இந்த தலைப்பை படிக்கும் போது, என்னடா போன சூன் மாதம் தான், எல்லாரும் மன அழுத்ததை பற்றி இணையதளத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார்கள், இப்போ மறுபடியுமா என்று உங்களுக்கு யோசிக்க கூடும்?
சில விடயங்கள் நாம் எத்தனை முறை படிக்கிறோம், எத்தனை முறை பார்க்கிறோம் என்பது முக்கியம் அல்ல, நாம் அந்த விடயத்தை புரிந்து கொண்டு செயல்படுத்துகிறோமா என்பதுதான் முக்கியம்.
நான் தலைப்புக்குள் போகும் முன்பு சில வார்த்தைகளுக்கான பொருளைப் புரிந்து கொள்வோம்.
துக்கம் என்றால் என்ன?
இதற்கு ஆங்கிலத்தில் grief, sorrow என்று பொருள். உதாரணமாக நமக்கு நெருக்கமானவர் இறந்து விட்டால் நாம் மிகவும் துக்கத்தில் ஆழ்வோம். துக்கம் சிறிது காலம் வரை நீடிக்கும். ஒருவர் துக்கம் கொண்டாலும், அவர்களால் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த இயலும். ஆனால் துக்கம் அதிகமானால், அது மன அழுத்தத்திற்கு வழி வகுக்கும்.
சோகம் (Sad) என்றால் என்ன?
சோகம், என்பது ஒரு விதமான உணர்ச்சி வலி ஆகும். இது துக்கம், ஏமாற்றம், இழப்பு என்ற உணர்வுகளோடு சமந்தப்பட்டவை. சோகம் அதிகமானால், அது மன அழுத்தத்திற்கு வழி வகுக்கும். சோகமாக இருக்கும் நபர் தம்மை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக்கொள்வர். இவர் எப்போதும் சோம்பலாகவும், எந்த ஒரு விடயத்திலும் ஈடுபாடு காட்ட மாட்டார்கள். சில நேரம் தனியாக அழுக செய்வார்கள்.
மன அழுத்தம் என்றால் என்ன?
மன அழுத்தத்ததை தான் நாம் ஆங்கிலத்தில் Depression என்று கூறுகிறோம். என்னுடய தனிப்பட்ட அனுபவத்தில், இந்த மனஅழுத்தம் புற்றுநோயை விட கொடிய விசம் ஆகும். நாம் மேலே கண்ட துக்கம், ஏமாற்றம், இழப்பு, விரக்தி இவை அதிகமானால் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்.
சோகம், துக்கம், நம்பிக்கையின்மை நம் வாழ்வில் ஒரு பகுதிதான். ஆனால் நாம் நாள் முழுக்க, மாத கணக்கில் சோகத்துடனும், துக்கத்துடனும் இருந்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுவோம்.
மன அழுத்ததினால் ஒருவருடய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். அவர்களுடய மனதிலும், மூளையிலும், மன அழுத்தத்திற்கு காரணமான அந்த ஒரே சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். உங்களிடம் நன்றாக பேசிக்கொண்டு இருப்பதாக தோன்றும், ஆனால் அவர்கள் மனதிலும், மூளையிலும் வேறொரு சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். இவர்கள் தனிமையில் அழுது கொண்டே இருப்பார்கள். நீங்கள் சொல்லலாம், அழுதால் மனத்தில் உள்ள பாரம் குறையும் என்று. ஆனால் இவர்களுக்கு மனத்தில் உள்ள பாரம் அப்போது தான் அதிகரிக்கும். இவையெல்லாம் அவர்கள் தனி ஒருவர் அனுபவிக்கும் வேதனைகள், நம்மால் பார்க்கஇயலாத ஒன்று ஆகும்.
மன அழுத்தத்தின் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்:
- மனநிலை வேறுபாடுகள் – அதிக கோவம், தாக்கும் மனப்பான்மை, எல்லாவற்றிற்கும் எரிச்சல் படுதல், பதட்டம், ஓய்வின்மை .
- உணர்ச்சி நல்வாழ்வு – சோகம், நம்பிக்கையின்மை , எப்போதும் வெறுமையாக (feeling empty or void) உணர்தல்.
