– சதிஷ் குமார், மன்னார்குடி
(2048 ஆவணி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)
1991-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 84 கோடி. இன்றைய தேதியில் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 127 கோடி. கடந்த இருபத்திரண்டு வருடங்களில் இந்திய மக்கள் தொகை சுமார் 50% சதவீத வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இதே காலகட்டத்தில் பயிர் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்திருப்பது மத்திய திட்ட கமிஷனின் அங்கமான ‘பயன்பாட்டு மனித வள ஆராய்ச்சி மையத்தின் (Institute of Applied Manpower research) ஆய்வில் தெரிய வந்துள்ளது.
1991-ம் ஆண்டு துவங்கி 2012 வரையிலான கால அளவில் சுமார் ஒன்றரை கோடி விவசாயிகள் ‘இல்லாமல்’ போயுள்ளனர். கடந்த பதினோரு ஆண்டுகளில் மட்டும் சுமார் 77 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு ‘காணாமல்’ போயுள்ளனர். திட்ட கமிஷனின் இந்த அறிக்கை, விவசாயம் சாராத துறைகள் உள்ளிட்டு, பொதுவாகவே புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்காத வளர்ச்சி தொடர்ந்து நீடித்து வருவதை சுட்டிக் காட்டியுள்ளது. முன்பு விவசாயத்தில் ஈடுபட்டிருந்தோர் பலரும் தற்போது பல்வேறு சேவைத் துறைகளுக்கும், விவசாயக் கூலிகளாகவும் இடம் பெயர்ந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
1981-லிருந்து 1991 வரையிலான கால கட்டத்தில் விவசாயிகளின் (பயிர்த் தொழிலில் நேரடியாக ஈடுபடுவோர்) எண்ணிக்கை 9.2 கோடியிலிருந்து 11 கோடியாக உயர்ந்துள்ளது. உலகமயமாக்கல் அமுல் படுத்தப்பட்டதற்கு பிந்தைய காலங்களில் தான் விவசாயிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த இருபத்திரண்டு வருட காலகட்டத்தில் நாளொன்றிற்கு சுமார் 2,035 விவசாயிகள் ‘காணாமல்’ போயுள்ளனர் என்பது தான் அரசின் இந்த அறிக்கையில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது. இன்றைய நிலையில், கடந்து செல்லும் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 85 இந்தியர்கள் விவசாயத்திலிருந்து விலகிச் சென்ற வண்ணம் உள்ளனர். ஆக, இன்றைய தேதியில் மொத்த மக்கள் தொகையில் பயிர் தொழிலில் எட்டு சதவீதத்திற்கும் குறைவானவர்களே ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், அரசு வேறு ஒரு மோசடியான புள்ளிவிவரக் கணக்கை முன்வைக்கிறது. அதாவது, விவசாயத்தில் நேரடியான பயிர் தொழிலில் இல்லாமல், அதைச் சார்ந்த கூலி வேலைகள், கால் நடைகள் வளர்ப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளோரையும் சேர்த்து மொத்த மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் விவசாயத்தில் இருப்பதாகச் சொல்கிறது. இவ்வாறு சொல்வதன் மூலம், கடந்த இருபதாண்டுகளில் நடந்துள்ள 2,70,940 விவசாயிகள் தற்கொலைகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துள்ளது.
விவசாயிகள் தற்கொலை என்பதை எவ்வாறு முடிவு செய்கிறார்கள்?
குறைந்தபட்சம் நிலம் வைத்து நேரடியான பயிர் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் தற்கொலைகளை மட்டுமே விவசாய தற்கொலைகள் என்று மாநில குற்றப்பதிவு ஆணையம் கணக்குக் காட்டுகிறது. விவசாய கூலிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் தற்கொலைகளை கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. அரசு தரும் கணக்கின் படியே கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 62 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் – இதனை மொத்த மக்கள் தொகையில் உள்ள விவசாயிகளின் சதவீதம் எட்டுக்கும் குறைவானது என்கிற திட்ட கமிஷன் அறிக்கையோடு பொருத்திப் பார்த்தால் நாம் எதிர் கொண்டிருக்கும் அபாயத்தின் பரிமாணத்தை புரிந்து கொள்ள முடியும். நாடு ஒரு பெரும் நெருக்கடியை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டேயிருக்கிறது.
