Home>>இந்தியா>>விஞ்ஞானிகளுக்கு ஒரு வேண்டுகோள்..!
இந்தியாமருத்துவம்

விஞ்ஞானிகளுக்கு ஒரு வேண்டுகோள்..!

நலம், நலமறிய ஆவல். நிலவில் தடம் பதிக்க தகுதியுடைய ஒரு சில நாடுகளின் பட்டியலில், விஞ்ஞான வளர்ச்சியால் இந்தியாவும் தன்னை இணைத்துக் கொண்டது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்குறிய சாத்தியக் கூறுகளை அலசி ஆராய தொடங்கியாயிற்று. கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் என எண்ணற்ற துறைகளில் பல எல்லைகளை கடந்து சென்று கொண்டிருக்கின்றோம்.

பல துறைகளில், பல கோணங்களில் வளர்ச்சியை எட்டிக் கொண்டிருக்கும் பொழுதும், பல நுட்பமான அறிவுகளை கற்றுத் தேர்ந்த பொழுதும், உடனிருக்கும் சக மனிதர்களின் மனதின் ஆழத்தை மட்டும் இன்று வரை அறிய முடியவில்லை. ஜூலியஸ் சீசர் முதல் வீரபாண்டிய கட்டபொம்மன் வரை இன, மொழி பாகுபாடின்றி, கால வரையின்றி வஞ்சகத்தால் வீழ்ந்த வரலாறுகள் பல உண்டு.

அடி வயிற்றில் தழல் கொதிக்க, நாவால் குளிர்ச்சியாக உரையாடும் பல நய வஞ்சகர்கள் சூழ்ந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக, வன்மம் செய்யும் உறவுகள் கிடைக்கவில்லை எனினும், ஒருவருக்கொருவர் உதவக் கூடிய நிலை இல்லாமல் போனது வருத்தமே.

உற்றார் உறவினரின் உதவியை எதிர்பாராமல், சுயமாக உழைத்து முன்னேறி, ஓர் நிலையை எட்டுவதற்குள் உடனிருக்கும் ஒருவன் புற முதுகில் குத்துகிறான்; அவனிடமிருந்து மீண்டு மறு முறை எழுவதற்குள், மற்றொருவன், வேறொருவன் என இங்கே துரோகங்களின் பட்டியல் நீள்கிறது.

காலச் சக்கரம் சுழல, வஞ்சனைகளை கடந்து, அனுபவ வெள்ளத்தில் நீந்தி கரையேறிய சிலர் கொள்ளும் வெற்றியின் பெருமிதம், ஏனையோர்களுக்கு கர்வமாக தெரிகின்றது. அதனை கர்வமாக நினைத்து பொறாமை கொள்ளும் அவர்களுக்கும் சேர்த்து தான் இங்கே ஓர் வேண்டுகோளை வைக்கின்றேன்.

சீன பொருட்களை புறக்கணிக்க போர் கொடி தூக்கினால், இங்கே ஒருவர் கூட அலைபேசி வைத்திருக்க முடியாது. மொபைல் போன்களின் மூலாதாரமான ‘சிப்’களை உருவாக்கும் இயந்திரம் ஒன்று கூட இந்தியாவில் இல்லை என தரவுகள் கூறுகின்றன.

சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் தொழில் துறையில் எவ்வளவோ முன்னேறிக் கொண்டிருக்கையில், மற்றவர்களுக்கு தீங்கு செய்வதற்காக பில்லி, சூனியம், ஏவல் என செய்வினைகள் குறித்து ஆராய்ந்து கொண்டுள்ளது எங்கள் நாடு. சூழ்ச்சிகளால் ஆங்காங்கே சரியும் ஒவ்வொரு குடும்பமும் காப்பாற்றப்பட்டிருக்குமேயானால், இச்சமூகம் நிச்சயமாக 10 வருடங்கள் முன்னோக்கி சென்றிருக்கும்.

யார் பொறாமை கொண்டவர், யார் உண்மையான அன்பு கொண்டவர் என்று பகுத்தறிய முடியாமல் போகவே, ஒற்றுமை குழைந்து, கூட்டு முயற்சிகள் பல தொலைந்து போய்விட்டன. உடல் வெப்பத்தை கணக்கிடும் வெப்பமானிகள் எவ்வளவோ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. இந்த சமூகத்தை முன்னேற்ற விரும்பினால், மற்றவர் வயிற்றில் எரியும் வெப்பத்தை கணக்கிட ஒரேயொரு வெப்பமானியை கண்டுபிடித்து தாருங்கள்; இதன் பயனாக ஒட்டு மொத்த சமூகமும் முன்னேற்றமடையும்.


இப்படிக்கு,
உங்கள் கண்டுபிடிப்பிற்காக,
காத்திருக்கும் குடிமகன்.
– விஜயவர்மன்
மன்னார்குடி

(2051 ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)
படஉதவி: https://unsplash.com/@halacious

Leave a Reply