- நடத்தையில் மாற்றம் – எதிலும் ஆர்வம் இல்லாமல் இருத்தல், பிடித்த விடயத்தில் இன்பம் உணராமல் இருத்தல் (உதாரணமாக, பிடித்த பாட்டை கேட்பதில் கூட எரிச்சல் ஏற்படும்), எளிதில் சோர்வாக உணர்தல், குடிபழக்கம், மயக்க மருந்து பயன்படுத்துதல், தற்கொலை எண்ணம், தன்னை தானே வருத்திக்கொள்ளுதல்
- பாலியல் ஆர்வம் – பாலியல் ஆசை குறைதல், பாலியல் செயல் திறன் இல்லாமல் இருத்தல்.
- அறிவாற்றல் திறன்கள் – ஒரு விடயத்தில் கவனம் செலுத்த இயலாமல் போகுதல், பணிகளை முடிப்பதில் சிரமம் ஏற்படுதல், உரையாடல்களின் போது தாமதமான பதில்கள் (அறிவாற்றல் திறன் குறைபாடு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் – ஆண், பெண் இருவரிடமும் காணலாம். ஆம், சிறு குழந்தைகள் கூட மன அழுத்ததினால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் மதிப்பெண்கள் கூட இதனால் குறையும்).
- தூக்க முறைகள் – தூக்கமின்மை (insomnia), அமைதியற்ற தூக்கம், அதிக தூக்கம், இரவு முழுவதும் தூங்காமல் இருத்தல்.
- உடல் நலம் – சோர்வு, தலைவலி, செரிமான பிரச்சனைகள், கூடுதலாக பெண்களுக்கு பசியின்மை மற்றும் உடல் பருமனில் மாற்றம் ஏற்படும்.
நாம் மேலே மன அழுத்தத்திற்கான அறிகுறிகளைப் பார்த்துவிட்டோம். இனி மன அழுத்தத்திற்கான காரணங்களை பார்ப்போம்.
மன அழுத்தத்திற்கான காரணங்கள் ஏராளமாக உள்ளன. நாம் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
- சிறு குழந்தைகள் கூட மன அழுத்தத்திற்கு பலி ஆகிறார்கள். ஓடி விளையாடும் வயதில், சாதிக்க நினைக்கும் வயதில், ஓடும் பாம்பை கையில் பிடிக்க நினைக்கும் வயதில் அவர்களுக்கு ஏன் மன அழுத்தம் ஏற்படுகிறது?சில பெற்றோர்கள் தன் குழந்தையை மற்றொரு குழந்தையோடு ஒப்பிடும் காரணத்தினால் தான். அது மட்டுமில்லாமல் அவர்களை அவர்கள் விருப்பபடி படிக்க விடாமல் பெற்றோரின் ஆசையை தன் குழந்தைகள் மீது திணிக்கும் காரணத்தினால் தான். பெற்றோர்கள் என்றாவது யோசித்து இருக்கிறீர்களா? நீங்கள் உங்களுக்கு பிடித்த தொழிலை, உங்களுக்கு பிடித்த அல்லது தெரிந்த வேலையை செய்கிறீர்களா? உங்களுக்கு செய்யவே தெரியாத வேலையை உங்களால் செய்ய இயலுமா ? முடியாது இல்லையா? பிறகு ஏன், உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் திணிக்கிறார்கள்? இதனால் சில குழந்தைகள் அவர்கள் விரும்பியதை செய்ய முடியாமலும், தன் பெற்றோர் ஆசையை நிறைவேற்ற முடியாமலும் மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள். மேலும் சில குழந்தைகள், பொது தேர்வில் மற்றும் நுழைவு தேர்வில் போதிய மதிப்பெண் எடுக்க முடியாத காரணத்தினால் மன அழுத்தம் கொண்டு தற்கொலை செய்கிறார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு, நீ முதல் மதிப்பெண் எடுத்தால், செல்போன் வாங்கி தருவேன் என்று சொல்வதைவிட, நீ விடாமுயற்சியுடன் படி. எந்த மதிப்பெண் வாங்கினாலும் கவலை இல்லை. விடாமுயற்சியுடன் மட்டும் படித்தால் செல்போன் வாங்கி தருவேன் என்று சொல்லி பாருங்கள், உங்கள் குழந்தைகள் கவலை இல்லாமல் படிப்பார்கள்.
- கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, வேலை கிடைக்காமல், வேலை தேடும் பட்டதாரிக்கு ஏற்கெனவே தான் படித்து முடித்து பெற்றோர் பணத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம், இன்னும் வேலை கிடைக்கவில்லை என்ற மன அழுத்தம் இருக்கும், அவர்களிடம் சிலர் வேலை இல்லாத காரணத்தினால் அவர்களின் திறமையை குறைவாக எண்ணி, இழிவுப்படுத்துவார்கள் நம் மக்கள். இது அந்த வேலை இல்லாத பட்டதாரிக்கு மேலும் மன அழுத்ததை அதிகரிக்க செய்கிறது.
