Home>>அரசியல்>>கனடா மொன்றியலில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் 35 வது நினைவேந்தல்
கனடா மொன்றியலில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் 35 வது நினைவேந்தல்
அரசியல்ஈழம்உலகம்கட்டுரைகள்கனடாசெய்திகள்தமிழர்கள்

கனடா மொன்றியலில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் 35 வது நினைவேந்தல்

ஆயுத முறையில் மட்டுமல்ல அகிம்சை வழியிலும் உச்சத்தைத் தொடும் உறுதியான போராட்டத்தை எங்களால் முன்னெடுக்க முடியும் என உலகுக்கு காட்டிய ஒரு உன்னத உயிர்த்தியாக போராட்டம், ஒரு சொட்டுத் தண்ணீரும் அருந்தாமல் உறுதியோடு உயிரை மண்ணுக்கும் மக்களுக்கும் அர்ப்பணித்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் உண்ணாவிரதப் போராட்டம். திலீபன் அண்ணாவின் உயிர் பிரிந்து முப்பத்தி ஐந்து ஆண்டுகள் ஆனபோதிலும் “பார்த்திபன் இன்னும் பசியோடு தான் இருக்கிறார்” என்றுதான் எம்மால் கூறமுடிவது காலக்கொடுமை.

இருப்பினும் அந்த தியாகச்சுடர் இன்னும் எனக்கு வழிகாட்டி கொண்டுதான் இருக்கிறது. தியாக தீபம் லெப்.கேணல் திலீபன்அண்ணாவின் 35 வது நினைவேந்தல் ஞாயிற்றுக்கிழமை 25,செப்டம்பர் 2022 மாலை 6 மணிமுதல் 9 மணி வரை Forest Village Condominium,457 Spring Garden St, Dollard-Des Ormeaux, Quebec H9B 1T2 என்ற முகவரியில் ஒழுங்கு செய்யப்பட்டு நடந்து முடிந்தது.

கனடா கொடி வணக்கத்துடன் தொடங்கி, கியூபெக் கொடி வணக்கம் மற்றும் தமிழீழ தேசிய கொடி வணக்கம் ஆகியவற்றோடு நிகழ்வு தொடங்கியது. மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உயிர் நீத்த மண்ணின் மைந்தர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர்வணக்கம் நிகழ்வு தொடங்கியது.இதில் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உயிர் நீத்த 2ஆம் லெப் சேது அவர்களின் குடும்ப உறுப்பினர் திருமதி வரலட்சுமி பிரதாபன் அவர்களால் ஈகை தீப சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் தொடங்கி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சந்திரன் மலரஞ்சலி செலுத்தி நினைவேந்தலை தொடங்கி வைத்தார்.அதனையொட்டி நூற்றுக்கும் அதிகமான தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் பற்றுக் கொண்ட உணர்வாளர்கள் கலந்து கொண்டு தியாக தீபத்துக்கு மலர் மரியாதை செலுத்தினர். அம்சியா தவபாலன் அவர்கள் தியாக தீபம் திலீபன் அண்ணாவிற்கு தனது புரட்சி பாடலால் காணிக்கை செய்தார்.

திருமதி நிலா அவர்கள் உணர்ச்சிமிக்க கவிதை ஒன்றை வாசிக்க அனைவரின் கண்களும் கலங்கியது. அதனை தொடர்ந்து இளவரசி இளங்கோவன் சிற்றுரை, திரு.ஜாம்சன் சகோதரர் , திரு. தவபாலன் ஆகியோர் கவிதைகளை வழங்கினர் .நிறைவுரை அம்சியா தவபாலன் அவர்கள் வாசிக்க “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்”என்ற பாடலுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது

இவ்விதமாக மொன்றியல் நகரில் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல் நடந்து முடிந்தது. மிக வருந்தத்தக்க ஒரு விடயம் மொன்றியலில் நடைபெறும் மிகப்பெரிய தனிமனித விழாக்களுக்கும் ,கொண்டாட்டங்களுக்கும் மக்கள் கொடுக்கும் ஆதரவும் , முக்கியத்துவமும் உண்மை கதாநாயகர்கள் உயிர்த்தியாகம் செய்த உன்னதமானவர்களுக்கும் கொடுக்க தவறியது வருத்தத்திற்குரியது. இனிவரும் காலங்களில் இவ்வாறு நடைபெறாமல் விழிப்போடு இருக்கவேண்டும் என மனம் ஏங்குகிறது. திலீபன் அண்ணா இறக்கவில்லை. அவருடைய ஆயுள் நாம் அவரைப் பற்றி பேசும் பொழுதும், வரலாறு கடத்தப்படும் வரையிலும் நீட்டிக்கப்படும்.

செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன்
மொன்றியல் ,கனடா

Leave a Reply