒரு நாள் பயிற்சி வகுப்பிற்கு சென்று அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம். நான் சென்ற பொழுது பயிற்சி கட்டணம் ₹500 ஆக இருந்தது; கிராமத்து மதிய உணவு, ஒரு நாள் முழுவதும் தேனீக்களுடன் வகுப்பு என வித்தியாசமான அனுபவம்.
விருப்பமுள்ளவர்கள் Google Map செயலியில் ‘SKM Natural Honey’ என்று தேடினால், அதற்கான தகவல் கிடைக்கும். வாய்ப்பிருந்தால் ஒரு முறை சென்று வாருங்கள்!
—
படஉதவி: @borisworkshop