- பிறகு குடும்பத்தில், கணவன் மனைவி இருவருக்கும் புரிதல் இல்லாத காரணத்தினால், கடன் தொல்லையால், சிலருக்கு உறவினர்கள் இழிவுப்படுத்தும் காரணத்தினால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதுவே விவாகரத்துக்கு வழி வகுக்கிறது. இது எல்லாம் ஒரு பிரச்சனையா என்று நினைப்பவர்கள் தப்பி விடுவார்கள், இதுதான் பெரிய பிரச்சனை என்று நினைப்பவர்கள் அவதிப்படுகிறார்கள்.
- காதல் தோல்வி – இது சில இளைஞர்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.
- அலுவலக பிரச்சனை, வெளிநாட்டில் தனியாக வேலை பார்ப்பதால் தன் கூட எவரும் இல்லை என்கிற மன அழுத்தம்,
என்றோ சிறு வயதில் நடந்த கொடுமையான விடயத்தால் ஏற்பட்ட தாக்கம், தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் இருத்தல் , தனக்கு நெருக்கமானவரின் உயிர் இழப்பு என்று நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.
இதில் எல்லார்க்கும் அவரவர் பிரச்சனை பெரிதாக உள்ளது. ஆம், நிச்சயம் பெரிதுதான்.
இந்த மாதிரி பல பேர் பல பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள். சில பேர் அந்த பிரச்சனைகள் அறிந்து கொண்டு, அதற்கான தீர்வு என்ன என்று கண்டுபிடித்து அதில் இருந்து வர முயற்சி செய்கிறார்கள்.
இன்னும் சில பேர் அதற்கான தீர்வு தெரிந்தாலும், மன அழுத்தத்தில் அதிகமாக சிக்கி பிணைக்கப்பட்டதால், அதில் இருந்து வெளியே வர தெரியாமல் தன்னை தானே வருத்திக்கொண்டும், அழுதுகொண்டும் தன் வாழ்க்கையை தொலைத்து தவித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த மாதிரி தவிப்பவர்களுக்கு தான் மற்றவர்களுடைய உதவி மிக அவசியமாக தேவைப்படுகிறது. அப்பொழுது அவர்கள் தன் நண்பர்களிடம் அல்லது தெரிந்தவர்களிடம் தனக்கான பிரச்சனையை சொல்ல நினைத்தால் நாம் அவர்களை ஒதுக்கி வைத்து விடுகிறோம். இன்னும் சிலர் அவர்களுடய பிரச்சனையை கண்டு ஏளனமாக நினைத்து அவர்களை அசிங்கப்படுத்துகிறோம்.
இவ்வாறு இருக்கையில் மன அழுத்ததில் தவிப்பவர்கள், எவரிடம் சொல்வது என்று தெரியாமல் தனக்குள் வைத்து தவித்து கொள்வதோடு, சிலர் தற்கொலை செய்வார்கள், இன்னும் சிலர் மனநோயாளி ஆகிவிடுகிறார்கள்.
மன அழுத்ததில் தவிப்பவர்களுக்கு, ஒன்றே ஒன்று தான் தேவை. நம் பிரச்சனைகளை யாரிடமாவது கூறி அதில் இருந்து தப்பித்து வெளி வரவேண்டும் என்பது தான். ஆகையால் உங்களுக்கு தெரிந்தவர்கள், இப்படி தவித்து கொண்டு இருந்தால், நீங்கள் அவர்களுக்கு காசு பணம் கொடுக்க வேண்டாம் , அவர்களுக்கு உங்கள் நேரத்தை மட்டும் தாருங்கள். அதுவே உங்கள் நண்பர்களுக்கு போதுமானதாக இருக்கும்.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது “Accept and Go”. வாழ்வில் நமக்கு எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். அது அப்படியே ஏற்றுக்கொண்டு, அதற்கான தீர்வு இருந்தால் நல்லது இல்லையென்றால் அதை குறித்து கவலை கொள்ள அவசியம் இல்லை. நானும் இந்த “Accept and Go” என்ற விடயத்தை ஏற்றுக்கொண்டு வாழ முயற்சி செய்கிறேன். இதுவே மன அழுத்ததில் இருந்து வெளி வர சிறந்த வழி.
– விக்னேசுவரி இராமசாமி, (சுந்தம்பட்டி)
(2051 ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)
பட உதவி: https://unsplash.com/@noahsilliman