விவசாயத்தில் அழிவு என்பது கொஞ்சம் நஞ்சம் இருக்கும் இறையாண்மையை முற்றாக இழக்கும் நிலைக்கு நம்மை தள்ளி விடும். இன்றைய தேதியில் மொத்த மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் ஊரகப் பகுதியில் வசிக்கிறார்கள் என்கிறது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. எனில், விவசாயத் துறையின் வீழ்ச்சியென்பது 72 சதவீதம் மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கக் கூடியது. இந்நிலையில் தான் ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்களிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.
விவசாயத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 90-களின் துவக்கத்தில் 13 சதவீதமாக இருந்தது – தற்போது அது சுமார் 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
சேவைத்துறை
உலகமய தாசர்களுக்கோ இது குதூகலத்தின் காலமாய் இருக்கிறது. நாட்டின் நுகர்பொருள் கலாச்சாரம் அதிகரித்திருப்பது, ஒரு சிறு பிரிவினருக்கு சேவைத் துறையில் வளமான வேலைகள் கிட்டியிருப்பது, ஒரு புதிய மேல் நடுத்தர வர்க்கம் உதித்தெழுந்திருப்பது, நவீன மின்னணுப் பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களின் சந்தை விரிவடைந்திருப்பது மற்றும் இவற்றின் பயன்பாடு அதிகரித்திருப்பது உள்ளிட்டவைகளைச் சுட்டிக்காட்டும் இவர்கள், புதிய பொருளாதாரக் கொள்கைகளை விதந்தோதுகிறார்கள்.
இவ்வாறாக கொண்டாடப்படும் புதிய பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் சுயேச்சையான பொருளாதாரக் கட்டமைப்பை சிதைத்துள்ளதோடு இதைப் பன்னாட்டு மூலதனத்தோடு நேரடியாக பிணைத்துள்ளது. தற்போது உலகளவில் முதலாளித்துவம் ஒரு கட்டமைப்பு நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில் அதன் பாதிப்புகளை இந்தியாவும் எதிர்கொண்டு நிற்கிறது. தற்போது ஆலைத் தொழில்துறையில் 2004-2007 காலகட்டத்தில் இருந்த 14 சதவீத கார்ப்பரேட் முதலீடு தற்போது 10 சதவீதமாக குறைந்துள்ளது என்கிறது வளர்ச்சி, இணக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கான முதலாளிகள் சங்கம் (P.H.D Chambers). தொழில்துறை வளர்ச்சி என்பது அனேகமாக பூஜ்ஜியத்தை அடைந்து விட்டது என்று கண்ணீர் வடிக்கிறது அச்சங்கம்.
சேவைத் துறையில் பெரும் பங்காற்றும் ஐ.டி துறையோ தற்போது அமெரிக்காவின் தள்ளாட்டத்திற்கு தக்கவாறு ஆடிக் கொண்டிருக்கிறது. தொழில்துறையின் வளர்ச்சியும் தேக்கமடைந்து விட்டது. இச்சூழலில் விவசாயத்தின் அழிவும் அதைத் தொடர்ந்து கிராமப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் ஊரகப் பகுதிகளில் இருந்து விசிறியடிக்கப்பட்டு நகரங்களில் அத்துக் கூலிகளாய்க் குவிந்துள்ள மக்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. மீண்டும் கிராமத்துக்கே சென்று விவசாயத்தை மீளவும் துவங்குவது சாத்தியமற்றதாகி விட்ட நிலையில், நகர்ப்புறங்களின் சேரிகளிலும் நடைபாதைகளிலும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாயத்தின் அழிவு தேசத்தை உணவுப் பொருள் உற்பத்தியில் பற்றாக்குறையையும் அதைத் தொடர்ந்த பஞ்சத்தையும் நோக்கி மெல்ல மெல்ல இழுத்துச் செல்கிறது. விவசாயத்திற்கும் உள்நாட்டுத் தொழில்துறைக்கும் துரோகமிழைத்து நாட்டை மீண்டும் அடிமையாக்கத் துடிக்கும் காரணிகளை உடனடியாக வீழ்த்தாவிட்டால் ஒட்டுமொத்தமாக ஒரு பெரும் அழிவை இந்நாடு சந்திக்க வேண்டியிருக்கும்.